எல் நினோவும் பன்னீர் பட்டர் மசாலாவும்
எழுதியவர்

எஸ்.ஆர். சேகர்
24 செப்டம்பர் 2026
ஆசிரியர் மற்றும் பதிப்பாளர், ஒரே நாடு
எல் நினோ வெப்பத்தில் வறண்ட நிலத்தின் முன் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிடும் சிறுவன் — கார்ட்டூன் ஓவியம்அஷ்வின் சித்தார்த்
பெரிய அறிவு ஜீவி அல்ல. ஒரு விளையாட்டு பிள்ளை. பெரிதாக சிந்திப்பவனும் அல்ல. ஆனால் நினைத்ததை முடிப்பவன்.
என்ன ரூட் மாறுகிறீர்களே, தலைப்பில் வித்தியாசமாக இருக்கிறது, தொடக்கமும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
எல் நினோ இயற்கையை பாழ்படுத்தியதால் வந்த பருவ நிலை சிதறல். இயற்கையை அனுபவிப்பதை விட்டுவிட்டு இயற்கையை அபகரித்ததால் வந்த சீரழிவு, குற்றம். நமக்கு தெரியாமலே தொடர்ந்து நாம் செய்த இயற்கை அபகரிப்பு.
இது உலகம் எங்கும் நடந்தபோது, சிறு துளிகள் சேர்ந்து பெரும் வெள்ளமாகி, இன்று நம்மை தண்டிக்க தொடங்கிவிட்டது.
சரி, இந்த அப்ஸ்ட்ராக்ட் போதும். மறுபடியும் சப்ஜெக்ட்டுக்கு வருகிறேன்.
பிராய்லர் சிக்கன், கென்டகி Fried சிக்கன், கபாப், லேஸ் சிப்ஸ், கோக். உணவு பாதை எதிர்பார்க்காத, அதற்கு அந்நியப்பட்ட உணவுகள். செரிக்க முடியாமல் தடுமாறும் உணவுகள். வெளியிலே அலங்கரிக்கப்பட்டவைகள். நாவுக்கு அதீத சுவை தருபவை.
இதைத் தொடர்ந்து உண்பது உடல் மாசடைந்து, மூளைக்கு தேவையான புரோட்டீன்கள் ஒரு சதவீதம் கூட இல்லாத உணவுகள். மூளை பூஞ்சமடைகிறது. உடல் இனர்ட்டாகிறது. சிந்தனை முடங்கி போகிறது.
எப்போதெல்லாம் ரெஸ்டாரண்டுக்கு போகிறேனோ, அப்போதெல்லாம் என் நண்பனின் ஆர்டர் பன்னீர் பட்டர் மசாலா, குல்ச்சா தான். இது ஊர் ஊராக, நாடு நாடாக, புதிய ரெஸ்டாரண்டில் ஏறி இறங்கினாலும் மாறாத ஐட்டம்.
அவனால் மாற்றி சிந்திக்கவே முடியவில்லை. வாழ்க்கையில் ரசனைகளை அனுபவிக்கவே தெரியவில்லை. அது அவன் குற்றம் மட்டுமல்ல; அவன் தேர்ந்தெடுக்கும் உணவினாலும் கூட.
என் நண்பன் பெரிய வியாபாரி. சுரங்க காண்ட்ராக்டர். இயற்கை தந்த, எல்லோருக்கும் சொந்தமான மலைகளை கொஞ்சம் கொஞ்சமாக பெயர்த்தான். காலப்போக்கில் அங்கே மிகப் பெரும் பள்ளம் இயற்கைக்கு எதிராக உருவாகியது.
வீட்டு வாசலில் வாஸ்துவுக்கு எதிராக ஒரு மரம். அந்த 15 வயது மரத்தை வெட்டினான். மேகத்தை ஈர்ப்பது போச்சு. மழைத்துளி வருவது போச்சு. பூமி வறண்டு போச்சு.
இது இயற்கையின் எல் நினோ.
எனக்கு அன்ன பூர்ணா காபி தான் பிடிக்கும். மாற மாட்டேன். எனக்கு காலையில் இட்லி, பொங்கல், வடை. வேறு ட்ரை பண்ணவே மாட்டேன்.
சட்டை, பேண்ட், பனியன், ஷூ, வாட்ச், புடவை வரை இந்த கலர், இந்த பிராண்டு மட்டுமே என்ற ஒரே மானாட்டமஸ் பழக்கம். உடை மாற்றுவதில்லை. ஊருகளுக்கான பயணம் மாற்றுவதில்லை.
செல்லுகின்ற கோவில்கள் மாற்றுவதில்லை. படிக்கும் தோத்திரங்கள் மாற்றுவதில்லை. இந்த நடிகர் சினிமா மட்டுமே பிடிக்கும் என்று ரசனையில், பழக்கத்தில், வழக்கத்தில் மாற்றமே இல்லை.
இதனால் மூளை வளர்வதே இல்லை. இது மூளையின் எல் நினோ.
மூளை ஒரு எலாஸ்டிக் ரப்பர் பாண்ட். எவ்வளவு வேண்டுமானாலும் இழுக்கலாம். ரப்பர் பேண்ட் இழுத்தால் மட்டுமே விரிவாகும். இல்லாவிட்டால் அடங்கி ஒடுங்கி மேசை மீது கிடக்கும்.
மூளையை இழுக்க இழுக்க அதன் நினைவாற்றல் கூடும்.
மூளை ஒரு ரஃபேல் போர் விமானம். அதை பயன்படுத்தா விட்டால் காட்சி பொருள்தான்.
புதியதை தேடுவோம். புதிதாய் சிந்திப்போம். புதிய வழியில் நடப்போம். புதிய ஆடை அணிவோம்.
தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம், ஆர்வம், ஆர்வம் நம்மிடம் கொப்பளிக்கட்டும்.
இதுதான் வழி, இதுதான் எனக்கு நிர்ணயித்தது என ஒரு வட்டத்துக்குள் சுருங்கினால், மூளையும் சுருங்கிப் போகும்.
வெறும் பன்னீர் பட்டர் மசாலாவே நமது சாய்சாக இருக்குமானால், மூளை காட்சி பொருள்தான்.
மெகா பைட், ஹெகா பைட் Storage கம்ப்யூட்டரில் வெறும் Reels மட்டும் பார்த்துக் கொள்வது போல் தான்.
அபகரித்து அபகரித்து சுருங்கிப் போன இயற்கை. அதனால் எல் நினோ.
இவ்வளவுதான், இவ்வளவுதான் என சுருக்கு பையில் போட்ட மூளை. இது மூளையின் எல் நினோ.
அகலக்கால் வையுங்கள். அகில உலகம் தாண்டுங்கள்.
கடலை சுண்ட வைத்து அடை பிரதமன் காய்ச்சுங்கள்.
அத்தனையும் முடியும் உங்கள் மூளையாலே.
அதற்கு, மூலையிலிருந்து வெளியே வாருங்கள்.