பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை வானகரத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 06) நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் -1
பாரதப் பிரதமருக்கு வாழ்த்து

பாரத மக்களின் பேராதரவோடு மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு  பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடிஜி அவர்களுக்கு இச்செயற்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்த நாட்டு மக்களுக்கும், தமிழகத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து ஆதரவு தந்த தமிழக மக்களுக்கும். இச்செயற்குழு நன்றியையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது.

அத்துடன் மத்திய அமைச்சரவையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர். மாண்புமிகு டாக்டர். எல். முருகன் அவர்களுக்கு மீண்டும் இடம் அளித்து தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தந்து பெருமை சேர்த்ததற்கு, இச்செயற்குழு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இத்தீர்மானத்தை மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்மொழிந்தார். முன்னாள் எம்.எல்.ஏ., காயத்ரி தேவி வழிமொழிந்தார்.

தீர்மானம்- 2

விஷ, கள்ளச்சாராய மரணங்கள் -சி.பி.ஐ. விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள். மேலும் 20 பேர் பார்வையை இழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமாக ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் சில குடும்பங்களில் தாய் தந்தை இருவரையும் இழந்து குழந்தைகள் அனாதையாய் நிற்கின்றனர். விஷ கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பது வருந்தத்தக்கது.

கள்ளச்சாராயம் சகஜமாக கிடைக்கக்கூடிய அளவிற்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் கலெக்க்ஷன், கமிஷன், கரப்ஷன் என இருந்ததால் இந்த பெருந்துயரம் நடந்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் சட்டவிரோத சாராய விற்பனைக்கு துணையாக இருந்திருக்கிறார்கள். எனவே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திறனற்ற,திராவிட முன்னேற்றக்கழக அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், இந்த துயரமான உயிரிழப்புகளுக்கு காரணமான சமூக விரோதிகளை அடையாளம் காணவும், குற்றப்பின்னணி விவரங்ககளை மக்கள் தெரிந்து கொள்ளவும் சிபிஐ விசாரணை வேண்டுமென இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் இதற்கான தார்மீக பொறுப்பேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென இந்த மாநில செயற்குழுவில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுகிறது. இதுவரை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூட சொல்லாத தமிழக முதலமைச்சர் அவர்களையும் இந்த செயற்குழு கண்டிக்கிறது. மேலும், கள் என்பது இயற்கை பானம், தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்குவதால், தினசரி பராமரிப்பின் காரணமாக மரம் செழிப்படையும். கள்,அருந்துபவர்களின் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் விளைவிக்காது. குறைந்த விலையில் கிடைக்கும் பானம் இது. இதன் மூலம் தென்னை, பனை விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும். கள் இறக்கி விற்பதால் பல நன்மைகள் உண்டு. அரசுக்கும் வருவாய் கிடைக்கும். கிராமப் பொருளாதாரம் மேம்படும்.

எனவே கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கும், ஆல்கஹால் கலந்த டாஸ்மாக் சரக்குகளின் மிகப்பெரிய கேடுகளிலிருந்து மக்களுக்கான பாதிப்பை குறைப்பதற்கும், தமிழக அரசு, கள் இறக்கி விற்பனை செய்திட அனுமதிக்க வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இத்தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் முன்மொழிந்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சம்பத் வழிமொழிந்தார்.

தீர்மானம் – 3

நதி நீர் உரிமை :   முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா, சிலந்தி ஆறு, பாலாறு ஆகியவற்றின் குறுக்கே அணை கட்டும் அண்டை மாநிலங்கள் என தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்களை ஒழிக்கும் விதமாக செயல்படும் அண்டை மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை, தீவிரமாக கண்டிக்க வேண்டிய திராவிட முன்னேற்ற கழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழக விவசாயிகள் மிகவும் ஆபத்தான சூழலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் உரிமையை நிலைநிறுத்த வேண்டிய திராவிட முன்னேற்ற கழக அரசு, பிரச்சனைகளை திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கிறது. அனைத்து அணைக்கட்டுகளும் தூர்வாரப்படாத காரணத்தால் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் வீணாகிறது. வாய்ப்புள்ள ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட முயற்சிகள் எடுப்பதில்லை. இவ்வாறு தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்கும் முயற்சிகளில் ஈடுபடாத திராவிட முன்னேற்ற கழக அரசை இச்செயற்குழு கண்டிக்கிறது.

அத்திக்கடவு-அவிநாசி கூட்டு குடிநீர் திட்ட பணிகளில் சுணக்கம், முக்கிய ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படாமல் இருத்தல், மேகதாது அணை கட்டுவோம் என்ற தங்கள் கூட்டணி கட்சி காங்கிரசின் ஆட்சி நடக்கும் கர்நாடகத்தை தட்டி கேட்க திராணியில்லாமல் இருத்தல் என ஆளும் தமிழக அரசின் அவலத்தால் அல்லலுறுவது, வஞ்சிக்கப்படுவது தமிழக விவசாயிகள் தான். அத்துடன் இப்போது முல்லை பெரியாறு தண்ணீரை மட்டுமே எதிர்பார்த்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், இப்பகுதியின் விவசாய ஆற்றுப்பாசனம் 100 சதவீதம் முல்லைப் பெரியாரை மட்டுமே நம்பி இருக்கிறது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று கூறிவரும் கேரள அரசின் அடாவடித் தனத்தை கண்டிப்பதோடு, அதை வேடிக்கை பார்க்கும் திராவிட முன்னேற்றக்கழக அரசின் மெத்தனப்போக்கை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இத்தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் முன்மொழிய, அதை ஜி.கே.நாகராஜ் வழிமொழிந்தார்.

தீர்மானம் – 4

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர்,தமிழக அரசு ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், காவல் துறையினர், இதர அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் நல பணியாளர்கள், செவிலியர்கள், மின்வாரிய ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஆகியோர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

மேற்கண்ட அனைத்து பிரிவினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திராவிட முன்னேற்றக்கழக அரசு, தொடர்ந்து அவர்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது. தங்கள் உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக . தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டுமென இச்செயற்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இத்தீர்மானத்தை மூத்த தலைவர் எச்.ராஜா முன்மொழிய, நடிகர் சரத்குமார் வழிமொழிந்தார்.

தீர்மானம் – 5

போதைப் பொருட்களின் கடத்தல் மையமாக தமிழகம் மாறியிருக்கிறது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் அயலக அணி நிர்வாகி, ஜாபர்சாதிக், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, போதை மாத்திரைகள், போதை பவுடர் விற்பனை ஆகியவை தமிழகத்தில் தாராளமாக நடக்கிறது. கஞ்சா குடிப்பவர்கள், விற்பவர்கள் காவல் துறையினர் மீதே தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் சக்தியை இழந்து விட்ட திராவிட முன்னேற்றக்கழக அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை முற்றிலும் செயல்படாத துறையாக மாறியிருக்கிறது. ரவுடிகள், கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து நாள்தோறும் கொலை, கொள்ளைகள் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் அவலங்களை சுட்டிக்காட்டினால் உடனடி கைது, பாஜக தொண்டர்கள் சமூக வலை தளங்களில் அரசை பற்றியோ, ஆள்பவர்களை பற்றியோ சுட்டிக்காட்டினால் உடனடி கைது, அதுவும் நள்ளிரவில் கைது, திமுகவினர் தமிழக பெண்களை பற்றி எத்தனை முறை அவதூறாக பேசினாலும், பிரதமரை குறித்து அவதூறு பரப்புவர்கள், பதிவிட்டவர்கள், மத்திய நிதி அமைச்சர் அவர்களை அவதூறாக பேசியவர்கள் குறித்து எத்தனை புகார்கள் அளித்தாலும், தமிழக காவல்துறை அமைதி காப்பதை. நடவடிக்கைகள் எடுக்காததை, திமுக அரசின் அலட்சிய போக்கினை இந்த செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புவதோடு, ஸ்காட்லாண்ட் போலீசிற்கு இணையான தமிழக .காவல்துறை,அரசின் ஏவல்துறையாகமாறியிருக்கிறது. தமிழக காவல்துறை இழந்த பெருமையினை மீண்டும் காண வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இத்தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி முன்மொழிய, அர்ஜுன மூர்த்தி வழிமொழிந்தார்.

தீர்மானம் – 6

பாராளுமன்றத்தில் செங்கோலை அவமானப்படுத்தியவர்களுக்கு கண்டனம்:  செங்கோல் என்பது நமது தேசத்தின் பாரம்பரிய அடையாளம். நீதி வழுவாத ஆட்சி, அனைவருக்கும் சமநீதி, தர்மத்தை முன்னிறுத்திய ஆட்சி முறை என்பதன் அடையாளம் தான் செங்கோல் தமிழக மன்னர்களின் நீதி வழுவாத ஆட்சிக்கு சான்று செங்கோல். செங்கோல் பற்றி திருக்குறள், புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன.

தமிழக கலாசாரத்தினை, நமது முன்னோர்களின் ஆட்சி திறனை பறைசாற்றும் விதமாக, தேசமே அறிந்து கொள்ளும் விதமாக, மாண்புமிகு பிரதமர் அவர்கள் அதனை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மீண்டும் நிறுவினார். தற்போதைய பாராளுமன்ற கூட்டத் தொடரில், அரசியல் சுயலாபத்திற்காக, வாக்கு வங்கி அரசியலுக்காக தேசத்தின் தங்களே கலாச்சாரத்தையும், மாண்பினையும் காவு கொடுத்து, அந்நிய சித்தாந்தங்களே உயர்ந்தது என்ற மாயையை தொன்று தொட்டு மக்கள் மனதில் விதைத்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், நமது நாட்டின் மன்னர்கள் காமத்தில் திளைத்ததாகவும், அவர்களின் அடையாளமான செங்கோலை பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் மூச்சு முட்ட பேசினார். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் செங்கோல் தேவையில்லை என்கிறார். இவர்களின் தமிழின விரோத பேச்சிற்கு பாரதிய ஜனதா கட்சி தவிர, தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்ளும் எந்த கட்சியின் தலைவர்களும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

தமிழர்களின் கலாச்சார அடையாளத்தை சிறுமைப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்மொழிந்தார். விளவங்கோடு முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதாரணி வழிமொழிந்தார்.

தீர்மானம் – 7

முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களின் அறிக்கைக்கு கண்டனம்:

தமிழகத்தில் அரசு தனது கல்விக் கடமையை துவக்கும் முன்னரே, பல்வேறு தலைவர்கள், சமூகத்தினர் கல்வியினை நமக்கு அளித்துள்ளனர். தனியார் சமூக பங்களிப்பு கல்வியில் மற்ற மாநிலங்களை விட பெருமைக்குரியது தமிழகம். நாம் அனைவருமே மாணவர்களாக இருந்து வந்தவர்கள் தான். கல்விச்சாலைகளில் அரசியல் புகுந்ததில்லை. என்று கழகங்கள் தங்கள் சுயலாபத்திற்காக மாணவச் செல்வங்களையும் அரசியலில் ஈடுபடுத்த விரும்பினரோ, அன்று முதல் தான் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதிய சண்டைகள் ஆரம்பிக்கத் துவங்கின. நீதி நெறி மிகுந்த வகுப்புகள் அழித்தொழிக்கப்பட்டன.

ஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் சில பிரச்சனைகளுக்காக ஒட்டு மொத்த மாணவர்களின் ஒழுக்கத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ளது தான் சந்துரு அவர்களின் அறிக்கை. இந்த அறிக்கையானது,இந்து மத அடையாளங்களை மொத்தமாக அழித்தொழிப்பது. காலம் காலமாக எந்த அடையாளங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் கட்டிக் காத்ததோ, அந்த அடையாளங்களை அழிப்பதன் மூலம் நாட்டின் சமூகத்தின் அடையாளங்களை அழிக்கும் விதமாக ஒரு நீதிபதியின் அறிக்கை இருப்பது வேதனைக்குரியது.

மாணவர்களை பகடைக்காயாக்கி, பாரத கலாசாரத்தையே அழிக்க எடுத்த முன்னெடுப்பாக சந்துரு அவர்களின் அறிக்கையினை இந்த செயற்குழு பார்க்கிறது. மாணவர்கள் நெற்றியில் குங்குமம், விபூதி வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதின் மூலம், சமூக நீதிக்கு தாங்கள் தான் காவலர்கள் என்று கூறியவர்களின் பொய் முகத்தை இந்த அறிக்கை வெளிக்காட்டுகிறது. அரசியலமைப்பு சட்டம் வழங்கும் உரிமையை, தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் அடையாளங்களை அழித்தொழிக்க நினைக்கும் இந்த அறிக்கையினை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இத்தீர்மானத்தை மாநிலத் துணைத்தலைவரும், நெல்லை எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் முன்மொழிந்தார். அதை முன்னாள் மேயர் கார்த்தியாயினி வழிமொழிந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top