கெஜ்ரிவாலுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன்: ஜூன் 2ம் தேதி சரணடைய கெடு!

மதுபான ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், 5 முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது.

டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபானக் கொள்கையில் ஆம் ஆத்மி அரசு முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் ஆம் ஆத்மி அரசுக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனது கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (மே 10) விசாரணை நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரை வரும் ஜூன் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது.

 கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம் 5 முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

1. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.

2. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனாவின் ஒப்புதல் பெற்ற கோப்புகளுக்கு அவசியமானால் கையெழுத்திடுவது தவிர, வேறு அலுவல் சார்ந்த கோப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்து போடக்கூடாது.

3. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு குறித்து, குறிப்பாக, அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டு, தான் கைதாகியுள்ள சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது.

4. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான வழக்கு சம்பந்தப்பட்ட எந்த சாட்சியுடனும் தொடர்புகொள்ளக் கூடாது, டெல்லி மதுபான கொள்கை வழக்குடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ கோப்புகளை அணுகுவது தடை செய்யப்பட்டுள்ளது.

5. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 50,000 மதிப்புள்ள ஜாமீன் பத்திரங்களையும், அதே தொகைக்கு ஒரு உத்தரவாத பத்திரத்தையும் சிறைக் கண்காணிப்பாளர் ஏற்கும் வகையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு 5 நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top