ஒரே நாடு
← கட்டுரைகள்

அப்பன் ”குதிருக்குள் இல்லை” என்று அமைச்சர் ஏன் சொல்லுகிறார்?

எழுதியவர்

குமரிகிருஷ்ணன்

14 நவம்பர் 2026

பாரதிய ஜனதா கட்சி, பிரச்சாரப் பிரிவு, முன்னாள் மாநிலத் தலைவர்

குமரிகிருஷ்ணன் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

சட்டப்பேரவையில் பேசும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவையில் பேசும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முன்பெல்லாம் 1972-க்கு முன்பாக தமிழகத்தில் மது அருந்துவது குற்றம் என சட்டம் இருந்தது! யாராவது மது அருந்திவிட்டு சாலையில் அலைந்தால் அவர்களை காவலர்கள் விரட்டிப் பிடித்து சிறையில் அடைப்பார்கள்! அபராதம் விதிப்பார்கள்!

அப்படி ஒருவனை விரட்டிப் பிடிக்கும்போது அவன் தனது வீட்டுக்குள் ஓடி வந்து நெல் போட்டு வைக்கும் குதிருக்குள் மறைந்து கொண்டானாம்!

காவலர்கள் உள்ளே வந்து தேடியபோது, அவனது மகன், ”என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்றானாம்! உடனே காவலர்கள் அவன் குதிருக்குள்தான் இருக்கிறான் என தெரிந்து கொண்டு பிடித்துச் சென்றார்களாம்!

“அப்பன் குதிருக்குள் இல்லை” என்பதை ஒரு சொல்லாடலாகவே சொல்லுவதுண்டு!

இப்போது தவெக பொதுப்பணித்துறை அமைச்சர், “அப்பன் குதிருக்குள் இல்லை”, “ஆறு மாதத்தில் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்த வகையில் நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை” என்று சொல்கிறார்!

ஏற்கெனவே “பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை!” என்று ஒரு தவெக அமைச்சர் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார்! சாட்சி சொல்லுவதுபோல் அந்த கல்வியாளர்களும் ”நாங்கள் தவெகவினருக்கு லஞ்சம் கொடுக்கவில்லை!” என்றனர்!

இப்போது லஞ்சம் கொடுக்கவில்லை! எனச் சொல்லுவதன் மூலம், முன்பு லஞ்சம் கொடுத்தோம்! என்று அந்தக் கல்வியாளர்கள் சொல்லுகிறார்கள்! லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பது குற்றம் என்பது கல்வியாளர்களுக்கே தெரியவில்லையா என்ன?

லஞ்சம் கொடுத்த குற்றத்திற்கு தவெக ஆட்சியில் தண்டனை இல்லையா?

”அப்பன் குதிருக்குள் இல்லை!” என்னும் வாசகம் தவெக ஆட்சியில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கிறது!

அதே வேளையில் தவெகவில் ஒன்றிய அளவிலான, மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் பதவிக்கு 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் வாங்கிவிட்டு நியமனம் செய்யப்படுவதாக சமூக ஊடகப் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன!

பதவிக்குப் பணப்பேரம் நடத்தும் உரையாடல்கள் ஊடகங்களில் உலா வருகின்றன!

அரசின் வழக்கறிஞராக தாலுக் அளவில் பணியாற்ற 20 லட்சம் 30 லட்சம் எனவும், அப்படி நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், அதிகம் சம்பாதிக்கலாம்! எனவும், பேரம் பேசும் உரையாடல்களும் ஊடகங்களில் உலா வருகின்றன!

கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் 100 கோடி 200 கோடி என லஞ்சம் வாங்கிக் கொண்டு கைமாற்றி விடப்பட்ட வழக்குகள் தவெக ஆட்சியில் பதிவாகி உள்ளன!

4 ரூபாய்க்கு வாங்க வேண்டிய ஒரு யூனிட் மின்சாரத்தை 30 ரூபாய் 35 ரூபாய்க்கு வாங்கியதாகக் கணக்கு எழுதி கமிஷன் சம்பாதிக்கும் ஊழல் தவெக ஆட்சியில் நடப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன!

இம்மாதிரியான ஊழலை யூனிட்டுக்கு 21 ரூபாய் என கணக்கு எழுதி திமுக சம்பாதித்ததாக இப்போதைய முதலமைச்சர் அப்போது கட்சித் தலைவராக மட்டும் இருந்தபோது பொதுக்கூட்டத்தில் பேசினார்!

தற்போது அப்பன் குதிருக்குள் இல்லை! அரசு அலுவலர்களை இடம்மாற்றம் செய்த வகையில் நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை! என தம்பட்டம் அடித்த அமைச்சரும் முன்னாள் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா-

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரும் கருணாநிதி பேரனும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மகனுமான உதயநிதியைப் பார்த்து, “எங்கள் மாமா லாட்டரி மார்டின் அவர்களிடமிருந்து ரூபாய் 500 கோடியை உங்கள் தந்தை வாங்கினார்; அதைத் திருப்பித் தாருங்கள்!” என்று கேட்டார்! இந்த உரையாடல் சட்டசபையில் பதிவானது! அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பானது!

அதற்கு உதயநிதி, ”உங்கள் மாமாதானே எங்க அப்பாகிட்ட கொடுத்தாரு அவரையே எங்க அப்பாகிட்ட கேட்கச் சொல்லுங்க!” என்றார்!

500 கோடியை ஆதவ் அர்ஜுனாவின் மாமா எதற்காக உதயநிதியின் அப்பாவிடம் அதாவது முன்னாள் முதலமைச்சரிடம் கொடுத்தார்?

அதை இப்போது ஏன் திருப்பிக் கேட்கிறார்?

அந்த 500 கோடி எந்த வகையிலான பணம்?

அந்தப் பணப் பரிமாற்றம் எப்படி நடந்தது?

வரி செலுத்தப்பட்டதா? திருட்டுக் குறுக்குவழி பரிமாற்றமா?

எவ்வகை குற்றம் புரிய அல்லது குற்றத்தின் பங்காக அந்தத் தொகை தரப்பட்டது? என்னும் கேள்வியை தமிழகத்தில் எந்த ஊடகமும் எழுப்பவில்லை!

சட்டசபையில் பேசப்படும் உரையாடல்களை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்றங்களை அணுக முடியாது என்னும் நிலைப்பாடு சட்டத்தில் உள்ளதால் யாரும் வழக்குத் தொடுக்க முடியவில்லை!

எனினும், அப்பன் குதிருக்குள் இல்லை என பறை சாற்றும் இந்த அமைச்சர் ஆதவ், அந்த 500 கோடி விவரத்தை மக்கள் முன்னிலையில் விளக்கிச் சொல்லுவாரா?

இவர்தான் லஞ்சத்திற்கு எதிரியாயிற்றே! அப்படியெனில் அந்தத் தொகை லஞ்சத் தொகையாக இருக்க வாய்ப்பில்லை! லஞ்சம் இல்லை என்பதாலேயே அதை அவர் சட்டசபையில் குறிப்பிட்டார்! என வைத்துக் கொள்ளலாம்!

நாங்கள் கடந்த 6 மாதமாக லஞ்சம் வாங்கவில்லை எனக் கூவுகிற ஆதவ் அந்த 500 கோடி பணம் எந்த வகையில் இவரது மாமாவால் சம்பாதிக்கப்பட்டது? அந்தப் பணம் எதற்காக முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டது? என்னும் கேள்விக்கான ”பதிலை” பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தரவேண்டும்!

அப்படி, ”பதில்” தந்தாரானால் ”ஆறு மாதமாக அரசு அலுவலர்களை இடம்மாற்றம் செய்த வகையில் இவர் லஞ்சம் வாங்கவில்லை!” என இவர் சொல்வதை நாம் நம்பலாம்!