வங்கதேச பாணி: கரப்பான் கட்சியின் கள்ள நோக்கம்!
எழுதியவர்
Oreynaadu Desk
9 அக்டோபர் 2026
செய்தியாளர் சந்திப்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகள் — கோப்புப் படம்வங்கதேசத்தில் தேர்தல் அமைப்பைச் சீர்குலைக்கப் பயன்படுத்தப்பட்ட உத்தி, இன்று இந்தியாவிலும் அரங்கேறத் தொடங்கியிருப்பது கவலைக்குரிய முன்னுதாரணமாகியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி அமைப்பாக பரவலாகக் கருதப்படும் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (CJP), இதே பாணியிலான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிகிறது.
வங்கதேசத்தில் முதலில் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம். நூருல் ஹுதா தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர், தேர்தல் ஆணையர் மஹ்பூப் தலுக்தர் “நேர்மையான உள்வட்ட நபர்” என்ற பிம்பத்துடன் முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் ஆணையத்துக்குள் நடந்த கருத்து வேறுபாடுகள் ஊடகங்களில் பல்வேறு விதமாக கசியவிடப்பட்டு, விவகாரம் பெரிதாகியது. அதன் தொடர்ச்சியாக “வாக்குத் திருட்டு” என்ற பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டது. தேர்தல் புறக்கணிப்பு மிரட்டல்களும், தெருப்போராட்டங்களும் அடுத்தடுத்து நடைபெற்றன.
இவற்றின் உண்மையான நோக்கம் தேர்தலைத் தூய்மைப்படுத்துவது அல்ல. மாறாக, தேர்தலை நடத்தும் ஒட்டுமொத்த இயந்திரமே நம்பகத்தன்மையற்றது எனும் பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதே நோக்கம்!
இந்தியாவிலும் இப்போது கிட்டத்தட்ட அதே காட்சிதான் அரங்கேறுகிறது. இரண்டு தேர்தல் ஆணையர்கள் தங்களுக்குள் அலுவலக ரீதியாக தெரிவித்த உள்புற ஆட்சேபனைகள் தொடர்பான ஒரு கருத்து, Indian Express நாளிதழில் வெளி வருகிறது..இது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக சித்தரிக்கப்படுகிறது. உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர்கள் “வாக்குத் திருட்டு” என்ற பழைய குற்றச்சாட்டை மீண்டும் தங்களது பல்லவியாகப் பாடி, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். கோடிக்கணக்கான பெயர்களை உள்ளடக்கிய SIR நடைமுறையின் செயல்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதன் பின்னர் கரப்பான் கட்சி, நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்தது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சட்ட மறுப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தது.
கதை ஒன்றுதான்: முதலில் குழப்பம் ஏற்படுத்தும் உட்பூசல்; அடுத்து ஊடகப் பிரசாரம்; பின்னர் “வாக்குத் திருட்டு” என்ற முழக்கம்; இறுதியில் தெருப்போராட்டம்.
இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் வெளிநாட்டு சக்திகள் தெருக்களில் நேரடியாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவை புறவாசல் வழியாக உள்நுழைந்து இந்தியத் தேர்தல்கள் குறித்த நிரந்தர சந்தேகத்தை உருவாக்க திட்டமிடுகின்றன. வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அவர்களின் ஆதரவான ஊடக நிறுவனங்கள், கசியவிடப்படும் உள்குறிப்புகள், திட்டமிட்டு உருவாக்கப்படும் சிவில் சமூக அமைப்புகளின் கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் அது செயல்படுகிறது. அதன் நோக்கம் சீர்திருத்தம் அல்ல; மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையானதொரு ஆட்சி அமைப்பை நிலைகுலையச் செய்வதே. தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து நெருக்கடியில் வைத்திருப்பது, பொதுமக்களைக் கொந்தளிப்புடன் வைத்திருப்பது, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் அமைதியாக ஆட்சி நடத்த முடியாதபடிக்கு பதற்றமான சூழலை உருவாக்குவது ஆகியவையே அதன் கள்ள நோக்கங்கள்.
வங்கதேசத்தில் கையாளப்பட்ட கேவலமான உத்தியை இந்தியாவிலும் புகுத்துவதன் மூலம், இந்தியத் தேர்தல்கள் மீது நிரந்தரமான சந்தேகத்தை உருவாக்கலாம் என்று வெளிநாட்டுச் சக்திகள் நம்புகின்றன. அதன் விளைவாக, எதிர்காலத்தில் மக்களால் வழங்கப்படும் ஒவ்வொரு தேர்தல் தீர்ப்பையும், தேர்தல் முறைகேடுகள் மூலம் பறிக்கப்பட்ட வெற்றியாகச் சித்தரிக்க முடியும்.
இப்படி தீய நோக்கோடு செயல்பட்டு வரும் கரப்பான் கட்சியின் தற்போதைய மிரட்டல் அரசியல் மற்றும் அவர்களின் பின்னால் அணி திரளும் சந்தர்ப்பவாத எதிர்கட்சிகள் போன்றவை இந்தியாவின் இறையாண்மை கொண்ட தேர்தல் அமைப்பை குறிவைத்து நடத்தப்படும் தெருமுனைக் கூப்பாடு!
பயன்படுத்தப்படும் அரசியல் சூழ்ச்சிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் இந்த வங்க தேச ஸ்டைலிலான சீர்குலைவு முயற்சி இந்தியாவில் நிச்சயமாக பலிக்கப் போவதில்லை. காரணம், இந்தியா வங்க தேசமல்ல!