குமரி முனையில் ‘தபஸ்வி’ யாக இரண்டாவது நாள் தியானத்தில் பிரதமர் மோடி!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையின் மீது அமைந்துள்ள மண்டபத்தில் இரண்டாவது நாள் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி. காவி உடை அணிந்த அவர் கண்களை மூடி மனமுருக மந்திரங்கள் சொல்லி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1ம் தேதி) நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று மாலை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 5.08 மணியளவில் வந்தார். சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மாலை 5.40 மணியளவில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு சென்றார் பிரதமர் மோடி. அப்போது தமிழர் பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்து, சால்வை போர்த்தி இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு வருவது இதுவே முதல்முறை. பகவதியம்மன் திருவுருவப் படத்தை பிரதமர் மோடிக்கு வழங்கி கோவில் மேலாளர் ஆனந்த் வரவேற்றார். கோவில் கொடிமரத்தை  சுற்றி வந்து வணங்கிய பிரதமர், பகவதியம்மன் சன்னதிக்கு சென்று அம்மனை வழிபட்டார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகவதியம்மன் கோவிலில் இருந்து மாலை 6 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தர்’ படகில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறைக்கு சென்றார் பிரதமர் மோடி. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மாலை 6.15 மணியளவில் சென்றார். விவேகானந்தர் பாறைக்கு தியானம் செய்ய வந்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

பின்னர் தியான மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி ஆகியோரை வழிபட்டார். பின்னர் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி வணங்கினார். பின்னர் பிரதமர் மோடிக்கு இளநீர் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை தொடங்கினார். 

இன்று (31.05.2024) இரண்டாவது நாளாக தியானத்தைத் தொடர்கிறார் பிரதமர் மோடி. ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டு வருகிறார் . நாளை மாலை வரை வரை 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்கிறார். தியான மண்டபத்தில் இருந்து நாளை மாலை 3 மணியளவில் அவர் வெளியே வருகிறார். பின்பு அவர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு குமரி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரை, ரவுண்டானா சந்திப்பு, மகாதானபுரம் சந்திப்பு மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறையை சுற்றி கடற்படை கப்பலில் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மரைன் போலீசார், கமாண்டோ நீச்சல் வீரர்களும் விவேகானந்தர் பாறையை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விவேகானந்தர் பாறையைச் சுற்றியும் கன்னியாகுமரி கடல் பகுதியை சுற்றியும் ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து இன்று காலை சூரிய உதயமானபோது பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது அவர் காவி உடை அணிந்திருந்தார். கையில் ருத்திராட்ச மாலை வைத்திருந்தார். அதன்பிறகு தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்து வருகிறார். இன்று இரண்டாவது நாளாக தியானத்தை தொடர்ந்து வருகிறார் பிரதமர் மோடி.

 சீறிப்பாயும் கடல் அலைக்கு நடுவே அமைதியான முறையில் பிரதமர் மோடி தியானம் செய்து வருவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top