நாட்டிற்கு பெருமை சேருங்கள்: ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04.07.2024) கலந்துரையாடினார்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி வெகு விமர்சையாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை இந்த விளையாட்டுத் திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், ‘‘இந்த முறையும் நீங்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்’’ என ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியபோது கூறினார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூலை 4) கலந்துரையாடினார். கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து உள்ளிட்ட சில வீரர்கள் வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாகவும் பங்கேற்றனர். இது சம்பந்தமான காட்சிகள் தற்போது வெளியானது.

வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் உள்ளீர்கள். வெற்றி பெற்று திரும்பும் போது உங்களை வரவேற்கும் மனநிலையில் நானும் இருக்கிறேன். விளையாட்டு உலகின் நட்சத்திரங்களான உங்களை சந்திக்கவும், உங்களிடம் இருந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், உங்களின் கடின உழைப்பை புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறேன். அதேபோல, நான் எல்லோருடனும் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கிறேன்.

நாம் பாரிசுக்கு விளையாட செல்கிறோம்; நமது சிறந்த திறமையை வெளிப்படுத்தப்போகிறோம். ஒலிம்பிக் கற்றலுக்கான மிகப்பெரிய களம். கற்கும் மனப்பான்மையுடன் பணியாற்றுபவர்களுக்கு கற்க வாய்ப்புகள் அதிகம். குறை சொல்லி வாழ நினைப்பவர்களுக்கு வாய்ப்புகளே கிடைக்காது. நம்மை போன்ற பல நாடுகளை சேர்ந்தவர்களும் ஒலிம்பிக் போட்டிக்கு வருகிறார்கள். பல சிரமங்களையும், அசவுகரியங்களையும் எதிர்கொள்கிறீர்கள். ஆனால் உங்களின் இதயத்தில் நாடும், நமது தேசியக் கொடியும் உள்ளது. இந்த முறையும் நீங்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top