ஒரே நாடு
கட்டுரைகள்

காக்ரோச்சுக்கு ஹிட் அடியுங்கள், மோடி அவர்களே!

எழுதியவர்

எஸ்.ஆர். சேகர்

26 ஆகஸ்ட் 2026

ஆசிரியர் மற்றும் பதிப்பாளர், ஒரே நாடு

எஸ்.ஆர். சேகர் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்ட அரசியலும் மத்திய அரசின் உறுதியும் — டிஜிட்டல் ஓவியம்காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்ட அரசியலும் மத்திய அரசின் உறுதியும் — டிஜிட்டல் ஓவியம்

“Cockroach Janta Party” (CJP) செப்டம்பர் 5 அன்று இந்தியா கேட் முதல் டெல்லி போலீஸ் தலைமையகம் வரை பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

ஜூலை 25 அன்று மத்திய அரசு அளித்ததாகக் கூறப்படும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் காரணமாம்.

இவர்களை இனியும் மாணவர் போராட்டக்காரர்களாக மட்டும் பார்ப்பது சரியானது அல்ல.

ஜூலை 20 அன்று CJP தலைமையிலான “Chalo Sansad” பேரணி வன்முறையாக மாறியபோது, 118-க்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.

தாக்கியவர்களில் மாணவர்கள் என்ற போர்வையில் இருந்த குற்றப் பின்னணி கொண்டவர்களும், தேசவிரோத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கலவரம், அரசு ஊழியர்களைத் தாக்குதல், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு FIR-களும் பதிவு செய்யப்பட்டன.

அதன்பிறகு மத்திய அரசு மேற்கொண்ட மென்மையான அணுகுமுறை ஒருசாராரால் ராஜதந்திரமாகப் பார்க்கப்பட்டாலும், அரசின் எதிர்ப்பாளர்கள் அதை மத்திய அரசின் பலவீனமாகச் சித்தரித்தனர்.

இதற்குப் பிறகும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, கல்வி அமைப்பைச் சீர்திருத்துவது தொடர்பாக உறுதிமொழிகளை அளித்தது. ஜனநாயகத்தில் இதை சிலர் பலவீனம் என்றும், சிலர் ராஜதந்திரம் என்றும் இருவேறு விதமாகப் பார்த்தனர்.

ஆனால் இத்தகைய சமரச அணுகுமுறைக்கும் ஓர் எல்லை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் வீதிக்கு வந்து போராடினால் அரசு இன்னொரு சலுகை அளிக்கும் என்ற எண்ணம் உருவானால், அதிக அழுத்தம் கொடுத்தால் அதிக அரசியல் பலன் கிடைக்கும் என்ற தவறான சமிக்ஞை உருவாகும்.

ஜூலை போராட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் பதவி விலகியது, CJP-க்கு மிகப்பெரிய அரசியல் வெற்றி என்று அரசு எதிர்ப்பு ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் எழுதித் தீர்த்தார்கள்.

இதன்பிறகு CJP-யின் அரசியல் மொழியும் மாறியிருக்கிறது.

CJP நிறுவனர் அபிஜீத் திப்கே, பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று நேரடியாகப் பேசும் அளவுக்குத் துணிச்சல் பெற்றுள்ளார்.

இவர்களின் இலக்கு தேர்வு முறைகேடுகளைச் சரிசெய்வது மட்டும்தானா? அல்லது இளைஞர்களின் பெயரைப் பயன்படுத்தி, நக்சலைட்டுகள், சமூக விரோதிகள் மற்றும் தேசவிரோத சக்திகளை மாணவர் கூட்டம் என்ற போர்வையில் ஒருங்கிணைத்து, “Hit and Run” முறையில் மத்திய அரசை அரசியல் ரீதியாக நிலைகுலையச் செய்வதா?

அடுத்த முக்கியமான கேள்வி, நிதி மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள்.

திப்கே அமெரிக்காவின் Boston University-யில் படித்தவர். அவரது வெளிநாட்டுத் தொடர்புகள் என்ன? அவருடைய இயக்கத்துக்குக் கிடைக்கும் நிதியின் மூலங்கள் என்ன? வெளிநாட்டு அமைப்புகள் அல்லது நபர்களிடமிருந்து ஏதேனும் ஆதரவு இருக்கிறதா? என்பவை முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள்.

நிதி எங்கிருந்து வருகிறது? நாடு முழுவதும் இயக்கத்தை ஒருங்கிணைப்பது யார்? சமூக ஊடகக் கட்டமைப்பின் பின்னணி என்ன? பெரிய அளவிலான சட்ட உதவிக்கான நிதி எவ்வாறு திரட்டப்படுகிறது? இவை அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு வராமல் இருக்க வாய்ப்பில்லை.

சட்டம், ஒழுங்குக்கு விடுக்கப்படும் இத்தகைய சவால்களை மத்திய அரசு ஏற்கெனவே பலமுறை சந்தித்திருக்கிறது. வெளிநாட்டு நிதி, உள்நாட்டு தீவிரவாத சக்திகள் ஆகியவற்றுடன் தொடர்புகள் உள்ளனவா என்பதையும் அரசு தீவிரமாக ஆராய வேண்டும்.

இத்தகைய விஷயங்களைத் தெரிந்தும் பார்த்துக்கொண்டிருப்பது அரசுக்கு அரசியல் ரீதியாக ஆபத்து என்பது ஒருபுறம்; நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தாக மாறக்கூடும் என்பது சாமானிய மக்களுக்கும் புரியும்.

எனவே, செப்டம்பர் 5 பேரணியை மத்திய அரசு இன்னொரு சாதாரண போராட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

முந்தைய சம்பவங்களைக் கருத்தில் கொண்டால், வன்முறை, சட்டவிரோத முற்றுகை அல்லது சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெறாதவாறு அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்கள் செல்லும் இடங்களில் இத்தகைய போராட்டங்களை நடத்தி நமது நாட்டின் பெருமைக்கு இழுக்கு சேர்க்கத் திட்டமிடப்படுகிறதா என்பதையும் பாதுகாப்பு அமைப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜனநாயகம் எதிர்ப்பைப் பாதுகாக்கிறது. ஆனால் ஜனநாயகத்தின் பெயரில் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமாக நிலைகுலையச் செய்யும் முயற்சிகள் நடந்தால், அவற்றைத் தெரிந்தே அனுமதிப்பது ராஜதந்திரம் அல்ல.

மோடி அரசு உரையாட வேண்டிய இடங்களில் உரையாடி வருகிறது.

ஆனால் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள “கரப்பான் பூச்சி” போராட்டத்தில் சட்டம் மீறப்பட்டால், அது வெறும் உரையாடலால் மட்டும் அணுகப்பட வேண்டிய விஷயம் அல்ல.

சட்டத்தின் இரும்புக் கரம் செயல்பட வேண்டும்.

மத்திய அரசு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது என நம்புகிறோம்.

ஏனெனில் ஆரம்பத்தில் சிறியதாகவும் அசட்டையாக எடுத்துக்கொள்ளத்தக்கதாகவும் தோன்றும் தீவிரச் செயல்பாடுகள், பின்னாளில் மிகப்பெரிய பாதுகாப்புச் சவால்களாக மாறிய வரலாறுகள் இருக்கின்றன.

எனவே மத்திய அரசு காலதாமதம் செய்ய வேண்டாம்.

வெள்ளம் வரும் முன்பே அணை போட்டுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.