ஹிந்து விரோத சித்தாந்தத்தை பின்பற்றாததால் புறக்கணிக்கப்பட்டேன்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராதிகா கேரா!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடிய பெண் ஒருவர், கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் ராதிகா கேரா. இவர், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ராதிகா கேரா, காங்கிரஸ் கட்சியில் மே 5 அன்று அதிரடியாக விலகினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராதிகா கேரா நேற்று (மே 07) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியில் தன்னை அவமரியாதை செய்வது குறித்து கட்சி உயர் தலைவர்களுக்கு பலமுறை புகார் விடுத்தும் யாரும் எனக்கு உதவவில்லை. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது, காங்கிரஸ் தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா, என்னை மது அருந்தும்படி வற்புறுத்தினார். அத்துடன், போதையில் அவர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் எனது கதவைத் தட்டினார். சத்தீஸ்கர் பிரிவின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் சுஷீலின் அவமரியாதை நடத்தை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், பூபேஷ் பாகேல் மற்றும் பவன் கேரா ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தி யாரையும் சந்திக்கவில்லை. மக்களை 5 நிமிடம் மட்டுமே கை அசைத்துவிட்டு தனது டிரெய்லருக்கு திரும்பிச் சென்றார். அவரது நியாய யாத்ரா பெயருக்காக இருந்தது. அவர் ஒரு பயண வலைப்பதிவாளராக மாற விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் அங்கு டிராவல் வ்லாக்கிங் செய்து கொண்டிருந்தார். நான் பிரியங்கா காந்தியைச் சந்திக்க முயற்சித்தேன். ஆனால் அவர் யாரையும் சந்திக்கவில்லை. நான் ஒரு பெண், என்னால் சண்டையிட முடியும். ஆனால், பெண் என்றால் அடிபடுவீர்கள் என்பதுதான் காங்கிரஸின் முழக்கம்.

காங்கிரஸ் ராமர், சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோதம் என்று நான் எப்போதும் கேள்விப்பட்டேன், ஆனால் நான் அதை நம்பவில்லை. என் பாட்டியுடன் ராமர் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பியதும், எனது வீட்டின் வாசலில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கொடியை வைத்தேன். இதனால், காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கத் தொடங்கியது. அதன்பிறகு நான் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடும்போதெல்லாம், தேர்தல் நடக்கும் சமயத்தில் ஏன் அயோத்திக்குச் சென்றீர்காள்? என்று என்னைத் திட்டித் தீர்த்தனர்” என்று கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top