திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து : திமுக எம்.பி.,யை வறுத்தெடுத்த பா.ஜ.க., பிரமுகர் ப்ரதீப்!

5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடங்களா? என தென் சென்னை திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனை பாஜக பிரமுகர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இப்படி மோசமான சாலைகளை சரி செய்ய அடுத்த திட்டம் என்ன என்பதையும் அவர் கேட்டுள்ளார்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் பிரதீப் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கரணையில் உள்ள ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸில் இருந்து காமாட்சி மருத்துவமனைக்கு இடையிலான 5 கி.மீ. தூரத்தை கடக்க 45 நிமிடங்கள் ஆனது. இன்று காலை வாகனங்கள் இன்ச் இன்ச்சாக நகர்ந்து கொண்டிருந்தது. இது பற்றி யாருக்கும் கவலையில்லை. நன்றி திமுக என கிண்டலாக பதிவிட்டிருந்தார். மேலும் மற்றொரு ட்வீட்டில் இந்த பிரச்சினை குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் சிந்தித்திருக்க வேண்டும்.

இது பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு மாறியுள்ளது. பள்ளிக்கரணையிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டேன். அசோக் பில்லரை வந்தடையவே 10.30 மணி ஆகிவிட்டது. பள்ளிக்கரணை டூ வேளச்சேரி பகுதியில்தான் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலை போக்க திமுகவின் அடுத்த திட்டம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியின் அவலத்தால் சென்னையின் சாலைகள் கனமழைக்கு மட்டுமல்ல சிறிய அளவிலான மழைக்குக் கூட கடும் சேதம் அடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதி மக்கள் மழையை கண்டாலே அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சாதாரண மழைக்கே இடுப்பளவு தண்ணீரும் மோசமான மழைக்கு 10 அடிக்கு மேலும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மோசமாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

டிசம்பர் மாதத்திற்கு முன்பாக சென்னையில் உள்ள சாலைகளை திமுக அரசு தரமான முறையில் போட்டு, கால்வாய்களை தூர்வாரினால் மட்டுமே மழைத் தண்ணீர் தேங்குவதில் இருந்து தப்பிக்க முடியும் என இப்பவே மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top