ஒரே நாடு
← கட்டுரைகள்

இந்தியாவை ஒன்றிணைத்த சர்தார் படேலும் பிரதமர் மோடி அளித்த வரலாற்று மரியாதையும்

எழுதியவர்

டால்பின் ஸ்ரீதரன்

31 அக்டோபர் 2026

மாநில துணைத் தலைவர், பாஜக தமிழ்நாடு

டால்பின் ஸ்ரீதரன் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

ஒற்றுமையின் சிலை முன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்ஒற்றுமையின் சிலை முன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நமது நாடு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது. அந்தச் சமஸ்தானங்கள் அனைத்தும் தனித்தனி நாடுகளாக மாறினால் இந்தியாவின் ஒற்றுமை சிதைந்துவிடும் என்ற அபாயம் இருந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் படேல், தனது சிறந்த ராஜதந்திரத்தாலும் உறுதியான நடவடிக்கையாலும் அனைத்து சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணைத்தார். ஜூனாகத், ஹைதராபாத் போன்ற சமஸ்தானங்கள் இணையத் தயங்கியபோது, சரியான நேரத்தில் உறுதியான முடிவுகளை எடுத்து அவற்றை இந்தியாவின் அங்கமாக மாற்றினார். இன்று நாம் காணும் ஒருங்கிணைந்த இந்தியாவின் வரைபடத்திற்கு முக்கியக் காரணம் சர்தார் படேலின் அயராத உழைப்பாகும்.

இந்தியாவின் முதல் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரலாறு மிகவும் முக்கியமானது. 1946 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தக் காலத்தில் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரே இடைக்கால அரசின் தலைவராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகவும் பொறுப்பேற்பார் என்ற நிலை இருந்தது. அந்தத் தேர்தலில் மொத்தம் இருந்த பதினைந்து பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளில் பன்னிரண்டு கமிட்டிகள் சர்தார் வல்லபாய் படேலின் பெயரைப் பரிந்துரைத்தன. மீதமுள்ள மூன்று கமிட்டிகள் யாரையும் பரிந்துரைக்கவில்லை. ஜவஹர்லால் நேருவை எந்தவொரு கமிட்டியும் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கவில்லை. பெரும்பான்மையான மாநில கமிட்டிகளின் ஆதரவு படேலுக்கே இருந்தது.

இருப்பினும், மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு பிரதமராக வர வேண்டும் என்று விரும்பினார். மேலும் நேரு இரண்டாம் இடத்தில் இருக்க சம்மதிக்க மாட்டார் எனவும், இருவரின் கூட்டுத் தலைமை நாட்டிற்கு அவசியம் எனவும் காந்தி நினைத்தார். காந்தியின் விருப்பத்திற்கு மதிப்பளித்த சர்தார் படேல், எந்தவொரு தயக்கமும் இன்றித் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதனால் ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் இந்தியாவின் முதல் பிரதமராகவும் பொறுப்பேற்றார். பெரும்பான்மை ஆதரவு இருந்தபோதிலும் படேலுக்கு பிரதமர் பதவி கிடைக்காமல் போன இந்த நிகழ்வே காங்கிரசின் வாக்கு திருட்டுக்கு ஒரு சான்று!

காலங்கள் கடந்த நிலையில், சர்தார் படேலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை உலகறியச் செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் கரையில் அவருக்குப் பிரம்மாண்டமான சிலையை நிறுவினார். ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் இந்தச் சிலை நூற்று எண்பத்திரண்டு மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான சிலையாகும். சர்தார் படேல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவராக இருந்தபோதிலும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து இரும்பு மற்றும் மண் சேகரிக்கப்பட்டு இந்தச் சிலை கட்டப்பட்டது. படேல் பிறந்த நாளான அக்டோபர் முப்பத்தி ஒன்றாம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை ஒன்றிணைத்த சர்தார் படேலின் தியாகமும் உழைப்பும் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

இன்று அக்டோபர் முப்பத்தி ஒன்றாம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளாகும். இந்த நன்னாளில் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பதவிகளை விட நாட்டின் நலனும் ஒற்றுமையுமே முக்கியம் என்று வாழ்ந்த சர்தார் படேலின் தியாகத்தை நாம் அனைவரும் இன்று நினைவு கூர்வோம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவை ஒரே நாடாக இணைத்த அந்த இரும்பு மனிதரின் புகழும், நர்மதைக் கரையில் வானுயர்ந்து நிற்கும் அவரது ஒற்றுமையின் சிலையும் இந்திய மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். சர்தார் படேல் காட்டிய ஒற்றுமை வழியில் நாமும் நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுவோம் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்.