எமர்ஜென்சியை பிறப்பித்த காங்கிரசுக்கு அரசியலமைப்பு சட்டம் பற்றி பேச உரிமை இல்லை: பிரதமர் மோடி!

எமர்ஜென்சியை பிறப்பித்த காங்கிரஸ் கட்சிக்கு அரசியலமைப்பு சட்டம் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திரா காந்தியால், நாட்டில் முதல் முறையாக எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அவசர நிலை பிறப்பிக்கப்பட்டவுடன் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூகவலைத்தளத்தில் இன்று (ஜூன் 25) வெளியிட்டுள்ள பதிவு:

எமர்ஜென்சியை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்று. காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்திய எமர்ஜென்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி அவர்கள் அடியோடு தகர்த்தனர் என்பதை நினைவூட்டுகிறது.

எமர்ஜென்சியை பிறப்பித்த காங்கிரஸ் கட்சிக்கு நமது அரசியலமைப்பு சட்டம் மீது தங்களது அன்பை வெளிப்படுத்த உரிமை இல்லை. கூட்டாட்சி முறையை அழித்தவர்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளை மீறியவர்கள் இவர்கள் தான். எமர்ஜென்சியை அமுல்படுத்துவதற்கு வழிவகுத்த மனநிலை அவர்களின் கட்சியினரிடையே உயிர்ப்புடன் இருக்கிறது.

ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக, அப்போதைய காங்கிரஸ் அரசு ஜனநாயகக் கொள்கையை அடியோடு புறக்கணித்தது. காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியாதவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். நலிந்த பிரிவினரை குறிவைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top