நெருக்கடி காலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை சிறையில் அடைத்தவர் இந்திரா காந்தி : தலைவர் அண்ணாமலை!

நெருக்கடி காலத்தின் போது ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேரை சிறையில் அடைத்தவர் இந்திரா காந்தி என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று (ஜூன் 25) நெருக்கடி நிலை கால போராட்ட வீரர்கள் சங்கம், தமிழ்நாடு மற்றும் லோக்தந்த்ரா சேனை சங்கம் தேசிய அமைப்பின் தமிழகப் பிரிவின் சார்பில் கருப்பு தினம் நினைவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கருப்பு தினம் நினைவுக் கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற நிலை வந்த போது, ஜனநாயகத்துக்கு விரோதமாக நெருக்கடி நிலையை ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு அறிவித்து, சுமார் ஒரு லட்சத்துப் பதினான்காயிரம் பேரைக் கைது செய்து சிறையிலடைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் சுமார் 75க்கும் அதிகமான திருத்தங்களை மேற்கொண்டது காங்கிரஸ் கட்சி. அவற்றில் பெரும்பாலானவை, நெருக்கடி காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு, சர்வாதிகாரம் வழங்கியவை.

ஆனால், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளில் கொண்டு வந்த 8 திருத்தங்களும், பட்டியல் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு காலத்தை அதிகப்படுத்தியது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என அனைத்தும் சமூக நீதி சார்ந்தவை. இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசக் கூடாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்க முடியும் என்றார்.

மேலும், இக்கூட்டத்தில் நெருக்கடி நிலை கால போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவர் M.கந்தகுமார், பொதுச்செயலாளர் ஓம்சக்தி G. பாபு, மற்றும் நிர்வாகிகள் அனைவரும் நெருக்கடி காலத்தில் தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களையும், அடக்குமுறையையும் பகிர்ந்து கொண்டனர்.

நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழக பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் அவர்கள், நெருக்கடி கால போராட்ட வீரர்களைக் கௌரவித்து, சிறப்புரையாற்றினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top