பிரதமர் மோடி வந்த பிறகு தான் மலைவாழ் மக்களுக்கு அனைத்து வசதிகளுமே கிடைத்தன என கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை இன்று கோவை ஆனைகட்டி பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:
இந்தியாவின் முதல் குடி பழங்குடியின இனம் தான். பழங்குடியின மக்களுக்காக பிரதமர் மோடி பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மத்திய அரசின் நிதி மட்டுமே மலைப்பகுதிகளுக்கு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு தான் மலைவாழ் மக்களுக்கு அனைத்து வசதிகளுமே கிடைத்தன.
பழங்குடியின இனத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை இந்தியாவின் முதல் குடிமகளாக, குடியரசு தலைவராக அமர்த்தி கவுரப்படுத்தியது பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு தான். மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் பாதுகாவலராக இருந்து வருகிறார்.
பழங்குடியின குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏகலைவா பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியிலும் அந்த பள்ளி வர வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆனைகட்டி பகுதிக்கு மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தேர்தல் கவுன்சிலர் யார்? பஞ்சாயத்து தலைவர் யார்? முதலமைச்சர் யார்? என்பதற்கான தேர்தல் அல்ல. இது பிரதமருக்கான தேர்தல். டெல்லியில் யார் ஆட்சி அமைந்தால் நல்லது நடக்கும் என்பதற்கான தேர்தல். எனவே மக்கள் யோசித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 400 இடங்களை தாண்டி வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக பிரதமராக ஆட்சியில் அமர வேண்டும். 100 சதவீதம் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் இங்கு கிடைக்க வேண்டும். மோடி பிரதமராக வந்தால் தான் நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்.
இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி மலைப்பகுதி தான். நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஆக்சிஜன் கொடுப்பவர்கள் நீங்கள் தான். இங்குள்ள ஒவ்வொரு மரமும் வைரத்திற்கு சமம். அனைவரும் இந்த பகுதியை தேடி தான் வருவார்கள்.
செங்கல் சூளை பிரச்சனையில் தி.மு.க. குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது. இதுதான் எப்போதும் அவர்களுக்கு வேலையாக உள்ளது. இது அவர்களுக்கு கைவந்த கலை. இந்த விவகாரத்தில் சுற்றுச்சுழல் அமைச்சரிடம் பேசி நிரந்தர தீர்வு காணப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் இந்த ஒரு வண்டி தான் டெல்லி செல்லும். மற்ற 2 வண்டிகளும் போகாது. அந்த வண்டிகள் லோக்கல் வண்டிகள். இங்கேயே தான் சுற்றி கொண்டிருக்கும்.
அவர்களுக்கு பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு என்று ஏகலைவா என்ற ஒரு பள்ளி இருப்பதே தெரியாது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என கேட்டுள்ளனர். இந்த ஒரு டாஸ்மாக்கை மட்டும் அகற்றுவது நமது நோக்கம் அல்ல. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்றி விட்டு, அதற்கு பதிலாக கள்ளுக்கடை திறக்கப்படும்.
தி.மு.க. 5 வருடம் மக்களை மறந்து விடுவார்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்களுக்கு மக்கள் ஞாபகம் வரும். தேர்தல் நேரத்தில் வந்து பணம் கொடுத்து கொடுத்து வெற்றி பெறுகின்றனர். மீண்டும் 5 வருடம் மக்களை மறந்து விடுகிறார்கள். எப்படியாவது வாக்கை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அதனை மக்களாகிய நீங்கள் உடைத்தெறிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.