தூய்மை இந்தியா திட்டத்தில் முறைகேடு! திமுக கவுன்சிலர் டெண்டர் ஊழல்
எழுதியவர்
Oreynaadu Desk
14 நவம்பர் 2026
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம்கடந்த மே மாதமே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்திய மக்களுக்காக மத்திய அரசின் மூலம் கொண்டுவரப்பட்டு இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்து வரும் ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு BPA கன்ஸ்ட்ரக்சன் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த BPA கன்ஸ்ட்ரக்ஷனின் உரிமையாளராக திண்டுக்கல் திமுக 39 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான பிலால் உசேன் என்பவர் இருந்து வருகிறார்.
இவர் இந்த நிறுவனத்தின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், நான்கு மேற்பார்வையாளர்கள், 24 பரப்புரையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இவர்களுக்கு மாத ஊதியம் இ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்தம் போக வங்கிக் கணக்குகளில் மட்டுமே செலுத்த முடியும். மேலும் அதற்கான பே ஸ்லிப்பை ஏஜென்சி மூலம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்நிலையில் அனிமேட்டர் எனும் பரப்புரையாளர்களுக்கு சுமார் 16817 ரூபாய் மாத சம்பளமாகவும் ஈஎஸ்ஐ, பி.எஃப். 2144 ரூபாய் பிடித்தம் போக ஒவ்வொரு ஊழியருக்கும் 14 ஆயிரத்து 673 ரூபாய் மாத சம்பளமாக வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்த BPA கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத் தலைவரான திமுகவைச் சேர்ந்த பிலால் உசேன் என்பவர் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் எழுதப்படாத பாண்டு பத்திரத்தில் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு ரூபாய் 7300 ரூபாயை ரொக்கமாக கையில் கொடுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உட்பட ஆறு பேருக்கு புகார் மனு அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்தப் பிரச்சனை BPA நிறுவனத்திடம் தெரியவந்த பிறகு ஒவ்வொரு ஊழியருக்கும் 7300-க்கு பதிலாக 9 ஆயிரம் ரூபாயை ஏற்றித் தருகிறோம், அனைவரும் இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் கையெழுத்திடுங்கள் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து BPA கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளரும் திமுக நிர்வாகியுமான பிலால் உசேன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது ஊதியத்தை முழுமையாகப் பெற்றுத் தரும்படியும் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தற்போது தவெக அரசு பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.