நொய்யல்  நதியை மீட்டெடுக்க 970 கோடி ஒதுக்கியவர் பிரதமர் மோடி: கோவை பிரச்சாரத்தில் அண்ணாமலை!

நொய்யல் நதியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி, 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார் என நேற்று (ஏப்ரல் 02) கோவை மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இடையார்பாளையம், கொங்கு நாடு கல்லூரி, அப்பநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை;

கடந்த 2014 ஆம் ஆண்டு, 289 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதன்முறையாகப் பிரதமர் பொறுப்பேற்ற நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2019 ஆம் ஆண்டு, 303 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்றார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400 பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மீண்டும் பாரதப் பிரதமராக பொறுப்பேற்பார் என்பது, குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் அறிந்த உண்மை.

இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாகப் பொலிவிழந்து இருக்கும் கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க, நீர் நிலைகளைச் சீரமைத்து தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய, தொழிற்சாலைகள், விவசாயிகள், தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்க்க, கோவையின் சாலை வசதிக்கு, ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு, மேம்பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, கோயம்புத்தூர் மக்கள், பாதுகாப்பாக, நிம்மதியாக வசிக்க வேண்டும் என்பதற்காக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிப் பார்வையில் நமது கோவை என்றும் இருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நொய்யல் நதியை மீட்டெடுக்க, நமது பிரதமர் மோடி அவர்கள், 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். கோவை மக்கள் அன்பையும் ஆதரவையும் பெற்று, பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றதும், அந்தப் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதனைக் கண்காணித்து, நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.

ஜூன் 4, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த தினத்திலிருந்து நூறு நாட்களுக்குள், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். கல்லூரிகள் நிறைந்த கோவையில், நமது இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கு, நமது கண் முன்னால் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

எனவே, போதையில்லா கோயம்புத்தூர் நகரை உருவாக்குவோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட முதல் படியாக, இந்தத் தேர்தல் அமையும். தாமரைக்கு விழும் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்துக்குத் திமுக வேண்டாம் என்பதைச் சொல்லும் வாக்குகள்.

கோயம்புத்தூருக்காக, கோயம்புத்தூர் பொதுமக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பினை உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலைக்கு வழங்குமாறும், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்காகவும், கோவையின் வளர்ச்சிக்காகவும் கோவை நாடாளுமன்றத் தொகுதியின், வாக்குப் பதிவு எந்திரத்தில் முதலில் இருக்கும் நமது தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி அனைவரும் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலையாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top