பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் கட்சி திமுக. திமுக கொடுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வாங்கி நம் வீட்டுப் பெண்கள் மேக்கப் போடுகிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் பேசுகிறார். இதுதான் இவர்கள் பெண்களை மதிக்கும் லட்சணமா என கரூரில் தலைவர் அண்ணாமலை பேசினார்.
கரூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக செந்தில்நாதன் களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக நேற்று மதியம் (ஏப்ரல் 04) தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கரூர் பாராளுமன்றத் தொகுதி குஜிலியம்பாறை பகுதியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பெரும் திரளெனக் கூடி ஆதரவு தெரிவிக்கும் உங்கள் மத்தியில், கரூர் பாராளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர், கரூர் மாவட்ட பாஜக தலைவர் அண்ணன் செந்தில்நாதன் அவர்களுக்கு, தாமரை சின்னத்தில் வாக்குக் கேட்டு வந்துள்ளேன்
கரூர் பாராளுமன்றத் தொகுதி, கிராமங்கள் அதிகம் இருக்கும் பகுதி. வளர்ச்சி என்பது, அத்தனை கிராமங்களையும் சென்றடைய வேண்டும். அனைவருக்கும் வளர்ச்சி வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள அத்தனை நலத்திட்டங்களும், கரூரின் அத்தனை கிராமங்களையும் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், தொகுதி பக்கம் வந்ததே இல்லை. வேலையே செய்யாத பாராளுமன்ற உறுப்பினராக, ஐந்து ஆண்டுகளை வீணடித்துள்ளார். மீண்டும் அவரைத் தேர்ந்தெடுக்கும் தவறை, கரூர் மக்கள் செய்யமாட்டார்கள்.
கரூர் மக்கள் இந்த முறை வளர்ச்சியின் பக்கம். நமது பிரதமர் மோடி அவர்களின் பக்கம். கடந்த பத்து ஆண்டுகளில் நமது பிரதமர் அவர்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என நான்கு ஜாதிகள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். சுமார் 80,000 விவசாயிகளுக்கும் மேல், வருடம் ரூ.6,000 என, ஐந்து ஆண்டுகளில், ரூ.30,000 வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தியுள்ளார். சுமார் 60,000 கோடி நிதி, நூறு நாள் வேலைத் திட்டத்தில், பொதுமக்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 12,500 குடும்பங்களுக்கு, மோடி வீடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொதுமக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளனவா என்பதைக் கவனிக்கவும், வீடுகள் இல்லாத எளிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கவும், அனைத்து கிராமங்களுக்கும் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்கவும், மக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.
நமது அண்ணன் செந்தில் நாதன் அவர்கள் மட்டும்தான், மத்திய திட்டங்களை நிறைவேற்றவும், அனைத்து மக்களுக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் முழுமையாகச் சென்றடையவும் உழைக்கும் ஒரே வேட்பாளர். திமுக, கடந்த 33 மாதங்களாக நிறைவேற்றாத திட்டங்களை, இனியும் நிறைவேற்றப் போவதில்லை. இந்தத் தேர்தலில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 400 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. அவர் கொண்டு வரும் மக்களுக்கான திட்டங்களை, துளி கூட ஊழல் இல்லாமல் மக்களுக்கே கொண்டு சேர்க்க, கரூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அண்ணன் செந்தில்நாதன் அவர்கள் வெற்றிபெற வேண்டும்.
திமுக பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் கட்சி. திமுக கொடுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வாங்கி, நம் வீட்டுப் பெண்கள் மேக்கப் போடுகிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் அவர்களது மகன் கதிர் ஆனந்த் பேசுகிறார். இதுதான் இவர்கள் பெண்களை மதிக்கும் லட்சணம். நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குடும்பத்தில், ஏழை எளிய மக்கள், விவசாயிகள் என நாம் அனைவரும் இருக்கிறோம். நம் அனைவரின் வளர்ச்சிக்காக நமது பிரதமர் அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தில், மகன், மருமகன், என அவரது குடும்ப உறுப்பினர்கள் வளர்ச்சிக்காக மட்டுமே உழைக்கிறார். எனவே, திமுகவுக்கு அளிக்கும் வாக்குகள், மக்களுக்கு எந்தக் காலத்திலும் பயன்படாது.
அண்ணன் செந்தில்நாதன் அவர்கள், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதும், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்தின், தாய்க்கிராமத்திலும், நமது குழந்தைகள், இளைஞர்களுக்காக, மத்திய அரசின் சார்பில் ஒரு விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுப்போம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக, வழங்கும் இரண்டு நவோதயா பள்ளிகளை, நமது கிராமப்புற மாணவர்களுக்குப் பயன்படும் வண்ணம் கொண்டு வருவோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஆகும் ரூ.88,000 ரூபாய் கல்விச்செலவு, கர்மவீரர் காமராஜர் அவர்களது பெயரில், முழுவதுமாக இலவசமாக வழங்கப்படும். தொழில்துறைகள் வளர்ச்சி பெற முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் லஞ்சம் அளிக்காமல் செல்ல, கரூர் வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, தொழில்துறை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் வாழ்வு செழித்திட, தரமான கல்வி பெற்று நமது குழந்தைகள் எதிர்காலம் சிறந்திட, வரும் 2026 ஆண்டு, தமிழகத்தில் பாஜக ஆட்சியில் டாஸ்மாக் மூடப்பட்டிட, கரூர் பாராளுமன்றத் தொகுதி மக்கள் அனைவரும், கட்சி வேறுபாடின்றி, நமது பாரதப் பிரதமரின் சின்னம், வளர்ச்சியின் சின்னம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சின்னம், ஏழை எளிய மக்களின் சின்னமாம் தாமரை சின்னத்தில் வாக்களித்து, மண்ணின் மைந்தன் அண்ணன் செந்தில்நாதன் அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.