ஒரு குறுஞ்செய்தி, ஒரு முடிவு, ஒரு அரசு நிர்வாகத்தின் வேகம் = வெற்றி!
எழுதியவர்
Oreynaadu Desk
15 செப்டம்பர் 2026
டாடா நானோ காரிலிருந்து கையசைக்கும் அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி — கோப்புப் படம்பாரதிய ஜனதா ஆட்சியில் நம் பாரத தேசம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நம் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக குஜராத் முதலமைச்சராக நிர்வாகப் பொறுப்பை ஏற்றதிலிருந்து இன்று 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவரை ஒரு சிறந்த நிர்வாகியாக வடிவமைத்த சில புகழ்மிக்க தருணங்களை இக்கட்டுரையில் நினைவுகூர விரும்புகிறோம்.
இந்த நிகழ்வுகள் சில உரைகளிலிருந்தோ, அரசியல் பிரச்சாரங்களிலிருந்தோ உருவானவை அல்ல. நெருக்கடியான தருணங்களில் அவை உருவாயின. அப்போது விரைவாக முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது; ஒரு அரசு தன்னால் இடர்மிக்க தருணத்தைத் தாண்டியும் வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது.
அது 2008ஆம் ஆண்டு.
நம் நாட்டில் மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவின் கனவுத் திட்டமான டாடா நானோ கார் திட்டம், மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் கடுமையான சிக்கலில் சிக்கியது. சில குழுவினரின் போராட்டங்கள், அரசியல் எதிர்ப்பு, நிலம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் போன்றவை திட்டத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கின.
இறுதியாக, டாடா மோட்டார்ஸ் ஒரு கடினமான முடிவை எடுத்தது.
சிங்கூரை விட்டு வெளியேறுவது.
இது ஒரு சாதாரண இடமாற்றம் அல்ல. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் ஒரு முழுமையான வாகன உற்பத்திச் சூழலமைப்பு ஆகிய கனவுகள் இதில் பணயம் வைக்கப்பட்டிருந்தன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைத் தங்கள் மாநிலத்திற்கு அழைத்து வர பல மாநிலங்களும் போட்டி போட்டு விருப்பம் தெரிவித்தன.
அப்போது குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ரத்தன் டாடாவுக்கு ஒரு சுருக்கமான செய்தியை அனுப்பினார்:
“தங்களது டாடா நானோ திட்டத்தினை குஜராத்துக்கு வரவேற்கிறோம்.”
என்பதே அந்த வார்த்தைகள்! ஆனால், அதன் பின்னர் நடந்தவை அந்த வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.
மோடி தலைமையிலான குஜராத் அரசு அதிவேகமாகச் செயல்பட்டது. நிலம், நிர்வாக ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு ஆதரவு மற்றும் பிற தேவைகளை வழக்கத்திற்கு மாறாக, ஜெட் வேகத்தில் மேற்கொண்டது. டாடாவுக்கு குஜராத் புதிய இலக்காக உருவெடுத்தது.
2008 அக்டோபர் 7ஆம் தேதி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ கார் தொழிற்சாலையினை குஜராத்தின் சனந்தில் அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ரத்தன் டாடாவைப் பொறுத்தவரை, அவரது தேர்வுக்கான காரணம் தெளிவாக இருந்தது.
மற்ற மாநிலங்களும் ஆர்வம் காட்டியிருந்தன. என்றாலும், அரசு நிர்வாகத்தின் வேகம் மற்றும் உடனடி செயல்பாட்டுத் திறன் போன்றவற்றால் குஜராத் தனித்து விளங்கியது. பின்னர் அவர், அந்த மாநிலம் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் மரியாதையான, நட்பான சூழலையும், மோடியின் தீர்க்கமான நிர்வாக அணுகுமுறையையும் தனது நிறுவனத்திற்குச் சாதகமான அம்சங்களாகப் பார்த்தார்.
சுமார் 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சனந்த் தொழிற்சாலை மளமளவென வளர்ந்து, பின்னர் அது குஜராத்தில் உருவான மிகப் பெரிய வாகன உற்பத்திச் சூழலமைப்பின் ஒரு பகுதியாகவே மாறியது.
பல ஆண்டுகளுக்குப் பின்னரும், ரத்தன் டாடா குஜராத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாகப் பாராட்டி வந்தார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வைப்ரன்ட் குஜராத் உச்சி மாநாட்டில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அம்மாநிலத்தில் முதலீடு செய்வதில் நம்பிக்கை கொள்ளும் வகையிலான சூழலை நரேந்திர மோடி குஜராத்தில் சிறப்பாக உருவாக்கியதாக அவர் பாராட்டினார்.
குஜராத் சனந்த் நானோ தொழிற்சாலை உருவான நிகழ்வு ஒரு காரைப் பற்றிய கதை மட்டுமல்ல.
ஒரு முக்கிய தொழிலதிபர் நெருக்கடியை எதிர்கொண்டபோது, ஒரு மாநிலம் அதில் தனக்கான ஒரு வளர்ச்சி வாய்ப்பைக் கண்டு, அவரையும் கரை சேர்த்து, தன்னையும் வளர்த்துக் கொண்ட புத்திசாதுரியம் அது. அதுவும் தவிர, வாக்குறுதி அளிப்பது எளிது. அந்த வாக்குறுதியைச் செயலாக்கமாக மாற்றுவதுதான் தலைமைத்துவம். அதனால்தான் இந்த நிஜக் கதை இன்றும் தனித்து நிற்கிறது.
இந்தியாவின் பொது வாழ்க்கையில் நரேந்திர மோடியின் நீண்ட வெற்றிப் பயணத்தைப் பற்றிச் சிந்திக்கும் இத்தருணத்தில், டாடா–சனந்த் நிகழ்வு, பின்னாளில் அவரது நிர்வாகப் பாணியை வரையறுத்த அம்சங்களுக்கான அழகிய ஆரம்பம் எனலாம். எந்தவொரு விஷயமானாலும் தீர்க்கமான முடிவு, விரைவான செயல்பாடு மற்றும் செயலாக்கத்தை மையமாகக் கொண்ட நிர்வாகம் என்பதே மோடியின் தாரக மந்திரம் என்பதையே இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
அது மட்டுமல்ல… போட்டிகளுக்கு நடுவே வெற்றிக்கொடி நாட்டும் வித்தையை மோடி அவர்கள், தான் முதலமைச்சரான காலம் தொட்டே எப்படியெல்லாம் திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறார் என்பதும் இதன் மூலம் தெளிவாகப் புரிகிறது. இன்று வரை மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு, உலகின் தலைசிறந்த தலைவராக நம் பிரதமர் திகழ்வதற்கும் இந்த அருமையான தொடக்கமே அடிப்படை.