அராஜகத்தைத் தூண்டும் அரசியல்!
எழுதியவர்
Oreynaadu Desk
21 அக்டோபர் 2026
இடது: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி; வலது: டெல்லியில் போராட்டக்காரர்கள் — கோப்புப் படம்— பெண் பத்திரிகையாளர்களும், பெண் காவலர்களும் காங்கிரசின் இலக்கு.
அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கப் போகிறோம் என்று மேடைக்கு மேடை முழங்கும் காங்கிரஸ் கட்சியும், சிஜேபி எனப்படும் காக்ரோச் ஜனதா கட்சி போன்ற இடதுசாரி ஆதரவு அமைப்புகளும், அக்டோபர் 2026-ல் டெல்லியில் நடத்திய போராட்டங்கள் அவர்களின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டன . வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், ஜனநாயக வழிமுறையைக் கைவிட்டு, வன்முறையையும் மிரட்டலையும் கையில் எடுத்துள்ளனர். ஊடகங்கள், காவல்துறை, ஏன் உச்ச நீதிமன்றம் வரை தங்கள் அரசியலுக்குத் தலையாட்டாத அனைத்து நிறுவனங்களையும் இவர்கள் குறிவைத்துத் தாக்குகின்றனர்.
ஊடக சுதந்திரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச இவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. சிஜேபி நடத்திய போராட்டத்தில், அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டதற்காகவும், 'வந்தே மாதரம்' என்று முழங்கியதற்காகவும் ஒரு பெண் பத்திரிகையாளர் அநியாயமாக சூழப்பட்டு, அநாகரிகமாகத் திட்டப்பட்டு, அவர் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடிக்கப்பட்டது. அதேபோல், இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போரா, தன் முன்னே மாற்றுக் கருத்து கொண்ட பெண் பத்திரிகையாளர் ருச்சி திவாரியைத் தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஊர்வலம் இழுத்துச் செல்லத் தூண்டிய சம்பவம் இவர்களின் வக்கிரமான மனநிலைக்கான சான்றாக விளங்கியது..
மறுபுறம், உச்ச நீதிமன்றம் நோக்கி நடந்த பேரணியில், மூன்று மாத கர்ப்பிணியான பெண் பத்திரிகையாளர் ரிச்சா பராஷர், ராகுல் காந்தி மற்றும் அவரது பாதுகாவலர்களாலேயே தள்ளப்பட்டு படிக்கட்டுகளில் விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ இதை வெறும் 'நாடகம்' எனக் கூறி எள்ளி நகையாடினர்.
இவர்களின் அடுத்த இலக்கு டெல்லி காவல்துறை. போராட்டத் தடுப்புகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியுமே மிகத் தவறாக நடந்து கொண்டனர். பிரியங்கா காந்தி பெண் காவலரை முழங்கையால் இடித்துத் தள்ளுவதும், ராகுல் காந்தி பெண் காவல் அதிகாரியைப் பிடித்துத் தள்ளுவதுமான வீடியோக்கள் அவர்களின் அராஜகப் போக்கிற்கான பிராதான சாட்சியாக உள்ளன. மேலும், தனது கடமையைச் செய்த பட்டியலினத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆணையர் விவேக் பகத் மீது, சிஜேபி ஆதரவாளர்கள் சாதிய வன்மத்தைக் கக்கியதோடு, போலி ஏஐ புகைப்படங்களைப் பரப்பி அவர் மீதே பொய்யான பாலியல் பழியைச் சுமத்த முயன்றது உச்சகட்ட அநாகரிகம்.
இவை அனைத்திற்கும் மேலாக, உச்ச நீதிமன்றத்தையே மிரட்டும் தொனியில் கேரளா காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு அமைந்தது. ராகுல் காந்தியை தனியாகச் சந்திக்க மறுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அவர்களை மரியாதைக் குறைவாகப் பெயரிட்டு அழைத்த கேரளா காங்கிரஸ், "உடனே ராஜினாமா செய்யுங்கள், உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை நாங்கள் நியமித்துக் கொள்கிறோம்" என்று பகிரங்கமாக மிரட்டியது. வெகுவான கண்டனங்கள் எழுந்ததும் சமூக வலைதளப் பொறுப்பாளர் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்த்தது கேரள காங்கிரஸின் கோழைத்தனத்தையே காட்டுகிறது.
பெண் பத்திரிகையாளர்களைத் தாக்குவது, பெண் காவலர்களைத் தள்ளிவிடுவது, தலைமை நீதிபதியையே மாற்றுவோம் என மிரட்டுவது என காங்கிரஸ் மற்றும் சிஜேபி கூட்டணியின் செயல்பாடுகள் ஒரு ஆபத்தான போக்கையே காட்டுகின்றன.
தங்களுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே ஜனநாயக நிறுவனங்களை மதிப்போம், இல்லையேல் அவற்றை அழிப்போம் என்பதே இவர்களின் உண்மையான அரசியலாக உள்ளது. இது நாட்டிற்கு மிக மிக ஆபத்தான ஒரு செயல்முறை…ஆனால் பாஜக இதனை ஒரு போதும் சகிக்காது.