நேரு விட்டுக்கொடுத்த நிலத்தில்தான் சீனா மாதிரி கிராமத்தை உருவாக்குகிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

அப்போது பிரதமராக இருந்த நேரு விட்டுக் கொடுத்த நம்நாட்டின் நிலப்பரப்பில்தான் சீனா மாதிரி கிராமத்தை உருவாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அருணாசல பிரதேசம் அருகே சீனா முன்மாதிரி கிராமத்தை உருவாக்கி வருவதாகவும், கிழக்கு லடாக்கில் உள்ள நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

சீனா தற்போது கட்டமைத்து வரும் கிராமம் 1950-களின் இறுதியில் நேரு பிரதமராக இருந்தபோது சீனா கைப்பற்றிய இடம். இந்த சர்ச்சைக்குரிய கிராமம் லோங்ஜு என்ற இடத்தில் உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் பதிவுகள் அல்லது சீனாவுடனான நமது எல்லைப்பிரச்சினை தொடர்பான ஏதேனும் ஒரு புத்தகத்தை படித்தால் இந்த உண்மை தெரியவரும். 1959-ல் சீனர்கள் லோங்ஜுவின் ஒரு பகுதியை கைப்பற்றினர். பின்னர் 1962-ல் படையெடுத்து அதை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டனர்.

நேரு 1959-ல் நாடாளுமன்றத்தில், “மன்னிக்கவும். அது என் கையை விட்டு போய்விட்டது என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குப் பகுதியில் சீனா பாலம் கட்டி வருகிறது. அதுவும் 1962 போரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதிதான்.

சியாச்சினில் இந்தியாவின் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படும் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனா சாலை அமைத்து வரும் இடத்தையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியாக மாற அனுமதித்தவரும் அப்போது பிரதமராக இருந்த நேருதான். அதன் பிறகு 1963-ல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்த சுல்பிகர் அலி பூட்டோ சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு 5,180 சதுர கி.மீ. நிலத்தை சீனர்களிடம் ஒப்படைத்துவிட்டார்.

நேரு விட்டுக்கொடுத்து அந்த நிலத்தை பூட்டோ சீனாவிடம் வழங்கியதற்கு தற்போது மோடியின் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றன.

இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top