ஒரே நாடு
← கட்டுரைகள்

பாரதியாரும் பிரதமர் மோடியும்: மொழிகளைக் கடந்த ஒரு பிணைப்பு!

எழுதியவர்

Oreynaadu Desk

15 செப்டம்பர் 2026

மகாகவி பாரதியாரின் படைப்புகளின் முழுத் தொகுப்பை வெளியிடும் பிரதமர் நரேந்திர மோடி — டிசம்பர் 2024மகாகவி பாரதியாரின் படைப்புகளின் முழுத் தொகுப்பை வெளியிடும் பிரதமர் நரேந்திர மோடி — டிசம்பர் 2024

தமிழ் உள்ளங்களில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு எப்போதும் தனியிடம்தான். சுதந்திர வேட்கை, துணிவு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக மகாகவியை நாம் பார்க்கிறோம். அத்தகைய பாரதியார் மீது நம் பிரதமர் மோடி கொண்டுள்ள அளப்பரிய மதிப்பு என்பது, தமிழின் இலக்கியச் செல்வங்கள் இன்று தேசத்தின் இதயத்தில் இன்றியமையாத இடத்தினைப் பெற்றுவிட்டன எனும் பெருமித உணர்வை வெளிப்படுத்துகிறது.

2024 டிசம்பர் 11 அன்று, பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி புதுதில்லியில் மகாகவியின் படைப்புகள் அடங்கிய 23 தொகுதிகளை வெளியிட்டார். பாரதியாரின் எழுத்துக்களைப் பாதுகாப்பதிலும் தொகுப்பதிலும் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அறிஞர் சீனி விஸ்வநாதனின் பணியையும் அவர் பெரிதும் பாராட்டினார். இந்த நிகழ்வு, ஒரு மகத்தான கவிஞருக்குச் செலுத்தப்பட்ட மரியாதையையும், அவரது எழுத்துக்களை எதிர்காலத் தலைமுறைகளுக்குக் கொண்டு சென்ற அறிஞருக்கான நன்றியையும் ஒருங்கே வெளிப்படுத்தியது.

பிரதமர் மோடிக்கும் பாரதியாருக்கும் இடையே ஒரு தனிப்பட்ட தொடர்பும் உள்ளது. அது காசி மாநகரம். பாரதியார் தனது வாழ்க்கையின் முக்கியமான வளர்ச்சிப் பருவத்தை அங்கு கழித்தார். அதேபோல், இன்று நாடாளுமன்றத்தில் காசி எனப்படும் வாரணாசியின் மக்கள் பிரதிநிதியாக விளங்கும் பிரதமர் மோடி, தனக்கும் பாரதிக்குமான இந்தப் பொதுவான தொடர்பைச் சிலிர்ப்பான ஆன்மிகத் தொடர்பாக வர்ணித்துள்ளார். மேலும், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில், தனது ஆட்சிக்காலத்தில் பாரதியாரின் பெயரில் ஓர் இருக்கையை நிறுவ முடிந்ததையும், காலம் தனக்களித்த மரியாதைக்குரிய கொடையாகவே நினைக்கிறார்.

பாரத நாட்டின் எதிர்காலம் குறித்த உரையாடல்களில் பாரதியாரின் சிந்தனைகளுக்குப் பிரதமர் முக்கியமான இடமளிக்கிறார். தமிழ் மொழி மீதான பேரன்பையும், அதே சமயத்தில் ஒட்டுமொத்த பாரதத்தின் மீது ஆழ்ந்த தேசபக்தியையும் ஒருங்கே கொண்ட பாரதியின் தொலைநோக்குப் பார்வைகளைத் தொடர்ச்சியாகத் தன் உரைகளில் பாராட்டிப் பேசி மேற்கோள் காட்டி வருகிறார் மோடி. பாரதியாரின் இலக்கியங்களை நாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்வதை, தமிழுக்கும் நாட்டின் பாரம்பரியத்திற்கும் தான் செய்யும் கடமையான சேவை என்றே பிரதமர் மோடி குறிப்பிடுகிறார்.

பாரதியாரின் பாடல் வரிகளுடன் வளர்ந்தவர்களுக்கு, பிரதமரின் இத்தகைய அங்கீகாரம் ஓர் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியைத் தருவது உண்மை. அடுத்த தலைமுறையைச் சார்ந்த இளையோர், பாரதியின் படைப்புகளைப் படித்து, அவற்றில் வெளிப்படும் துணிவையும் தன்னம்பிக்கையையும் உணர்ந்து, அவற்றில் தங்களையும் கண்டடையும்போதுதான் மகாகவி பாரதி இன்றும் வாழ்கிறார் என்று பொருள். அந்தப் பயணத்திற்கு வழிசெய்யும் வகையில் நாட்டின் தலைமகனாரே நம் மகாகவி மீது அதீதப் பற்றோடு இருப்பது என்பது, தமிழையும் தமிழர்களையும் அவர் சேர்த்தே மதிக்கிறார் என்பதற்கான உரத்த அடையாளம்! பெருமிதம் கொள்வோம்!