100க்கு 99 அல்ல; 543க்கு 99 – காங்கிரஸை பங்கம் செய்த பிரதமர் மோடி!

மூன்றாவது முறையாக காங்கிரஸ் 100க்கும் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. இண்டி கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர வேண்டும் என்பதே மக்களின் தீர்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 02) அளித்த பதிலுரை:

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் பொய் பரப்பினாலும், மக்கள் அதனை நிராகரித்து எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்துள்ளனர். நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் வாக்களித்தனர். மக்கள் எங்களின் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்து வாக்களித்தனர். ஏழைகளின் நலனுக்காக எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையே மகேசன் சேவை என நாங்கள் செயல்பட்டதை அங்கீகரித்து உள்ளனர். தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சியினர் பிதற்றி வருவது கண்கூடாக தெரிகிறது.

இந்திய தேர்தல் முறையை கண்டு உலகமே வியந்து வருகிறது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டுள்ள எமது அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். எக்காரணத்தை கொண்டும் ஊழலை சகித்து கொள்ள முடியாது.

இந்தியாவுக்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்களின் தாரக மந்திரம். இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. வாக்கு வங்கி அரசியல் நாட்டை பிளவுபடுத்தும். வாக்கு வங்கி அரசியல் நாட்டை நாசப்படுத்தியது.

அனைவருக்குமான நீதி என்ற கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் தான் இந்த நாட்டை அழித்து கொண்டு இருந்தது. இந்த அரசியலுக்கு இம்முறை மக்கள் முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர். ஊழலுக்கும், திருப்திபடுத்தும் அரசியலுக்கும் மக்கள் முடிவு கட்டினர். எதிர்வரும் தலைமுறைக்கு, வலிமையான பாரதத்தை உருவாக்குவதன் மீதே எங்களின் கவனம் உள்ளது. உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது.

வளர்ச்சியடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தனர். 2047 ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார். அதனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம்.

காங்கிரஸ் கட்சி 100க்கு 99 பெறவில்லை. 543க்கே 99தான் பெற்றுள்ளனர். 100க்கு 99 இடங்களில் வெற்றி பெற்றதைப் போன்று பேசுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் இனி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கூச்சலிட்டபடியே இருக்க வேண்டியதுதான். மக்களின் தீர்ப்பை நேர்மையாக புரிந்துகொள்ள முயல வேண்டும். மக்கள் தீர்ப்பை போலி வெற்றியாக சித்தரிக்கக் கூடாது. தேர்தல்களில் தோல்வி அடைவதில் காங்கிரஸ் கட்சி உலக சாதனை படைத்துள்ளது.

மேலும், தென்மாநிலங்களில் பாஜக வளர்ச்சியைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதை மக்களவை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளர்கள் கணிசமான இடங்களில் இரண்டாவது இடத்திற்கு வந்தனர்.

கேரள மாநிலம் திரிச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, கேரளத்தில் பாஜக வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது, மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தல் நடத்த 4 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியானாவிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். ஆனால் 13 மாநிலங்களில் ஜீரோ வாங்கிய காங்கிரஸ் தங்களை ஹீரோ போல காட்டிக் கொள்கிறது.

இந்தியாவை, 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக்க 24/7 உழைக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த நாடு முன்னேறாது என்றுதான் நாட்டு மக்கள் நினைத்திருந்தார்கள். ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையால்தான் நாட்டு மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க கடுமையாக உழைக்கத் தயார், 

மேலும், செயல்படுத்த முடியாத அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு ஊழலை மறைக்க மற்றொரு ஊழல் நடந்துள்ளது. 2014ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியர்கள் தன்னம்பிக்கையை இழந்திருந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை செய்துள்ளது பாஜக. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்தது. தற்பொழுது நாடு முழுவதும் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அளிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருள்களைப் பெறுவதற்குக் கூட மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் லஞ்சம் மலிந்திருந்தது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிரவாதிகளை, அவர்களது நாட்டுக்கேச் சென்று தாக்கியுள்ளோம். தற்போது தீவிரவாதிகளை சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி அழித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் மனதில் நம்பிக்கை பிறந்துள்ளது. மூன்றாவது முறை ஆட்சியில் அமர்ந்துள்ளோம். மும்மடங்கு வேகத்துடன் செயல்படுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி சொன்ன குட்டி ஸ்டோரி:

சக மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய மாணவனிடம், எதற்காக என்று ஆசிரியர் கேட்டார். தான் 99 மார்க் எடுத்ததாக அந்த மாணவன் கூறினான். அவன் 100க்கு 99 மார்க் வாங்கவில்லை, 543க்கு 99 மார்க் வாங்கி பெயில் ஆகியிருக்கிறான் என்பதை எப்படி புரியவைப்பது? என கூறினார்.

பிரதமர் 99 மார்க் என்று சொன்னது காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியைத்தான் என்று அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2 மணி நேரம் 16 நிமிடங்களில் மக்களவையில் தனது பதில் உரையை நிறைவு செய்தார். பிரதமர் பேசிய பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி பதிலுரையை துவங்கியது முதல் இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் கோஷம் போட்டபடியே இருந்தனர். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.,க்கள் அனைவரும் அவை நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்படும் நேரத்தில் பேசுங்கள். பிரதமர் பேச்சின் போது எதிர்க்கட்சியினரின் அமளி மிகவும் தவறான செயல் என கண்டித்தார். ஆனால் சபை நாகரீகத்தை இண்டி கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கடைப்பிடிக்காமல் கூச்சலிட்டு வந்தனர். பிரதமர் நாட்டிற்காக செய்த பல்வேறு திட்டங்கள் குறித்து உரையாற்றி வந்ததை கவனித்து வந்த மக்கள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளுக்கு கட்டாயம் கண்டனம் தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top