திமுக அரசின் அலட்சியத்தாலே கள்ளச்சாராயப் பலிகள் நடந்துள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன்!

கள்ளக்குறிச்சியில் போலி திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (ஜூன் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சியில் போலி திராவிட மாடல் அரசின் அலட்சியத்தால் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கள்ளக்குறிச்சி கருணாகுளம் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 16 பேர் பலியாகியுள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரடைந்தேன்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் மது மற்றும் போதை பொருட்கள் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை பலமுறை சுட்டிக்காட்டியும், மக்கள் மீது அக்கறை இல்லாத போலி திராவிட மாடல் அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.

ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை பல நாட்களாக நடந்துள்ளது. புகார்கள் பல இருந்த போதும் அதனை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவால் தற்போது கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் இறந்துள்ள துயரச் சம்பவம் நடந்தேறி உள்ளது.

இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதுடன் கள்ளச்சாராயத்தால் இறந்து போன நபர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டையும் தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

அதோடு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top