எனது போன் ஒட்டுக் கேட்பு: தேர்தல் முடிந்தவுடன் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறை செல்வார்கள்: அண்ணாமலை அதிரடி!

எனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த பின்னர் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறை செல்வார்கள் என கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘‘தமிழகத்திற்கு ‘ரோடு ஷோ’ என்பது புதிது. பா.ஜ.க.வினர் நடத்துவது ‘ரோடு ஷோ’ அல்ல; மக்கள் தரிசன யாத்திரை’’ என தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர் அண்ணாமலை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுகிறார். நான் பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டியளிப்பதில்லை. திமுக.,வுக்கும், பா.ஜ.க.,வுக்கும் தான் போட்டி. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி திமுக.,வை மட்டும் குற்றம் சாட்டுகிறார்.

இ.பி.எஸ் ‘ரோடு ஷோ’ நடத்தினால் எவ்வளவு பேர் வருகிறார்கள் என பார்ப்போம். அவர்கள் வீதியில் வந்தால் யாரும் பார்ப்பதில்லை. தமிழக தலைவர்கள் பேசும் கூட்டங்களில் எல்லாம் மக்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு 500 பேருக்கு ஒரு சூப்பர்வைசரை வைத்து கண்காணித்து கூட்டம் சேர்க்கின்றனர். அந்த கட்சி தலைவர் பேசி முடிக்கும் வரை அங்கே உட்கார்ந்தால் தான் ரூ.250 பணம் கொடுப்பார்கள்.

பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தினால் ஒருபோதும் மக்கள் வரமாட்டார்கள். ஆனால் பா.ஜ.க., தலைவர்கள் வீதிக்கு வந்து மக்களை பார்க்கின்றனர்; சாதாரண மக்களும் மோடியை பார்க்க வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இது ‘ரோடு ஷோ’ இல்லை; மக்கள் தரிசன யாத்திரை. மக்களை தரிசிப்பதற்காகவே பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க., தலைவர்கள் தமிழகம் வருகின்றனர். ஒரு பிரதமர் இப்படி மக்கள் அருகில் வந்து பார்க்கிறார் என்றால் மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பை காட்டுகிறது. மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் ரோடு ஷோ செல்ல தயாரா?

பா.ஜ.க., பற்றி தவறான பிம்பத்தை 60 ஆண்டுகளாக திமுக கட்டமைத்துள்ளது. ‘ஜி’ என்று சொன்னால் கெட்டவர்கள் என்பது போல் உருவாக்குகிறார்கள். 2024 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் இது போன்ற தவறான கட்டமைப்பு சுக்குநூறாக உடைந்துபோகும்.

ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி கொங்கு மண்டலம் யாருடையது என்பதை பார்த்து விடுவோம். பண அரசியல் என்ற பேயை கோவை தொகுதி மக்கள் விரட்டுவார்கள்; தமிழகத்திற்கே கோவை மக்கள் வழிகாட்டுவார்கள். வேப்பிலையோடு காத்திருக்கும் கோவை தொகுதி மக்கள் ஜூன் 4ம் தேதி பண அரசியல் பேயை ஓட்டிவிடுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் வரத்தான் போகிறது.

கோவையில் என்னை கண்காணிக்க சிறப்பு குழு உளவுத்துறை அமைத்திருக்கிறது. தமிழக உளவுத்துறை போலீசார் எனது செல்போனை ஒட்டு கேட்கின்றனர். என் மனைவி, என் சகோதரி, என் நண்பர்கள் செல்போனை ஒட்டு கேட்கின்றனர். அதனை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிடம் தகவல் சொல்கிறார் ஐ.ஜி. பின்னர் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உளவுத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

தெலுங்கானாவில் செல்போனை ஒட்டுக்கேட்ட உளவுத்துறையினர் சிறையில் உள்ளனர். அங்கு உளவுத்துறை ஐ.ஜி.,யாக இருந்தவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறை செல்வார்கள். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top