அமைச்சர் முத்துசாமியை பதவிநீக்க வலியுறுத்தி ஆளுநரை சந்தித்தார் தலைவர் அண்ணாமலை!

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க., மூத்த நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ.க., சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று (ஜூன் 24) சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க., மூத்த நிர்வாகிகளுடன் ஆளுநரை தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, இன்றைய தினம், தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்தோம்.

மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும், மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top