இந்திய மொழிகளில் மூத்த மொழி தமிழ் : கிருஷ்ணகிரியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த மாநிலம், இந்தியாவில் உள்ள மொழிகளில் மிகவும் மூத்த மொழி தமிழ் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்;

ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும் போது மனம் அமைதி கொள்கிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவி பெருமைப்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான்.
இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யூபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடு முழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார். நாடு முழுவதும் தமிழ் மொழியை கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார். தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த மாநிலம்; இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ்.

உலகில் 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும்போது இந்தியாவில் மோடி 6ஜி சேவை வழங்க முயற்சி செய்து வருகிறார். நாட்டில் ராணுவ கப்பல் கட்டும் அளவிற்கு இந்தியா உயர்ந்து உள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top