ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்: பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராக பெரும் போரை மேற்கொண்டு வருகிறேன்; ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கைதானார்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நான் வறுமையில் வாழ்ந்தவன் என்பதால், ஏழைகளின் வேதனையையும் வலியையும் என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடியும். எனவேதான் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், ஏழை மக்களின் ஒவ்வொரு கவலைக்கும் தீர்வுகாணும் திட்டங்களை கொண்டுவந்தேன். ஏழைகளுக்கு அதிகாரமளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சுயமரியாதையையும் மீட்டு உள்ளோம்.
வரும் மக்களவைத் தேர்தலானது, ஒரு அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அல்ல. அது, வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான தேர்தல்.

பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை நாங்கள் வகுக்கத் தொடங்கிவிட்டோம். ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாள்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சிக்கான முன்னோட்டத்தை மட்டுமே நாடு கண்டிருக்கிறது. இனி கூடுதல் வேகத்துடன் முன்னேற வேண்டும். நாட்டில் ஊழலுக்கு எதிராக பெரும் போரை மேற்கொண்டு வருகிறேன். அதனால்தான் ஊழல்வாதிகள் பலர் சிறையில் உள்ளனர். உச்சநீதிமன்றத்தை அணுகியும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

ஊழலை வேரோடு அழிக்க உறுதிபூண்டுள்ள பாஜக கூட்டணிக்கும், ஊழல் தலைவர்களை பாதுகாக்கும் இ.ண்.டி. கூட்டணிக்கும் இடையிலான போட்டிதான் தற்போதைய தேர்தல். ஊழல் அகற்றப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

ஊழல்வாதிகளுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்; என்னை நீங்கள் எவ்வளவு விமர்சித்தாலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை நான் நிறுத்தப் போவதில்லை. ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். நாட்டை கொள்ளையடித்தவர்கள் அந்தப் பணத்தை திருப்பி தந்தாக வேண்டும். இதுவே மோடியின் உத்தரவாதம்.

இக்கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் ஜெயந்த் சௌத்ரி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி, மீரட் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும் ராமாயணம் தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமடைந்தவருமான நடிகர் அருண் கோவில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top