இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல பாஜக: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

‘பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியல்ல. இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

பிகாரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (மே 02) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து சிறுபான்மை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இப்போது உங்கள் வாக்குகளைப் பெறுவதற்காக நலம்விரும்பிகள் போல நடித்து, பின்னர் முகத்தில் சேற்றை வீசுவார்கள். எனவே, இஸ்லாமிய சகோதரர்கள் அவர்களை நம்பிவிடக் கூடாது.

பாஜக ஹிந்து – இஸ்லாமிய பிரிவினையைத் தூண்டுகிறது என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்றும் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. உண்மையில் பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியல்ல. இஸ்லாமிய மதத்தின் மையமாகத் திகழும் அரபு உலகைச் சேர்ந்த 5 நாடுகள் தங்களுடைய உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளன.

முத்தலாக் தடைச் சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது இஸ்லாமிய சகோதரிகள் இந்த விவாகரத்து முறையால் சொல்ல முடியாத துயரங்கள் பலவற்றை அனுபவித்து வந்தனர். முழுவதும் அவர்களின் நலன் கருதியே முத்தலாக் முறையை பாஜக அரசு தடை செய்தது. இதனை இஸ்லாமிய பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் மனமுவந்து வரவேற்றனர். பாஜக அரசு நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் சமமாகவே பார்க்கிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வது உறுதி. இதற்கான முதற்படி சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தொடங்கிவிட்டது.

ஆனால், இதனை வைத்தும் எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. சூரத்தில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து 28 வேட்பாளர்கள் மக்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதில் இருவர் காங்கிரஸ் கட்சியையும், மூன்று பேர் சமாஜவாதி கட்சியையும் சேர்ந்தவர்கள் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top