ஒரே நாடு
← கட்டுரைகள்

பிரதமரின் 25 ஆண்டுகால சேவை: அதற்கும் அப்பால் காத்திருக்கும் நம் குழந்தைகளின் எதிர்காலம்!

எழுதியவர்

Oreynaadu Desk

7 அக்டோபர் 2026

கைகூப்பி வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி — கோப்புப் படம்கைகூப்பி வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி — கோப்புப் படம்

இன்று பள்ளியில் அடியெடுத்து வைக்கும் ஒரு குழந்தைக்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்ற போது அவர்முன் இருந்த சவால்கள் பற்றியோ, அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் பற்றியோ பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகும் போது இருக்கப் போகும் இந்தியா, மோடியின் பொது வாழ்க்கைப் பயணத்தில் — குஜராத் முதல் பிரதமர் அலுவலகம் வரை — எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளால் அசாத்தியமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இங்குதான் இருபத்தைந்து ஆண்டுகால தலைமைத்துவமும், வருங்கால தலைமுறைகளின் எதிர்பார்ப்புகளும் நேருக்கு நேராக சந்தித்து சங்கமிக்கிறது.

‘சேவா சங்கல்ப் அபியான்’ மூலம் மோடியின் தலைமை வாழ்க்கையின் இருபத்தைந்து ஆண்டுகளை நாம் இன்று நினைவுகூர்கிறோம். இந்த அழகிய தருணம் என்பது கடந்த காலத்தை மட்டும் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பல்ல. இந்த 25 ஆண்டுகளில் அவரால் உருவாக்கப்பட்ட அடித்தளங்கள், இந்தியாவின் எதிர்காலத்திற்கு திறந்து வைத்த வாய்ப்புகள் என்ன விதமானவை என்பதையும் சிந்திக்க வேண்டிய ஒரு தருணமாகும்.

ஒவ்வொரு தலைமுறையும், முந்தைய தலைமுறைகள் எடுத்த முடிவுகளின் பலன்களையும் விளைவுகளையும் பரிசாகப் பெற்றுக்கொள்கிறது. இன்று திறந்து வைக்கப்படும் ஒரு ரயில் பாதையில், இன்னும் பிறக்காத தலைமுறையைச் சேர்ந்த நாளைய மாணவர்கள் பீடு நடை போட்டு பயணிக்கலாம். ஒருகாலத்தில் எட்டாக்கனியாகத் தோன்றிய சந்தையை, நாளைய தொழில்முனைவோருக்காக போடப்படும் புதிய சாலை ஒன்றின் மூலம் எளிதில் சென்றடையச் செய்ய முடியும். நம்பகமான மின்சாரமும் டிஜிட்டல் இணைப்பும், அவர்களின் பெற்றோர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பிரும்மாண்ட வாய்ப்புகளை ஒரு கிராமத்துக் குழந்தையின் முன் பட்டவர்த்தனமாக திறந்து வைக்கும்.

இதுவே நீடித்த முதலீடுகளின் உண்மையான மதிப்பு. அவை தரும் பலன்கள் என்பது ஒரு தலைவரின் பதவிக்காலத்துடன் முடிந்து போவதில்லை. அவை உருவாக்கும் புதிய வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள், தொழில்முயற்சிகள் மற்றும் கனவுகள் வழியாக அவற்றின் தாக்கம் பல தலைமுறைகளையும் தாண்டிச் செல்கிறது. அதனால்தான் நல்ல தலைமைத்துவம் கொடி நாட்டிய காலத்தை வெறும் வருடங்களால் மட்டுமல்ல, நாளைய தலைமுறைகளாலும் அளவிட வேண்டும்.

ஒரு நாடு வளர்ச்சியடைய சிறப்பான உள்கட்டமைப்புகள் மட்டும் போதாது. அதை பயன்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட மனித வளமும் அவசியம். அதனால்தான், பாரத நாட்டில் பட்டம் பெறும் இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒரு தொழில்சார் திறனையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மோடியின் வலியுறுத்தல், கல்விக்கும் நடைமுறைத் திறனுக்கும் இடையிலான முக்கியமான இணைப்பைச் சுட்டிக்காட்டுகிறது. நாளும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில், இளையவர்கள் இங்கே கற்றுக்கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கவும், உற்பத்தி செய்யவும், தங்களின் பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காணவும் இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

2047-ஆம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ — வளர்ச்சியடைந்த இந்தியா — என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை, இந்த முயற்சிகளுக்கு ஒரு பொதுவான திசையை காட்டுகிறது. இன்னும் 21 ஆண்டுகளில், இந்தியா சுதந்திரம் பெற்றதன் நூற்றாண்டை நிறைவு செய்யப் போகும் ஆண்டில், இன்றைய பள்ளிக் குழந்தைகள் தங்களது பணிக்காலத்தில் இருப்பார்கள். தேசிய நாட்காட்டியில் இடம்பெறும் ஒரு வருடம், அவர்களைப் பொறுத்தவரை தொலைதூர இலக்கல்ல; அது அவர்களின் சொந்த வாழ்க்கையின் ஒரு சிறப்பான பகுதியாகும்.

எனவே, நம் பிரதமர் மோடியின் இருபத்தைந்து ஆண்டுகால நிர்வாக அனுபவம் ஒரு புதிய பொறுப்பையும் நம் முன்னே வைத்துள்ளது என்பதை நாம் மறக்கலாகாது. இன்றைய தலைமுறையைத் தாண்டியும் நீடிக்கும் சவால்களையும் வாய்ப்புகளையும் எதிர்கொள்ள இந்தியாவைத் தயார்படுத்துவது எனும் கடமையுணர்வே அது. நீடித்த உள்கட்டமைப்பு, காலத்திற்கேற்ற திறன்கள், திறமையான நிறுவனங்கள், இயற்கை வளங்களின் பொறுப்பான பயன்பாடு — இவை அனைத்தும் அந்த நீண்டகால உறுதிப்பாட்டின் வலிமையான தூண்களாக அமைய வேண்டும். இதனைத்தான் தன் 80வது சுதந்திர தின உரையில் நம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான 7 தூண்களாக முன் வைத்தார் நம் பிரதமர்.

‘சேவா சங்கல்ப்’ இந்தப் பயணத்தில் நாம் ஒவ்வொருவரும் பங்கேற்கும் இனிய வாய்ப்பை வழங்குகிறது. ஒரு மாணவர் தனது கல்வியைத் தொடர உதவுவது, ஒரு இளைஞரை தொழிற்பயிற்சிக்குத் திருப்புவது, ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசிய சேவைகள் கிடைக்கச் செய்வது போன்று நம்மால் செய்ய முடிந்த சிற்சில சிறிய செயல்கள் கூட, ஒரு பெரிய தேசிய நோக்கத்துடன் நம் உள்ளூர் முயற்சிகளை இணைக்க முடியும்.

மோடியின் இருபத்தைந்து ஆண்டுகால சேவைக்கு நாம் செலுத்தக்கூடிய மிகப் பொருத்தமான மரியாதை, அந்தச் சேவையின் மதிப்பான உணர்வை நமது சொந்த செயல்பாடுகள் மூலம் முன்னெடுத்துச் செல்வதே. அடுத்த தலைமுறை அதிக நம்பிக்கையுடனும், விரிவான வாய்ப்புகளுடனும், வலுவான அடித்தளங்களுடனும் தனது பயணத்தைத் தொடங்கும் வலிமையான இந்தியாவை உருவாக்குவது ஒன்றே நம் லட்சியமாக இருக்க வேண்டும். அதனை உருவாக்குவதற்கான நமது உறுதியை இந்த மைல்கல் மேலும் வலுப்படுத்தட்டும்.

பிரதமரின் இருபத்தைந்து ஆண்டுகள் சேவை என்பது பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்டு நினைவுகூரப்பட வேண்டியவை. ஆனால் இந்த இருபத்தைந்து ஆண்டுகளின் பாரம்பரியத்தையும் அதன் பலன்களையும் ஒரு சேர பெறப்போகும் நம் வருங்கால குழந்தைகளுக்காக நாம் செய்ய வேண்டியது இன்னும் அதிகம். ஆகவே வருங்கால தலைமுறைகளுக்கான வலிமையான இந்தியாவை உருவாக்கும் நம் கடமை இன்றே தொடரட்டும்!