பிரதமர் மோடியின் வாழ்க்கை மக்கள் சேவைக்கான முழு அர்ப்பணிப்பு!
எழுதியவர்
Oreynaadu Desk
15 செப்டம்பர் 2026
மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் சிறுமியுடன் கைகுலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி — கோப்புப் படம்வரும் செப்டம்பர் 17… நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள். அன்று 76 வயதை நம் தலைவர் நிறைவு செய்கிறார். நாடு சுதந்திரம் அடைந்த போது, எங்கோ ஒரு இந்திய முனிசிபல் டவுனில், மிகவும் எளிமையானதொரு குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்து, 3 வயதை நிறைவு செய்திருந்த ஒரு குழந்தை, இன்று உலக அரங்கில் அதே பாரத நாட்டின் தலைவனாகக் கோலோச்சிக் கொண்டிருப்பது என்பது கிட்டத்தட்ட உலக அதிசயம்தான். அதிசயங்கள் எப்போதாவது ஒருமுறைதான் நிகழும் என்பதற்கொரு அருமையான சான்றே, மோடி எனும் அசாத்திய தலைவரின் அவதாரப் பிறப்பு. இன்று உலகமே அவரது பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடுகிறது.
ஒரு தலைவரின் பிறந்தநாள், அவரது பொது வாழ்க்கையை வழிநடத்தும் நோக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, அந்த நோக்கம் ‘சேவை’ எனும் உயரிய கருத்தில் அடங்கியுள்ளது. தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் தான் என்றென்றும் சேவை செய்யக் கடமைப்பட்டிருப்பதாக அந்த உன்னத மனிதர் உணர்கிறார். தலைமை என்பது சாதாரண குடிமக்களின் நம்பிக்கைகள், கண்ணியம் மற்றும் நலனுக்கான அன்றாடப் பொறுப்பு என்பதையே அவரது பயணம் நமக்கு உணர்த்துகிறது.
இளம் பிராயத்தில், குஜராத்தின் வட்நகரில் அவரது எளிமையான தொடக்க வாழ்க்கை, அப்பாவின் டீக்கடையில் உதவியாளராகத் தொடங்கியது. பின் பாரதிய ஜனதா கட்சியில் அமைப்பு ரீதியான பொறுப்புகளை ஏற்று, படிப்படியாக வளர்ந்து குஜராத் முதல்வராகி, அங்கிருந்து நாட்டிற்கே பிரதமராகி பாரத நாட்டை வழிநடத்திக் கொண்டிருப்பது வரையிலான அவரது வாழ்க்கை, பொதுப்பணியின் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்பின் எல்லைகள் படிப்படியாக விரிவடைந்து, மேன்மேலும் அதிகமான மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பாக அமைந்த பயணமே அது!
அதிகாரம் என்பது மக்களுடன் இணைந்திருப்பதே!
2014ஆம் ஆண்டு பிரதமராக தனது முதல் சுதந்திர தின உரையைச் செங்கோட்டையில் நிகழ்த்தியபோது, மோடி தன்னை நாட்டின் “பிரதான சேவகர்” என்று குறிப்பிட்டார். அந்த வார்த்தைகள் தலைமைப் பதவிக்கான ஒரு வலுவான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தின. மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட அதிகாரம், எப்போதும் மக்களுடனேயே இணைந்திருக்க வேண்டும் என்பதை நிஜமாக்கியவர் நம் தலைவர்.
அன்றாட மக்களின் கவலைகளுக்குத் தீர்வு காணும்போதுதான் சேவை உண்மையான அர்த்தத்தைப் பெறுகிறது. பாதுகாப்பான வீட்டை எதிர்பார்க்கும் ஒரு குடும்பம், சுகாதார வசதியை நாடும் ஒரு பெண் அல்லது முறையான வங்கி அமைப்பிற்குள் நுழையும் ஒரு தொழிலாளி போன்றோர் நடைமுறை மாற்றங்களின் மூலமே வளர்ச்சியை அனுபவிக்கின்றனர். கண்ணியம், எளிதில் அணுகக்கூடிய வசதிகள் மற்றும் மக்களின் தேவைகளுக்கு அரசு எவ்வளவு அக்கறையுடன், திறம்பட பதிலளிக்கிறது என்பதில்தான் நல்லாட்சியின் முக்கியத்துவம் உள்ளது.
ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்கள், நிதி உள்ளடக்கம், சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றுக்கு மோடியின் அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. தேசிய வளர்ச்சி ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைய வேண்டும் என்பதே இத்திட்டங்களின் பரந்த நோக்கமாகும். மக்களின் ஒரு விண்ணப்பம், ஒரு வங்கிக் கணக்கு அல்லது ஒரு வீடு ஆகியவற்றின் பின்னால் எதிர்காலக் கனவுகளைக் கொண்ட ஒரு அருமைத் தலைவர் இருக்கிறார் என்பதால், ஒவ்வொரு வெற்றிகரமான திட்டச் செயலாக்கமும் இனிதே சாத்தியமாகிறது.
ஒரு திட்டத்தை அறிவிப்பது பொறுப்பின் தொடக்கம் மட்டுமே. அதன் முழுமையான செயல்படுத்துதல், நடைமுறையில் ஏற்படும் சிரமங்களைக் கேட்டறிதல், மேலும் இத்திட்டங்களுக்காகக் காத்திருப்பவர்களையும் சென்றடைவது என அந்தப் பொறுப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இப்படி, நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளைத் தொடர்ந்து கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு குடிமகனின் கவலையையும் தீவிரத்துடன் அணுகுவதே பிரதமரின் உன்னத சேவை!
பிரதமருக்கு நமது அர்ப்பணிப்புச் சேவைகளே சிறந்த காணிக்கை!
பாஜக கார்யகர்த்தாக்களுக்கு, பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இதே வித அர்ப்பணிப்பை உள்ளூர் அளவில் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம். வயதான ஒருவருக்காக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய உதவுவது, ஒரு மாணவருக்கு ஆதரவளிப்பது, இரத்ததானம் செய்வது அல்லது அக்கம்பக்கத்தில் நடைபெறும் தூய்மைப் பணியில் பங்கேற்பது போன்றவை பொதுச் சேவைக்கு நடைமுறை வடிவத்தை அளிக்கின்றன.
இத்தகைய பணிகள் ஒரு எளிய செய்தியை எடுத்துச் செல்கின்றன: ஒவ்வொரு குடிமகனும் தனது குரல் கேட்கப்படுவதற்குத் தகுதியானவர்; ஒவ்வொரு நேர்மையான பங்களிப்பும் மதிப்புமிக்கது. மக்களால் எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், நம்பகமானவர்களாகவும், தங்களைச் சுற்றியுள்ள சமூகங்களின் தேவைகளில் அக்கறையுடன் இருப்பவர்களாகவும் கட்சித் தொண்டர்கள் செயல்படும்போது, பாரதிய ஜனதா எனும் தேசிய இயக்கத்தின் வலிமை மேலும் அதிகரிக்கிறது.
பிரதமர் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் இந்த வேளையில், நம் சொந்தச் செயல்பாடுகளின் மூலம் பிரதமரின் ‘சேவை’ என்ற உயர்ந்த இலட்சியத்தை நாமும் மதிக்கலாம். அவர் வழியில் சென்று, மக்களுக்குப் பணியாற்றவும், அவர்களது பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு காண உதவவும், இந்த நாளில் நமது அர்ப்பணிப்பைப் புதுப்பித்து மகிழ்வோம். பாரத நாட்டை மேலும் வலிமையாகக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு அர்ப்பணிப்பே, பிரதமர் மோடிக்கு நாம் மரியாதையுடன் அளிக்கும் பிறந்தநாள் பூங்கொத்து!