பொதுத்தேர்வு நடைமுறைகளில் மோடி அரசு படைத்த புதிய வரலாறு!
எழுதியவர்
Oreynaadu Desk
13 ஆகஸ்ட் 2026
பொதுத்தேர்வு சீர்திருத்தம் — பிரதமர் மோடி & தேர்வு மாணவர்கள்நம் நாட்டில் இவ்வாண்டு நீட் தேர்வின் நேர்மையும் நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட்ட அசம்பாவித சம்பவம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்தது. அந்த சூழலை பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு எப்படி கையாண்டது? நடந்து விட்ட தவறினை மக்களிடமிருந்து ஒளித்தோ மறைத்தோ வைக்கவில்லை. உடனடியாக தேர்வு நடைமுறைகளை முறைப்படுத்தினார்கள். பொதுத்தேர்வுகளை, அதன் மீதான நம்பிக்கைகளை சரி செய்யும் பொருட்டு சிறப்பான ஒரு மறுமலர்ச்சிப் பாதையினை தேர்ந்தெடுத்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் தொடங்கி விட்டார்கள். இந்த முன்னெடுப்பு ஒரு இனிய வரலாறு!
அடித்தளம் எப்போது?!
சொல்லப் போனால், பொதுத்தேர்வு நடைமுறைகளை சீர்படுத்தும் ஒரு சட்ட திட்டம் 2024ம் ஆண்டே மோடி அரசால் உருவாக்கப்பட்டு விட்டது. இது தான் முதல் பிள்ளையார் சுழி.
பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டம் (Public Examinations (Prevention of Unfair Means) Act) 2024 பிப்ரவரி மாதத்தில் இயற்றப்பட்டு, 2024 ஜூன் 21 முதல் அமலுக்கு வந்தது. சட்டம் அமலுக்கு வந்த அடுத்த நாளே டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த 101 ஆலோசனைகளில் 57 வரை செயல்படுத்தப்பட்டு விட்டது.
மறு தேர்வு அறிவிப்பு!
தேர்வு எழுதும் மாணவர்கள்
மே 3, 2026ல் நடைபெற்ற நீட் தேர்வில், முன்கூட்டி வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் வெளிப்பட்டதுமே அத்தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த தேர்வு எப்போது எவ்விதம் நடைபெறுமோ என அச்சத்தில் இருந்த மாணவர்களுக்கு நல்ல செய்தியாக மறுதேர்வு அடுத்த மாதமே நடைபெறும் என அறிவித்தது மோடி அரசு. அது மட்டுமின்றி, மே மாதத் தேர்வுக்காக செலுத்தப்பட்ட தேர்வுக்கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்றும், மறுதேர்வுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
சிபிஐ கிடுக்கிப்பிடி!
தேர்வு ரத்து செய்யப்பட்ட அதே தினத்தில், குற்ற வழக்கு விசாரணை நாட்டின் உயரிய புலன்விசாரணை மையமான சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பு விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு குற்றவியல் வலையமைப்பு இறுகியது. குற்றவாளிகள் கடும் விசாரணை வளையத்திற்குள் சிக்கினர். இதையொட்டி வினாத்தாளின் மூலத்தை கண்டறிவதிலிருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலை வரை சிபிஐ விசாரணை விறுவிறுவென முன்னேறியது. மே 27 ஆம் தேதிக்குள், 49 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, குற்றத்தில் ஈடுபட்டதாக 13 நபர்களை கைது செய்தது. வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல் வினாத்தாள்களின் கசிவுக்கான மூலச்சங்கிலியை வெகு வேகமாகவும் வெற்றிகரமாகவும் கண்டறிந்தது சிபிஐ.
மறு தேர்வு ஏற்பாடுகளும், மகிழ்ச்சியும்!
சிபிஐ தலைமையகம், புது தில்லி
இதற்கிடையே நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் முறையாகவும் முழுமையாகவும் செய்யப்பட்டன.
22 லட்சத்திற்கும் அதிகமாக நீட் தேர்வு எழுத ஏற்கனவே பதிவு செய்திருந்த மாணவர்களுக்காக நாடு முழுவதும் ஜூன் மாதமே மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த மறுதேர்வுக்காக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மறுதேர்வு பாதுகாப்பான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, 1,38,560 CCTV கேமராக்கள் மற்றும் 51,311 ஜாமர்கள் (Jammers) தேர்வு மையங்களில் பொருத்தப்பட்டன. வினாத்தாள் போக்குவரத்து, அதற்கான வாகனங்களில் அமைக்கப்பட்டிருந்த GPS மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
மிகுந்த பாதுகாப்புடன் ஜூன் 21 அன்று நடத்தப்பட்ட இந்த மறுதேர்வு உச்சபட்ச ஜனநாயக செயலாக பார்க்கப்பட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதை விட பெருத்த மகிழ்ச்சியாக ஒரு மாத காலத்திற்குள்ளாக மறுதேர்வின் முடிவுகளை ஜூலை 16 அன்றே வெளியிட்டு, நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பால் வார்த்தது மோடி அரசு.
மேலும், அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வு முழுமையாக கணினி வழித்தேர்வு எனும் Computer-Based Test (CBT) முறைக்கு மாற்றப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தார்.
பிரதமர் ஆற்றிய பெரும்பங்கு!
கணினி வழித் தேர்வு மையம் (CBT)
நீட் தேர்வின் நம்பகத்தன்மைக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்ட தருணத்தில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த செயற்கரிய செயல்கள் அனைவரையும் வியக்க வைக்கும். இது குறித்து Gen Z தலைமுறையினருக்காக அவர் தொடர்ந்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் காணொளிகள் உலக சாதனை எனும் அளவில் பெரும் வரவேற்பையும் பெற்றது. செய்தித்தகவல்களின் படி, வினாத்தாள் கசிவுக்கு எதிரான பிரதமரின் இன்ஸ்டா காணொளி 24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகளை பெற்றது.
மாணவர்களும், பெற்றோரும், மற்றோரும் தனது இன்ஸ்டா பக்கங்களில் வழங்கிய ஆலோசனைப் பதிவுகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மற்றொரு சிறப்புக்காணொளியையும் பிரதமர் வெளியிட்டார்.
புதிய சட்டம் தரும் நிரந்தர நிம்மதி!
வினாத்தாள் கசிவுக்கு எதிரான பிரதமரின் இன்ஸ்டாகிராம் காணொளி — 24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள்
மோடி அரசின் நடவடிக்கைகளில் மிக முக்கியமான அம்சம், வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சிறப்பு மசோதாவையும் சட்டமாக்கியது. இந்த நடவடிக்கை ஒரு தேர்வை ரத்து செய்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அரசின் மிக முக்கியமான, இனி காலம் முழுவதும் பயன் தரக்கூடிய ஒரு நீண்டகால நடவடிக்கை சட்டரீதியில் கொண்டு வரப்பட்டது.
ஆம். தனிப்பட்ட முறையில் பொதுத்தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் (5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அதிகபட்சம் ₹50 லட்சம் அபராதம். குழுவாக குற்றத்தில் ஈடுபட்டால் இன்னமும் அதிகம்) விதிக்கப்படவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவ்வழக்குகள் விசாரிக்கப்படவும், நாடு முழுவதும் இதற்கென விரைவு நீதிமன்ற அமைப்பை உருவாக்கவும் புதியதொரு சட்டத்தினை வெறும் நான்கே நாட்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது, மோடி அரசு.
இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. காரணம், நாடு முழுவதும் வலுவானதொரு பாதுகாப்பு அமைப்பை இந்த சட்டம் பொதுத்தேர்வுகளுக்கு கொண்டு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை விடவும் சிறப்பானதொரு ஹைலைட் இச்சம்பவத்தில் உண்டு. விசாரணைகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து பொதுத்தேர்வு குற்றங்களுக்காக தனிப்பட்ட நீதிமன்ற நடைமுறையை உருவாக்கியதோடு மாத்திரம் மோடி அரசு நின்று விடவில்லை.
புதிய நிபுணர்கள் குழு
கடந்த ஜூலை மாத இறுதியில், பொதுத்தேர்வு நடைமுறைகளை தீர்மானிக்கும் நிபுணர்கள் குழுவிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணைநிறுவனரான நந்தன் நீலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டு, நாட்டின் வெவ்வேறு தளங்களில் புகழ் பெற்று விளங்கும் தலைசிறந்த அறிஞர்கள் இக்குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். சென்னை ஐஐடி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி உட்பட ஏழு நிபுணர்களோடு இக்குழு புதிய வடிவமைப்பினை பெறுகிறது.
தவிர, ஜூலை 28 அன்று, 360 சாட்சிகள், 422 ஆவணங்கள் மற்றும் 43 முக்கிய ஆதாரப் பொருட்களின் அடிப்படையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கும் எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. வெகு விரைவில் இவ்வழக்கில் நீதி கிடைக்கப் போவதும் குற்றவாளிகள் தண்டனை அடைவதும் உறுதி.
தேர்வு சீர்திருத்த உயர்மட்டக் குழு: நந்தன் நீலேகனி (தலைவர்), எஸ். சோமநாத், தபன் டேகா, வி. காமகோடி, அனிதா கர்வால், அம்ரித் லால் மீனா
ஆக மொத்தத்தில், நாட்டு மக்களின் நலன் ஒன்றே முக்கியம் என நாள்தோறும் கண் துஞ்சாது செயல்படும் நம் பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் Gen Z தலைமுறையினருக்காக புதியதொரு தேர்வுப் பாதையினையே வடிவமைத்து பிரம்மாண்ட வரலாறு படைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.