சென்னையில் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புள்ள பயங்கரவாதி கைது!

வங்கதேசத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பில் தொடர்புடைய அன்சார் அல் இஸ்லாம் என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பில் புதிதாக சஹதத் என்ற குழு உருவாகியுள்ளது. குறிப்பாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இந்த தீவிரவாத குழு தொடர்புடைய ஐந்து பேரை வங்கதேச தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தங்களுடைய தீவிரவாத அமைப்பை இந்தியா முழுவதும் பரப்புவதற்கு திட்டமிட்டது தெரியவந்தது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஊடுருவி, அங்குள்ள இளைஞர்களை அன்சார் அல் இஸ்லாம் தீவிரவாத அமைப்பின் சஹதத் குழுவில் ஆட்களை சேர்ப்பதற்கு ஹபிபுல்லா என்ற கல்லூரி மாணவரை மூளைச்சலவை செய்தது தெரியவந்துள்ளது.

வங்கதேச அதிகாரிகள் தங்கள் விசாரணையில் வெளிவந்த தகவலை மேற்கு வங்க மாநில போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சிறப்பு தனிப்படை போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு ஹபிபுல்லா என்ற கல்லூரி மாணவரை கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவனோடு தொடர்புடைய மேலும் 5 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்பு வைத்துக் கொண்டு ஆள் சேர்க்கும் பணியிலும், நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து தப்பித்து வரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. அன்சார் அல் இஸ்லாம் என்ற இந்த தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக செயல்பட்ட ஹபிபுல்லாவுடன் தொடர்புடைய கூட்டாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் மேற்கு வங்க போலீசார் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஹபிபுல்லா மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோருடன் செல்போன் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை மூலமாக தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னையில் இந்த அமைப்பில் தொடர்புடைய நபர் பதுங்கி இருப்பது மேற்குவங்க போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து மேற்குவங்க தனிப்படை போலீசார், சென்னை வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டல் ஒன்றில் இஸ்திரி ஊழியராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், கோயம்பேடு போலீசாருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோயம்பேடு அருகே காளியம்மன் கோயில் சாலையில் சம்பந்தப்பட்ட நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர், மேற்குவங்கத்தை சேர்ந்த 30 வயதுடைய அனோவர் ஷேக் என்பது தெரியவந்தது. இவர், வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அன்சார் அல் இஸ்லாம் அமைப்பின் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத சஹதத் குழுவில் இணைந்து பல இந்திய இளைஞர்களை தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

சென்னையில் தங்குவதற்கு பணம் தேவைப்பட்ட காரணத்தினால் விருகம்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இஸ்திரி ஊழியராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பயங்கரவாதியான அனோவர் ஷேக்கிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த மேற்குவங்க போலீசார் அவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ட்ரான்சிட் வாரண்ட் பெற்று மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த ஆறு மாதமாக தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அனோவர் சென்னையில் யார் யாரிடம் தொடர்பு வைத்துள்ளார். தமிழகத்திலும் இந்த அமைப்பிற்கு ஆட்களை சேர்த்துள்ளாரா என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

திமுக ஆட்சியில் தமிழ்நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் குஜராத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகள் சென்னையில் முகாமிட்டிருந்தனர். அதற்கு முன்னர் பெங்களூருவில் உள்ள உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர்கள் சென்னையில் ஒரு மாதம் தங்கி பல்வேறு வெடிமருந்துகளை வாங்கி சென்றுள்ளனர். அந்த வரிசையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் முகாமிட்டிருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சம்பவங்கள் , பயங்கரவாதிகள் தமிழகத்தில் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வருவதை காவல்துறை கண்டு கொள்ளவில்லையா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top