ஒரே நாடு
← கட்டுரைகள்

“வானில் வென்றது தர்மம்: கேப்டன் ஸ்மித் மச்சாரின் வீரமும் மனிதநேயமும்”

எழுதியவர்

லெப்டினன்ட் கர்னல் என். தியாகராஜன் (ஓய்வு)

8 அக்டோபர் 2026

லெப்டினன்ட் கர்னல் என். தியாகராஜன் (ஓய்வு) எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

ஃப்ளைதுபாய் விமானத்தின் இந்தியத் தலைமை விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் — கோப்புப் படம்ஃப்ளைதுபாய் விமானத்தின் இந்தியத் தலைமை விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் — கோப்புப் படம்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் எப்.இசட்.1073 விமானத்தில் 2026 செப்டம்பர் 30 அன்று நிகழ்ந்த சம்பவம், ஒரு விமானப் பாதுகாப்புச் சம்பவம் மட்டுமல்ல. மனிதநேயம், கடமை, மதம், தீவிரவாதம், நம்பிக்கை, உலகப் பாதுகாப்பு எனப் பல தளங்களில் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு வரலாற்றுச் சம்பவமாக அது மாறியுள்ளது.

170-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற அந்த விமானத்தின் இந்தியத் தலைமை விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார், விமான இயக்க அறைக்குள் தனது துணை விமானியால் தாக்கப்பட்டார். ஐக்கிய அரபு அமீரக அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட முதற்கட்ட விசாரணைத் தகவலின்படி, துணை விமானி அல்-ஹம்மாமி விமான இயக்க அறையில் இருந்த அவசரநிலை கோடரியால் கேப்டனைத் தாக்கி, விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றதாகவும், அது திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயல் முயற்சி என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாகக் காயமடைந்த நிலையிலும் கேப்டன் மச்சார் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை முதன்மையாகவே நினைக்கவில்லை.

விமானம் வேகமாக உயரத்தை இழந்து கொண்டிருந்தபோதும், அவர் தன்னிடம் இருந்த சக்தியைத் திரட்டி விமான இயக்க அறையின் கதவைத் திறந்தார். அதன் மூலம் விமானப் பணியாளர்களும் பயணிகளும் உள்ளே சென்று தாக்குதலாளியை கட்டுப்படுத்த முடிந்தது. பின்னர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த மாற்று விமானிகள் கட்டுப்பாட்டை ஏற்று சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். ராய்ட்டர்ஸ் தகவலின்படி, விமானம் சுமார் 34,000 அடி உயரத்திலிருந்து மிகக் குறுகிய நேரத்தில் 16,000 அடிக்கும் மேலாக கீழிறங்கியிருந்தது.

ஒரு சில வினாடிகள் தாமதமாகியிருந்தாலும் விளைவு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இந்திய விமானியின் மனத்தில் ஒலித்த சனாதன சிந்தனை

இந்தச் சம்பவத்தில் என்னை மிகவும் நெகிழ வைத்த ஒரு செய்தி உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கேப்டன் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். கேப்டனின் துணிச்சல், பொறுமை, சமயோசித அறிவு ஆகியவற்றைப் பாராட்டிய பிரதமர், அவரது செயல் இந்திய விமானிகளின் மதிப்பை உலக அளவில் உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கேப்டன் ஸ்மித் மச்சார் தமது குடும்பத்தில் அனுமன் சாலிசா பாராயணம் செய்வது வழக்கமாக இருப்பதையும் பிரதமருடன் உரையாடும்போது பகிர்ந்துகொண்டார். உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான அந்த நெருக்கடியான தருணங்களில், அனுமன் சாலிசாவை தனது மனதில் பாராயணம் செய்ததே தமக்கு அச்சத்தை வெல்லும் ஆன்மீகத் துணிவையும் மன உறுதியையும் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விமானி ஸ்மித் மச்சாரை ‘நிஜமான ஹீரோ’ என பாராட்டியதோடு மட்டுமின்றி அவரை நம் பிரதமருடன் அவர்களது சுதந்திர தினத்தன்று நேரில் வந்து அந்நாட்டு கெளரவ மரியாதகளை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்.

சனாதன தர்மம் சொல்லும் மனிதநேயம்:

சனாதன தர்மம் என்பது வெறும் வழிபாட்டு முறைகளின் தொகுப்பு அல்ல; மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் ஆழமான வாழ்வியல் நெறியாகும். “வசுதைவ குடும்பகம்” என்று உலகமே ஒரு குடும்பம் எனக் கூறும் சிந்தனையும், தமிழர் மரபின் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற உலக சகோதரத்துவப் பார்வையும் ஒரே உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. இதனையே “சர்வே ஜனாஃ சுகினோ பவந்து” என்று அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் எனப் பிரார்த்திக்கும் மனப்பான்மையும், “அஹிம்சா பரமோ தர்ம:” என்று மற்ற உயிர்க்கு தீங்கு செய்யாமையே உயர்ந்த அறம் என வலியுறுத்தும் கொள்கையும் மேலும் உயர்த்துகின்றன. பகவத் கீதையின் “அத்வேஷ்டா சர்வபூதானாம், மைத்ர: கருண ஏவ ச” என்ற போதனையும் அனைத்து உயிர்களிடமும் பகையின்றி, நட்புடனும் கருணையுடனும் வாழ்வதே உயர்ந்த மனிதப்பண்பு என எடுத்துரைக்கிறது. இவ்வனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால், சனாதன தர்மத்தின் மையச் செய்தியான “என் உயிர் மட்டும் முக்கியமல்ல; பிற உயிரும் என்னுடையதைப் போலவே மதிப்புமிக்கது.” என்பது தெளிவாகிறது. இந்த உயர்ந்த கருத்தை கேப்டன் மச்சார் தனது வீரச் செயலால் உலகிற்கு நிரூபித்திருக்கிறார்.

இஸ்லாம், பயங்கரவாதத்தின் மதமாக மாறிவிடக் கூடாது

இந்தச் சம்பவத்தின் இன்னொரு பரிமாணத்தை நாம் நேர்மையாகவும், அதே நேரத்தில் மிகுந்த பொறுப்புடனும் பேச வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரக விசாரணை இதனை பயங்கரவாதச் செயல் முயற்சி என்று கூறியுள்ளது. தாக்குதலின் முழுமையான உள்நோக்கம் குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

“எனது கருத்தில், இந்த தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளின் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன; அந்தக் கோணம் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.”

அதே நேரத்தில் உலகம் கடந்த பல ஆண்டுகளாக ஒரு கடுமையான உண்மையை எதிர்கொண்டு வருகிறது.

ஐ.எஸ்., அல்-கொயிதா, லஷ்கர்-இ-தொய்பா, அல்-ஷபாப், போன்ற பல தீவிரவாத அமைப்புகள், இஸ்லாமின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் தீவிரவாத சிந்தனைகளைதக் கொண்டுள்ளன.

இதன் காரணமாக நாளை ஒரு சாதாரண இஸ்லாமிய விமானி விமானத்தை இயக்கும்போது, அவரது மதத்தை மட்டுமே காரணமாகக் கொண்டு ஒரு பயணியின் மனதில் அச்சமோ தயக்கமோ உருவாகும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய சமூகத் தோல்வியாகும்.

அதே நேரத்தில் இப்படியான அச்சம் சமூகத்தில் உருவாகாமல் தடுப்பதில் இஸ்லாமிய உலகுக்கும் ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. இதனை இஸ்லாமிய நல் அமைப்புகள் செய்யும் என நம்புவோம்!

ஜெய் ஹிந்த்!

— லெப்டினன்ட் கர்னல் என். தியாகராஜன் (ஓய்வு)