ஒரே நாடு
← கட்டுரைகள்

இயக்கதிற்காகவே இயங்கியவர் ராமகோபாலன்!

எழுதியவர்

Oreynaadu Desk

15 அக்டோபர் 2026

இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலன் — கோப்புப் படம்இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலன் — கோப்புப் படம்

ஒரு மனிதன் தனக்காக வாழாமல் சமுதாயத்திற்காகவே வாழ்வது என்பதே அரிது. அதிலும் அந்த லட்சியத்திற்காகவே தனது கடைசி மூச்சு வரை நம்முடன் வாழ்ந்தார் என்பது நாம் செய்த புண்ணியம் .

அந்த புண்ணியத்தை நமக்கெல்லாம் அளித்தவர் நம்ம இராம. கோபாலன் அவர்கள் தான். இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரான அவர், தமிழகத்தில் இந்து சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காக அரும்பாடு பட்டவர். ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர் மக்களையே திரட்டி இந்துக்களுக்காக போராட வைத்தவர்.

இந்த ஆண்டு வீரத்துறவி இராம கோபாலன் அவர்களின் நூற்றாண்டு..

1947ல் நமது பாரத நாடு இந்தியா- பாக்கிஸ்தான் என இரண்டாக பிரிக்கப்பட்ட போது இந்துக்கள் தனது சொந்த நாட்டிலேயே கொல்லப்பட்டும், அகதிகளாகவும் வாழ்ந்ததை நேரில் பார்த்து வேதனைப்பட்டு , தனது வாழ்வை தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் இராம கோபாலன் அவர்கள்.

93 வயது வாழ்ந்த அவர், 73 ஆண்டுகள் தேசத்திற்காகவும் இந்து சமுதாயத்திற்காகவும் தீர்க்க தரிசனத்துடன் துணிச்சலாக சேவையாற்றினார்.

ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக, கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, சொற்பொழிவாளராக மட்டுமல்லாமல் சிறந்த அமைப்பாளராகவும் செயல்பட்டு பல்துறை வித்தகராக விளங்கியவர்.

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று சளித்தொல்லையால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இராம கோபாலன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை கண்காணிக்கப்பட்டு நல்ல முன்னேற்றம் கண்டு வந்த போதிலும், விதி நம்மை ஏமாற்றி தமிழக்த்திற்கும் பாரத நாட்டிற்கும் பெரும் இழப்பைத் தந்து விட்ட து.

உயிரோடும் உணர்வோடும் இருந்த காலம் முழுவதிலும் தமிழகத்தில் இந்து எழுச்சியின், இந்து ஒற்றுமையின் முன்னோடியாகவே அவர் வாழ்ந்தார்.

உயிர் பிரியும் தருவாயிலும் கூட, அவர் அரசியல் விஐபியா, அவரைக் காண ஏகப்பட்ட பேர் வந்து செல்கிறார்களே என கேட்ட மருத்துவமனை நர்ஸிடம் அவர் சொன்ன பதில் இதுதான்:

“நான் வி.ஐ.பி. இல்லைம்மா, இந்து முன்னணி அமைப்பில் இருக்கேன். இந்து முன்னணி, இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு இயக்கம். எந்த ஒரு இந்துவும் மாற்று மதத்தினரால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்காக குரல் கொடுத்துப் போராடும் இயக்கம் தான் இந்து முன்னணி.”

பிற்பாடு அந்த நர்ஸ் வேதனைப்பட்டு சொன்னது ” இது தான் அவர் கடைசியாக பேசிய வார்த்தை. இதுவரையில் இந்து முன்னணி என்றால் என்னவென்றே அறியாத என்னைப் போன்றவர்களுக்கும் தன் இயக்கத்தைப் பற்றி புரிய வைத்து விட்டுத்தான் கண் மூடினார்!”

சுதந்திரப் போராட்ட காலத்தில் வீழ்ச்சியில் இருந்த பாரதத்தைப் பார்த்து வேதனையுற்று தேசிய வாழ்க்கையில் ஈடுபடத் துவங்கிய மனிதர். திராவிட மாயையில் சிக்கியிருந்த நாத்திக தமிழகத்தைப் பார்த்து மனம் கலங்கி… அதனை மீட்டெடுக்கவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தமிழகத்தில் ஆன்மிக ஒளியினைப் பாய்ச்சிய கோபால் ஜி, தான் இறப்பதற்கு முன் பாரத நாட்டை எழுச்சி பெற்ற நாடாகப் பார்த்து விட்டார் என்பது மட்டுமே ஒரே ஆறுதல்! அவரது கவிதை வார்த்தைகளிலேயே சொல்வதானால்…

உடற்கூட்டின் ஆவி பிரிந்திடும் முன்

இரு கண்களின் ஒளியும் மங்கிடும் முன்

வெற்றி வடிவமாய் பாரதமாகிட

லட்சிய கோயிலை எய்திடுவேன்…

என்று 60 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதியது நடந்தேறியது. நமக்கெல்லாம் அவரே ஒரு லட்சியக் கோயிலாகவும் மாறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்!