திராவிட மாடல் பேருந்து : ஓடும் போது கழன்று ஓடிய சக்கரம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள வடரங்கத்திலிருந்து சீர்காழிக்கு நேற்று (மே 16) அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஓட்டுநர் அன்பழகன் பேருந்தை ஓட்டினார்.

பனங்காட்டாங்குடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் இடதுபுறம் முன்பக்க சக்கரம் கழன்று, பேருந்துக்கு முன்னே தனியாக சாலையில் ஓடியது. இதைக்கண்ட ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு, உடனடியாக சாலையோரம் பேருந்தை நிறுத்தினார். பின்னர், பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

இதனால் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியதைப் பார்த்த பயணிகளும், சாலையில் சென்ற பொதுமக்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

பேருந்து இன்னும் சிறிது தொலைவு சென்றிருந்தால், அருகில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும். ஓட்டுநரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீஸார், அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் அரசுப் பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே உருவாகியுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாமலேயே பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இது போன்ற அலட்சியத்தால் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்து விபத்தில் சிக்க நேரிடுகிறது.

சமீபத்தில் கூட திருச்சியில் ஓடிக்கொண்டிருந்த நகரப் பேருந்தில் இருந்து இருக்கையுடன் சேர்ந்து நடத்துநரும் பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அரசுப்பேருந்துகளின் பராமரிப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்துதான், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பேருந்துகளின் தன்மை குறித்து முழுமையான ஆய்வு நடத்தவும், பேருந்துகளை முறையாகப் பராமரிக்குமாறும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார்.

ஆனால் பேருந்துகளை சரியாக திராவிட மாடல் அரசு பராமரித்திருந்தால் இது போன்ற விபத்துக்களை தவிர்த்திருக்கலாம் என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top