சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி வந்த ஜாபர் சாதிக்கை சமீபத்தில் ராஜஸ்தானில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி ஜாபர் சாதிக்கை சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவருக்கு வெளிநாட்டில் உதவி செய்தவர்கள் என அனைவரின் விபரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.விசாரணையில் ஜாபர் சாதிக்கின் தொழில் குரு டத்தோ மாலிக் என தெரிய வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் உள்ள மீமிசல் கிராமத்தை சேர்ந்தவர்தான் டத்தோ மாலிக். இவரின் உண்மையான பெயர் அப்துல் மாலிக் தஸ்தகீர் ஆகும். அவரது உறவினர் மூலம் ஜவுளி கடை விற்பனையாளர் வேலைக்காக மலேசியாவுக்கு சென்றார். தற்போது மலேசியாவின் மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வருகிறார்.
சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு பணிகளில் ஈடுபடுவதை வாடிக்கையாக டத்தோ மாலிக் வைத்துள்ளார். அதாவது எந்த நாட்டு கரன்சியையும் எத்தனை கோடி என்றாலும் எப்போது கொடுத்தாலும், அதை கேட்பவர்களின் நாட்டினுடைய கரன்சியாக ஒரே நாளில் டெலிவரி செய்யும் அளவிற்கு முறைகேடாக பணப் பரிவர்த்தனை (ஹவாலா) செய்வதில் வல்லவர் என கூறப்படுகிறது.
ஹாவாலாவை தொடர்ந்து உலகமெங்கும் போதை பொருட்களை கடத்துவதிலும் மன்னனாக விளங்கி வருகிறார். அது மட்டுமின்றி திரைப்படங்களை மலாய் மொழியில் தயாரித்து வெளியிடும் தொழிலையும் செய்கிறார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், டத்தோ மாலிக்கும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜாபர் சாதிக் கின் கடத்தல் தொழிலுக்கு குரு டத்தோ மாலிக்தான் என்றும் சொல்லப்படுகிறது. இவரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.