ஒரே நாடு
← கட்டுரைகள்

மோடி அரசின் காம்பினேஷன் ஸ்ட்ராடிஜி தந்த பிரம்மாண்ட வெற்றியே 7.8% வளர்ச்சி!

எழுதியவர்

Oreynaadu Desk

12 செப்டம்பர் 2026

கட்டுமானக் கிரேன்களுடன் வளர்ந்து வரும் மும்பை நகரின் உயர்ந்த கட்டடங்கள் — கோப்புப் படம்கட்டுமானக் கிரேன்களுடன் வளர்ந்து வரும் மும்பை நகரின் உயர்ந்த கட்டடங்கள் — கோப்புப் படம்

2026–27 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்–ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியைப் பதிவு செய்து பிரம்மாண்ட வெற்றியை அடைந்திருக்கிறது. சந்தை எதிர்பார்ப்புகளையும் இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பையும் தாண்டிய வெற்றி இது!

புவிசார் அரசியல் பதற்றங்கள், உயர்ந்த எரிசக்தி விலைகள், உறுதியற்ற வர்த்தகச் சூழல் மற்றும் நிதிசார் ஏற்றத் தாழ்வுகள் போன்ற சிக்கல்களை உலகப் பொருளாதாரம் மொத்தமும் எதிர்கொண்டு வரும் வேளையில், இந்தியாவின் இந்தச் சாதனை தற்செயலானது அல்ல. இது ஓர் இலக்கினை நிர்ணயித்து, நன்கு திட்டமிட்டு செயல்படுத்திய ஒரு வெற்றி வியூகம். வளர்ச்சி, உள்கட்டமைப்பு, நலத்திட்டங்கள் மற்றும் நிதி ஒழுங்கு ஆகியவற்றை ஒரே வளர்ச்சி வியூகத்தின் பகுதிகளாகக் கருதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த ஒரு தசாப்தமாக மேற்கொண்ட பொருளாதார மேலாண்மையின் பிரதிபலிப்பே இது.

சிக்கல்களுக்கு நடுவிலும் சிகரம் தொட்டோம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு, வெளிப்புறத்திலிருந்து பல்வேறு அதிர்ச்சிகரமான பிரச்சினைகளைத் தொடர்ந்து சமாளிக்க வேண்டியிருந்தது. கோவிட் பெருந்தொற்று நாட்டின் உற்பத்தியையும் வாழ்வாதாரத்தையும் பாதித்தது; ரஷ்யா–உக்ரைன் நாடுகளுக்கு இடையே உண்டான மோதல், பொருட்கள் மற்றும் எரிசக்திச் சந்தைகளில் இடையூறுகளை ஏற்படுத்தியது; அதன் பின்னர் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றங்களால் எண்ணெய் விலைகள் ஏகத்துக்கும் எகிறி, விநியோகச் சங்கிலிகளில் புதிய அழுத்தங்களை உருவாக்கின.

ஆனால், எந்த ஒரு நெருக்கடியும் நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்த விடாமல், நிவாரண நடவடிக்கைகளையும் தொடர்ச்சியான முதலீடுகளையும் சீர்திருத்தங்களையும் அரசு குறிவைத்து இணைத்துச் செயல்பட்டது. ஒரு பக்கத்தில் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களைப் பாதுகாத்தபடியே, உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தையும் திறம்பட இயங்கச் செய்த இந்த அரசின் யுக்தி, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையை சர்வதேச அரங்கில் வலுப்படுத்தியுள்ளது.

மூலதனச் செலவுகளுக்கு முன்னுரிமை!

முதலீடு, உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகியவை இன்னும் பலமான வளர்ச்சியின் முக்கிய இயக்கிகளாக உள்ளன என்பதையே சமீபத்திய பொருளாதார வளர்ச்சிக்கான புள்ளிவிவரங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்டுகின்றன. மூலதனச் செலவினங்களுக்கு மோடி அரசு தொடர்ந்து அளித்து வரும் முக்கியத்துவம், சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்துத் துறையில் எதிரொலிக்கிறது.

இத்துறைகளில் தளவாட வலையமைப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்கியதுடன், தனியார் முதலீட்டையும் மோடி அரசு ஊக்குவித்துள்ளது. 2026–27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மூலதனச் செலவினங்களுக்கு ₹12.22 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முழுமையான செயல்திறன் கொண்ட மூலதனச் செலவினம் ₹17.15 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய செலவுகள் நிலையான சொத்துகளை உருவாக்குகின்றன, மக்களின் தேவையை அதிகரிக்கின்றன, மக்களுக்கான வேலைவாய்ப்புகளை ஆதரிக்கின்றன மற்றும் இந்திய நிறுவனங்களின் நீண்டகாலப் போட்டித்திறனையும் மேம்படுத்துகின்றன.

நேரடி நலத்திட்டங்களால் விளைந்த நன்மை!

மோடி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட நலத்திட்டக் கட்டமைப்புகள், முதலீடுகளுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த அரசில் நலத்திட்டங்கள் வெறும் மானிய முறையாக மட்டுமே வடிவமைக்கப்படுவதில்லை. டிஜிட்டல் அடையாளம், வங்கிக் கணக்குகள் மற்றும் நேரடி நிதிப் பரிமாற்ற (Direct Benefit Transfer) முறை ஆகியவை, அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் விரைவாகவும் வெளிப்படையாகவும் சென்றடைய உதவியுள்ளன.

பிரதம மந்திரியின் ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச உணவுத் தானியங்கள், 81 கோடிக்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகச் சென்றடைந்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம், பெரிய மருத்துவச் செலவுகளுக்கு எதிரான நிதிப் பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், விவசாயம், குடியிருப்பு, சுகாதாரம், மின்சாரம் மற்றும் குடிநீர் தொடர்பான திட்டங்கள், நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பாதிப்புகளை வெகுவாகக் குறைத்துள்ளன.

இவை பொருளாதார வளர்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புடையவை. கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை அல்லது பேரழிவை ஏற்படுத்தும் மருத்துவச் செலவுகளிலிருந்து நன்கு பாதுகாக்கப்படும் ஒரு குடும்பம், பொருளாதார நடவடிக்கைகளில் சிறப்பாகப் பங்கேற்க முடியும் என்பதை உறுதிப்படுத்துபவை.

அதே சமயத்தில், உள்கட்டமைப்பு முதலீடுகள் தேசத்தின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துகின்றன. இதன் விளைவாக, அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் சமூகப் பாதுகாப்பு எனும் அடித்தளத்தை வழங்க, மோடி அரசு செய்யும் சீர்திருத்தங்களும் முதலீடுகளும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஏணியை உருவாக்கும் வளர்ச்சிக் காரணிகளாக உருவாகியிருக்கின்றன.

சவால்களை வென்று படைத்த சரித்திரம்!

நிச்சயமற்ற உலகச் சூழலால், இந்தியா இன்னும் பல சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்கிறது. இந்நிலையிலும், இந்தக் காலாண்டின் 7.8% வளர்ச்சி என்பது, பாரத நாடு இந்தச் சவால்களை வலுவான நிலையில் எதிர்கொள்கிறது என்பதையே உறுதியாகக் காட்டுகிறது.

நிதி ஒழுங்கு, நலத்திட்ட விநியோகம், உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவை ஒன்றுக்கொன்று போட்டியிடும் முன்னுரிமைகள் அல்ல என்பதை நிரூபித்ததே மோடி அரசின் முக்கிய சாதனையாகும். மாறாக, இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒன்றை ஒன்று வலுப்படுத்தும் என்பதையே இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் உயர்ந்துள்ள வளர்ச்சி விகிதம் உணர்த்துகிறது.

வெற்றியைக் கொணர்ந்த காம்பினேஷன் ஸ்ட்ராடிஜி!

இப்படியாக, நிலைத்தன்மை, கருணை மற்றும் முதலீடு ஆகியவற்றின் ஒன்றிணைந்த சேர்க்கையே, உலகின் பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையில் பாரத நாட்டைத் தொடர்ந்து தனித்துவமாகத் திகழ வைக்கிறது. மோடி அரசு திட்டமிட்டு உருவாக்கியிருக்கும் இந்த ‘காம்பினேஷன் ஸ்ட்ராடிஜியே’ நம் வளர்ச்சி விகிதாச்சாரங்கள் தொடர்ந்து முன்னேறி வரும் காட்சிகளுக்கான சாட்சியாகவும் இருக்கிறது.

இது பாரத நாட்டின் குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய ஓர் அதிவேக வளர்ச்சி!