தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது : செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை கண்டனம்!

“முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது.” என்று தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (06.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை, தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்று விழா அரங்கிற்கு அழைத்து சென்றனர்.

இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “தமிழகத்தின் அனைத்து இடங்களிலும்கூட, ஒரு சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது போல, திமுகவின் அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் இதுபோல் வன்முறை இணைந்த மாநிலமாக இதற்குமுன் எப்போதும் இருந்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளாக திமுக அரசின் பிடியிலே இப்படி நடந்துகொண்டிருக்கிறது, இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் கள்ளச் சாராயம் என்பது ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் திருவெண்ணெய்நல்லூரில் ஒருவர் கள்ளச் சாராயத்துக்கு பலியானார். அதற்கு முன்பு திருப்பூர், கோவை, உடுமலைப்பேட்டையில் 5 பேர் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வேறுவேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் முழுவதுமாக தங்களுடைய கண் பார்வையை இழந்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மரக்காணம், விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் 22 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது.

எனவே, தவறுகளைக் கேட்பதற்கு சாமானிய மனிதன் அஞ்சுகிறான். அரசிடம் கேள்வி கேட்பதற்கான சாமானிய மனிதனின் துணிவு குறைந்து கொண்டிருக்கிறது. அரசை எதிர்த்து சாமானிய மனிதன் கேள்வி கேட்டால், அவர்களுக்கு கைது மட்டுமே பரிசாக கிடைக்கிறது. எனவே தான் பாஜகவின் குரல், இந்த நேரத்தில், இன்னும் கம்பீரமாக, வேகமாக, சாமானிய மனிதர்களுக்காக பேச வேண்டியிருக்கிறது. சாமானியர்களின் குரலை திமுக அரசு நசுக்கிக் கொண்டிருக்கும்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீய சக்தியின் ஆட்சி தூக்கி எறியப்படும்வரை, பாஜகவின் குரல் ஒரு சாமானிய மனிதனின் குரலாக ஒலிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top