அடுத்த 20 ஆண்டுக்கும் பா.ஜ.க., ஆட்சி தான்: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உறுதி!

‛‛நாட்டில் அடுத்த 20 ஆண்டுகளும் பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சி செய்யும்’’, என ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபாவில் இன்று (ஜூலை 03) நிகழ்த்திய உரையில் நன்றி தெரிவித்தலும் இருந்தது, காங்கிரசின் தவறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலும் இருந்தது.

ஜனாதிபதி உரை மீது தங்களது கருத்துகளை முன்வைத்த எம்.பி.,க்களுக்கு நன்றி. இந்த உரையில் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெற்று இருந்தன. தேசிய ஜனநாயக கூட்டணியை நம்பி, 3வது முறையாக மக்கள் ஆதரவு அளித்து உள்ளனர்.

60 ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறையாக நமது அரசு ஆட்சி அமைத்து உள்ளது. மக்கள் மகத்தான தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்கின்றனர். தேர்தலில், எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை மக்கள் தோற்கடித்து உள்ளனர். தேர்தலில், மக்கள் அளித்த தோல்வியை ஏற்க சில எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன. எங்களுக்கான வெற்றி மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை நிர்மாணிக்கும்.

அரசியல் சாசனத்தை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான். அரசியலமைப்பு சட்டம் நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல் உதவும். எனது அரசுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்ட புத்தகத்தை சிலர் கையில் வைத்துக் கொண்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.

மக்கள் கொடுத்த வெற்றியால், இந்திய பொருளாதாரம், 3வது இடத்திற்கு செல்லும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய பொருளாதாரத்தை 10 வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேற்றி உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகிறோம். இனிவரும் அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தான் இருக்கும்.

சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளது. ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வை மேம்படுத்தி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் வறுமைக்கு எதிரான போராட்டத்தை அரசு முன்னெடுக்கும். இந்த வளர்ச்சி என்பது ஆரம்ப கட்டம் தான். வறுமைக்கு எதிராக போர் துவக்கி உள்ளோம்.

இன்னும் பல படிகள் வளரப் போகிறோம். மாநகர, பெருநகர வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் வகுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 3வது வளர்ந்த நாடு என்ற பெருமையை அரசு படைக்கும். ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறோம்.

கடந்த 10 ஆண்டுளில் இல்லாத அளவிற்கு அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சி வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். சிறுநகரங்கள் கூட வரலாறு காணாத வளர்ச்சியை சந்திக்க உள்ளன. விவசாயிகளின் தேவைகளை கண்டறிந்து கடந்த 10 ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றியுள்ளோம். விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலையை இதுவரை இல்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்தோம்.

ஆனால் பொய்யை மட்டும் பரப்பிய இண்டி கூட்டணியினர் அவையில் உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். உண்மையை எதிர்கொள்ள முடியாமல் வெளிநடப்பு செய்துள்ளார்கள். மக்கள் பிரச்னைகளை பேச அவையில் அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆனால், மக்கள் பிரச்னைகளை பேச எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் நிலை கவலைப்படும் வகையில் இருக்கிறது. மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் ஒரு பெண்ணை தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன். அதுபற்றி எதிர்க்கட்சியில் உள்ள சீனியர் தலைவர்களும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. 1975ல் அரசியலமைப்பை தகர்த்து எமர்ஜென்சியை கொண்டுவந்தது காங்கிரஸ். எமர்ஜென்சியில் இருந்து 1977 தேர்தல் தான் அரசியலமைப்பை காப்பாற்றியது. அரசியலமைப்பை பாதுகாக்க தான் மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

காங்கிரஸ், நாட்டை தவறாக வழிநடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பங்குச்சந்தைகள் உயர்வை கண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் ஏன் மகிழ்ச்சியாக இருந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ‘ஹாட்ரிக்’ தோல்வி அடைந்ததாலா? 90 இடங்களுக்கு மேல் வென்றதாலா? காங்கிரஸ் தலைவர் கார்கே கூட முழு உத்வேகத்துடன் இருந்ததை பார்த்தேன். தோல்விக்கு யாரோ ஒருவர் (ராகுல்) மீது பழி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சுவர் போல பாதுகாத்தார்.

இதுபோன்ற சூழ்நிலையின்போது காங்கிரஸை சேர்ந்த குடும்பம், தலித்களையோ, பிற்படுத்தப்பட்டோரையோ தான் பயன்படுத்திக்கொள்ளும். மக்களவை சபாநாயகர் தேர்தலில் கூட தோற்றுவிடுவோம் எனத் தெரிந்தும் தலித் வேட்பாளரை போட்டியிடவைத்தனர். அதேபோல் 2022ல் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலிலும் சுஷில் குமார் ஷிண்டேவை நிற்க வைத்தனர்; 2017ல் மீரா குமாரரை நிற்க வைத்தனர். எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி.,க்கு எதிரான மனநிலையிலேயே காங்கிரஸ் இருக்கிறது.

அதே மனநிலையில் தான் ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரையும் கேட்க முடியாத வார்த்தைகளால் கூட காயப்படுத்தினர். காங்கிரசின் இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறேன். டெல்லியில் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் ஆம்ஆத்மி இணைந்து பேரணி நடத்தின; அமலாக்கத்துறை, சிபிஐ., தவறாக வழிநடத்தப்படுவதாக கூறினர். அவர்களே, கேரளாவில் அமலாக்கத்துறை, சிபிஐ மூலமாக கேரள முதல்வரை கைது செய்யுமாறு கூறினர்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் முதல்வராக இருந்தவருக்கு மதுபான ஊழலில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை அமலாக்கத்துறை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஆம்ஆத்மி கூறியது. அப்போது மட்டும் அவர்களுக்கு அமலாக்கத்துறை பிரியமானவர்களாக தெரிந்துள்ளனர். ஆம்ஆத்மி ஊழல் செய்வதாகவும், மதுபான ஊழலில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டியது. பிறகு இருவரும் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளனர். இப்போது சொல்லுங்கள், ஆம்ஆத்மி மீது நீங்கள் (காங்கிரஸ்) வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா?.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளை, காங்கிரஸ் செய்திருந்தால் 20 ஆண்டுகள் எடுத்திருக்கும். என்னைப் பொறுத்தவரை, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது தேர்தல் வெற்றி அல்லது தோல்விக்கான அளவுகோல் அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதற்கோ, தோற்க வேண்டும் என்பதற்காக மட்டும் நான் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை. ஊழல் என்பது ஒரு கரையான் என்று நான் நம்புகிறேன். இந்த தேசத்தை ஊழலில் இருந்து விடுவிக்கவும், ஊழலுக்கு எதிரான வெறுப்பை சாமானியர்களின் மனதில் வளர்க்கவும் நான் முழு மனதுடன் உழைக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளிநடப்பு செய்தனர். நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமரை பேசவிடாமல் தொடர்ந்து கூச்சிலிட்டவர்கள் இன்று மாநிலங்களவையிலும் அதைத் தொடர்ந்தனர். ஜனாதிபதி உரையின் மீது நன்றி தெரிவிப்பதற்கான அமர்வில் வேறு விஷயங்கள் பேச அனுமதி இல்லை என்ற விதிகளை சுட்டிக்காட்டிய பின் வேறு விஷயங்கள் பேச வேண்டாம் என கோரி கூச்சலிட்ட அவர்களின் செயல் நாடாளுமன்றத்தை முடக்குவது மட்டுமே குறிக்கோளாக கொண்டு அவர்கள் செயல்பட்டதை வெளிகாட்டியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top