கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் : தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை இன்று (ஜூன் 20) நேரில் சந்தித்து தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை 37 பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்துள்ளனர். மேலும் 95 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த செய்தி கேள்விப்பட்ட உடன் தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று நேரில் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதன் பின்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்த பின்னர்  தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் 29 குடும்பத்தாரை சந்தித்துவிட்டு தற்போது அரசு மருத்துவமனை வந்துள்ளோம். உயிரிழந்தவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர். தினமும் வேளைக்கு சென்று அன்றைக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்தும் நிலையில் உள்ளவர்கள். எனவே நாளை மறுநாள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து பாஜக சார்பில் ஒரு லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும்.

அதன் பின்னர் ஏ.ஜி.சம்பத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்பத்தாரை அவர் சென்று சந்தித்து அவர்களின் நிலை குறித்து ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பார். நாங்கள் சந்தித்து வந்த குடும்பத்தினர் பலர் எங்களுக்கு மோடி வீடு வேண்டும், முத்ரா திட்டத்தில் கடனுதவி வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆய்வறிக்கை கிடைத்த பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வறுமைக்கோட்டில் இருந்து மேலே வருவதற்காக பாரதிய ஜனதா கட்சி உதவி செய்யும்.

மேலும், இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக என்னிடம் பேசினார். தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். இருவருமே கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரித்தார்கள். மேலும், ஆய்வறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த பேட்டி முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி களநிலவரம் தொடர்பாக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிக்க உள்ளேன்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தில் திமுகவினர் பின்னி பிணைந்துள்ளனர். மாவட்டத்தின் தலைநகர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்துள்ளது. மருத்துவமனை உள்ளே சென்று மருத்துவர்களிடம் விசாரித்தபோது ஒவ்வொருவரும் இரண்டு, மூன்று நாட்களாக கள்ளச்சாராயம் குடித்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர்.

நேற்று காலையில் முதல் உயிர் 6.10 மணிக்கு போனதாக மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் மூன்று நாட்களாக யாரெல்லாம் சீரியஸாக இருக்கிறார்களா அவர்கள் அனைவருமே வேறு, வேறு காலத்தில் கள்ளச்சாராயம் அருந்தியிருக்க வேண்டும். அப்படி என்றால் ஒரே நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. சர்வ சாதாரணமாக கள்ளச்சாராயம் அனைத்து இடங்களிலும் புழங்குவதை பார்க்கிறோம். அதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் கேட்பது உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான்.

கடந்த முறை செங்கல்பட்டு, மரக்காணத்தில் 22 அப்பாவிகள் இறந்தபோது அப்பவே நாம் கூறினோம். அதனுடைய முதல் குற்றவாளி மருவூர் ராஜா என்பவருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி குற்றச்சாட்டு வைத்திருந்தோம். அதற்கான புகைப்படம் ஆதாரங்களையும் அப்போது வெளியிட்டிருந்தோம். ஆனால் அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போன முறை முதல்வர் ஸ்டாலின் சொன்னார், இதுதான் கடைசி சாவு இனிமேல் நடைபெறாது என்றார். ஆனால் இன்று 38ஐயும் தாண்டி உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. 140க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவக்கல்லூரிக்கு வந்துள்ளனர். நான் பார்த்த வரையில் 15க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

20 பேர் மிகவும் கவலைக்குரியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். இந்த சமயத்தில் எங்களின் கோரிக்கை அமைச்சர் முத்துசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரது வேலை கள்ளச்சாராயத்தை தடுப்பதுதான். அதை முத்துசாமி என்ற தனிமனிதத் தப்பு என்று சொல்லவில்லை. திமுக அரசின் குற்றத்துக்கு முதலில் முத்துசாமி பொறுப்பேற்க வேண்டும்.

இரண்டாவது கடந்த 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் 360வது பாயிண்ட் கூறியதில், மதுபானக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என தெரிவித்துள்ளனர். ஆனால் இன்றைக்கு டாஸ்மாக்கின் வருமானம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கும்போது மதுபானக்கொள்கையே தோல்வியுற்றுள்ளது.

அதனை முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டு, தார்மீக பொறுப்பேற்று நாளை ஆயிரம் டாஸ்மாக் கடையை மூடுவோம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top