மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை மிரட்டும் மாவட்ட ஆட்சியர்: பெண் தொழிலாளர்கள் பரபரப்பு புகார்!

‘நீ என்ன ரவுடியா? உன்ன பாக்கேவே பிடிக்கல வெளியே போ’ என்று மனு அளித்த மாஞ்சோலை தேயிலை தோட்ட பெண் தொழிலாளர் ஒருவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு தற்போது 520 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு எடுத்து நடத்திய குத்தகை 2028ல் நிறைவு பெறுகிறது.

இருப்பினும் குத்தகை காலம் முடிவடைய இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் சூழலில் ஆலையை மூட முடிவு செய்தனர்.

தேயிலை பறிக்கும் பணியும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மாஞ்சோலையில் குழுவாக நின்று கடந்த சில நாட்களுக்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் விட்டு அழுதனர். இனி வரும் நாட்களில் மாஞ்சோலையில் எந்த பணிகளும் நடக்காது. ஊழியர்கள் வீடுகளை காலி செய்ய 45 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விருப்ப ஓய்வு பெற வலியுறுத்தி உடனடியாக வீடுகளை காலி செய்து செல்லும்படி, தேயிலை தோட்டத் தொழிலாளர்களிடம் அரசு அதிகாரிகள் சிலர் வந்து மிரட்டுவதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வரவழைத்து கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு படிவத்தில் கையெழுத்து பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த பேட்டியில்; தேயிலை தோட்டம் பற்றிய எனது கோரிக்கையே ஆட்சியருக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார். எனக்கு ஜூலை 14ம் தேதியோடு விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எங்களை வெளியேற்றக்கூடாது என்று சொல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தோம். ஏற்கனவே விருப்ப ஓய்வில் பலர் கட்டாயப்படுத்தி கையெழுத்து போடவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நான் இன்னும் கையெழுத்து போடவில்லை. கையெழுத்து போடவா அல்லது வேண்டாமா என்பதை கேட்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தோம்.

ஆனால் ஆட்சியர், நீ பேசாதம்மா? உன்னோட பேச்சு பிடிக்கவில்லை என்று சொல்கிறார். இதற்கு நான் என்ன பதில் சொல்வது சொல்லுங்கள்! நான்தான் தொழிலாளர்களிடம் பிரச்சனை செய்வதாகவும் கம்பெனி கொடுக்கிற பணம் சரியாக இருக்கிறதாகவும் ஆட்சியர் சொல்கிறார். கம்பெனி கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொண்டு அனைவரும் செல்வதுதான் சரி. எனவே என்னோட பேச்சை யாரும் கேட்க வேண்டாம் என ஆட்சியர் சொல்கிறார்.

நாங்கள் 5 தலைமுறையாக தோட்டத் தொழிலில் உள்ளோம். இங்குதான் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். மேலும் உனக்கு வீடு இருக்கு இல்லை , நீ ஏன் பேசுகிறாய் என ஆட்சியர் கேட்கிறார். எனக்கு வீடு இருப்பது அவருக்கு எப்படி தெரியும் சொல்லுங்க.. நீங்க கூட்டத்தில் பேசவே பேசாதீங்கனு தவிர்க்கிறார். இப்போது என்னுடைய கோரிக்கையை யாரிடம் சொல்வது சொல்லுங்கள். இப்போது எங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். எனது விருப்ப ஓய்வை ஆட்சியரே ரத்து செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். இப்படி ஒரு ஆட்சியரை யாரும் பார்த்திருக்க முடியாது. இவ்வாறு பெண் தொழிலாளர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top