தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி: மேட்டுப்பாளையத்தில் அண்ணாமலை பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைத்துக் கொண்டிருக்கிறார் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் இன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில்  நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். கோவை தொகுதியில் அண்ணாமலையும், நீலகிரி தொகுதியில் எல்.முருகனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தாமரை மாலை அணிவித்து பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் பேசிய தலைவர் அண்ணாமலை; பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைக்கிறார். ஒரு பறவை போல் பாசமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். உலகில் எங்கு சென்றாலும், தமிழ் மொழி குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். அடுத்த 7 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 7 நாட்கள் பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம். 5 ஆண்டு நமக்காக பிரதமர் மோடி உழைப்பார். மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக சென்று திமுகவின் ஊழலை சொல்லுங்கள் என பாஜகவினரை கேட்டுக்கொண்டார்.

உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டினார். கடுமையான உழைப்பாளி என்பதால் ஓய்வின்றி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்தித்து வருகிறார். 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என தமிழக மக்கள் மோடியை ஆசீர்வதிக்க வேண்டும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் நரேந்திர மோடி.

திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது. கருணாநிதியின் மகள் கனிமொழி, தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி, முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கே.என். நேருவின் மகன் அருண் நேரு, பொன்முடியின் மகன் சிகாமணி வாரிசுகள்தான் எம்பியாக இருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா?, ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.

திமுகவின் அப்பாக்கள் அமைச்சர்கள், மகன்கள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அவர்களுக்கு பிரச்சாரம் செய்வது முதல்வரின் மகன் உதயநிதி. 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ராசா. அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார்.

543 எம்.பி.க்களில் மோசமானவர் ராசா:

திமுக கூட்டணி வைத்த காங்கிரஸ் அரசாங்கத்தாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதிலும் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற 543 எம்பிக்களில் மிக மோசமான எம்பி ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது.

திமுக என்ற கூட்டத்திற்கு தலைவரான ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது பிடிக்கவில்லை. தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் மோடி. நாட்டில் செயல்படாத அரசுக்கு தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் என்றால் அது திமுக அரசுக்குதான் கொடுக்க வேண்டும்.
திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது போதைப் பொருள் விற்பனையில் இருந்து வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். நம் மீது உள்ள பாசத்தால் பிரதமர் மோடி வேடந்தாங்கல் பறவை போல் நம்மை பார்க்க வந்துள்ளார். கோபாலபுரத்தில் பெருச்சாளி போல் ஒளிந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்பது அவருடைய குடும்ப நலனிற்காகவா? அவருடைய சுயநலத்திற்காகவா? அவருடைய உற்றார் உறவினரின் நலனிற்காகவா? என்றால் இல்லை. மோடி இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. எனவே பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றால் ,நாம் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top