மீண்டும் தலைதூக்கும் லாட்டரி: கையடக்க இயந்திரங்களில் அச்சடித்து விற்பனை
எழுதியவர்
Oreynaadu Desk
5 செப்டம்பர் 2026
கையடக்க பில்லிங் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள் — பூடான் மற்றும் கேரள எண்கள், விலை விவரங்களுடன்திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்டரி விற்பனை மீண்டும் தலைதூக்கியுள்ளது. கேரள லாட்டரியின் முதல் பரிசு எண்களையும், பூடான் மாநில லாட்டரியின் வரிசை எண்களையும் கொண்டு, நவீன கையடக்க இயந்திரங்கள் மூலம் போலியாக நகல் எடுக்கப்பட்டு, பல்வேறு விலைகளில் சாமானிய பொதுமக்களுக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
தனி நெட்வொர்க்காக இயங்கும் விற்பனைச் சங்கிலி
இந்த விற்பனைக்கென்றே நகர் மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகளும், ஐம்பதுக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களும் உள்ளனர்.
மேலும் இதற்கெனப் பிரத்யேக கையடக்க பில்லிங் இயந்திரங்கள், தனி மொபைல் போன், தனி வாட்ஸ்ஆப் குரூப் எனத் தனி நெட்வொர்க்காகவே இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
கையடக்க இயந்திரத்தில் அச்சிடப்படும் இந்தச் சீட்டுகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் எதுவும் கிடையாது. அதனால் பணத்தை இழக்கும் வாங்குபவர்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை.
எஸ்.பி.யின் எச்சரிக்கை
தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் IPS பதவியேற்ற சில தினங்களில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், லாட்டரி விற்பனை உள்ளிட்ட அனைத்துச் சட்டவிரோதச் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
எஸ்.பி.யின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, லாட்டரி உள்ளிட்ட அனைத்துச் சட்டவிரோதச் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தடையை மீறி உருமாறும் லாட்டரி
ஏழை, பாமர மக்கள் பாதிக்கப்படுவதால் தமிழகத்தின் முந்தைய ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டிருந்த லாட்டரிகள், தற்போது உருமாறி நவீன கையடக்கக் கருவிகள் மற்றும் மொபைல் போன்கள் மூலம் மீண்டும் விற்பனை நடைபெற்று வருகிறது.
கடை வைத்து விற்கப்பட்ட காலத்தைக் காட்டிலும், கையடக்க இயந்திரம் மற்றும் மொபைல் போன் வழியாக நடைபெறும் இந்த விற்பனை கண்காணிப்புக்குச் சிக்குவது கடினம் என்பதால், தொடர்ச்சியான கண்காணிப்பும் புகார்களின் அடிப்படையிலான நடவடிக்கையும் தேவை என்ற கருத்து மாவட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.