ஒரே நாடு
← கட்டுரைகள்

கரப்பான்களின் சலசலப்பு மாணவர்களிடம் எடுபடவில்லை!

எழுதியவர்

Oreynaadu Desk

22 அக்டோபர் 2026

சுவாமி விவேகானந்தர் சிலை முன் வெற்றியைக் கொண்டாடும் ஏபிவிபி மாணவர் தலைவர்கள்சுவாமி விவேகானந்தர் சிலை முன் வெற்றியைக் கொண்டாடும் ஏபிவிபி மாணவர் தலைவர்கள்

— ஏபிவிபி வெற்றிகள் குறிக்கும் செய்தி!

இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உண்மையான குரல் எது என்பதை கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வுகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. ஒரு புறம் சிஜேபி எனப்படும் அமைப்பு சமூக வலைத்தளங்களில் வெற்றுக் கூச்சல்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. மறுபுறத்தில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாபெரும் வெற்றிகளை அமைதியான முறையில் பதிவு செய்து வருகிறது.

ஜூலை மாதத்தில் நீட் தேர்வு விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கரப்பான் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் அக்டோபர் மாதத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டிவிட்டனர். தாங்கள்தான் இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகள் என்று இவர்கள் இணையத்தில் ஒரு மாயையை உருவாக்கப் பார்த்தார்கள்.

ஆனால் இவர்களின் இந்த நாடகங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே எடுபட்ட வெற்றுக் கூப்பாடே தவிர, களத்தில் இவர்களுக்கு இந்நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எந்தவொரு அடிப்படை ஆதரவும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக நிரூபணமாகியுள்ளது.

ஜூலை முதல் அக்டோபர் வரையிலான இதே காலகட்டத்தில்தான், நாட்டின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் ஏபிவிபி அமைப்பு, வரலாறு காணாத வெற்றிகளைக் குவித்துள்ளது. தலைநகர் டெல்லி பல்கலைக்கழகத் தேர்தலில் தலைவர் பதவி உட்பட நான்கில் மூன்று முக்கியப் பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியது. பஞ்சாப் பல்கலைக்கழகத் தேர்தலிலும் தனது கூட்டணியுடன் இணைந்து அனைத்து முக்கியப் பதவிகளையும் வென்றது.

வட இந்தியாவில் மட்டுமல்ல, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவிலும் தேசியவாதக் கொள்கைகளே வென்றுள்ளன. ஒடிசாவில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மாணவர் தேர்தலில், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும், உத்கல் மற்றும் சம்பல்பூர் போன்ற முக்கியப் பல்கலைக்கழகங்களிலும் ஏபிவிபி அமோக வெற்றி பெற்றது. அசாம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலக் கல்லூரிகளிலும் முழுமையான வெற்றியைப் பதிவு செய்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, கர்நாடகாவின் மங்களூரு பல்கலைக்கழகக் கல்லூரியில் உள்ள முப்பத்து ஏழு இடங்களையும் முழுமையாக கைப்பற்றியது. கேரளாவின் திருப்பூணித்துறா அரசு சமஸ்கிருதக் கல்லூரியில், நாற்பது ஆண்டுகால இடதுசாரிகளின் கோட்டையை சுக்குநூறாய் தகர்த்து, பன்னிரண்டு இடங்களிலும் ஏபிவிபி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினைப் பெற்றது.

இந்தத் தொடர் வெற்றிகள் நாட்டுக்கு ஒரு மிகத் தெளிவான செய்தியைச் சொல்கின்றன. இந்தியாவின் இளைஞர்களும் மாணவர்களும் பிரிவினைவாதப் போராட்டங்களை விரும்பவில்லை. அவர்கள் ஏபிவிபி, ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி அரசியலின் பக்கமே உறுதுணையாய் நிற்கிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையிலான தேசியவாத சிந்தனை மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்திற்குச் சரியானது என்பதை மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அளித்த வாக்குச்சீட்டு மூலம் வெகு அழகாய் உணர்த்தியுள்ளனர்.

இணையத்தின் உதவியோடு சிஜேபி போன்ற கரப்பான் குழுக்கள் உருவாக்கும் பரபரப்புகள் வெறும் நீர்க்குமிழிகள் மட்டுமே. உண்மையான மாணவர் சக்தி என்பது வீதிகளில் நின்று குழப்பம் விளைவிப்பது அல்ல, ஜனநாயக ரீதியாகக் கல்லூரி வளாகங்களில் தேசியவாதத்தை வெற்றி பெறச் செய்வதே ஆகும். சமூக வலைத்தளங்களின் போலிப் பிரச்சாரங்களையும், அவை ஏற்படுத்திய வெற்று சலசலப்புகளையும் முற்றிலுமாகப் புறந்தள்ளி, பாரதப் பிரதமர் மோடி மற்றும் ஏபிவிபி அமைப்பின் கரங்களை இந்நாட்டு இளைஞர்கள் மேலும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறார்கள் என்பதே கள யதார்த்தம்.