சர்வதேச யோகா தினத்தில் ஈஷாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது : தலைவர் அண்ணாமலை!

10வது சர்வதேச யோகா தினத்தில் கோவை மக்களுடன் இணைந்து ஈஷாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 21) 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை பங்கேற்று யோகாசனங்களை செய்தார்.

இதன் பின்னர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா என்று செய்தியாளர்கள் தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் அளித்த பதில்;

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமற்றது. ஆனால் பூரண மதுவிலக்கு சாத்தியம் எப்போது என்றால், கள்ளுக்கடைகளை திறந்தால் மட்டுமே. கள்ளச்சாராயம் என்பது விஷம். அதனை குடிப்பவர்கள் உயிரிழக்கின்றனர். ஆனால் கள்ளு என்பது இயற்கையில் இருந்து கிடைப்பவை.

எனவே தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்துவிட்டு அதற்கு மாற்றாக கள்ளுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், கள்ளச்சாராய விவகாரத்தில் முதலமைச்சர்  சுய பரிசோதனை  செய்துகொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தலைவர் கூறினார்.

முன்னதாக யோகா குறித்து எக்ஸ் வலைத்தளப்பதிவில் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீரிய முயற்சியால், கடந்த பத்து ஆண்டுகளில், ஆரோக்கியம், அமைதி மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை உறுதிப்படுத்த, கோடிக்கணக்கான மக்கள், யோகாவை தங்கள் வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தினம், பத்தாவது சர்வதேச யோகா தினத்தை, தமிழக பா.ஜ.க., சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, கோவை ஈஷா யோகாவில் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top