திமுகவினர் கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்படும்: தாமரை மாநாட்டில் பிரதமர் மோடி சூளுரை!

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக அளிக்கப்படும் பணத்தை. கொள்ளையடிக்க விட மாட்டான். எந்தப் பணத்தை நீங்கள் கொள்ளையடித்திருக்கிறீர்களோ, அந்தப் பணம். திரும்ப வசூலிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் மக்களுக்காகவே செலவு செய்யப்படும் என சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (மார்ச் 4) நடந்த தாமரை மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தாமரை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது:

வணக்கம் சென்னை. ஒவ்வொரு முறையும் நான் சென்னைக்கு வரும் போதும் தமிழர்களால் எனக்கு சக்தி உண்டாகிறது. உயிர்ப்பும் துடிப்பும் நிரம்பியிருக்கும் இந்த நகரத்திற்கு வருவது மிக அருமையாக இருக்கிறது.  திறமைகள், வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளி சென்னை.  வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் நமது நோக்கத்தில், சென்னைவாசிகள் மிக முக்கியமான பங்கினை ஆற்றுவார்கள்.  

நண்பர்களே, எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவு மிகப் பழமையானது, நீங்கள் என் மீது பொழியும் அன்பும் கூட மிகவும் பழமையானது. ஆனால் இங்கே சில ஆண்டுகளாகவே நான் தமிழ்நாட்டிற்கு வரும் போது, சிலருக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது, வயிற்றில் புளியைக் கரைக்கிறது. காரணம் என்ன தெரியுமா? காரணம். பாஜகவுக்கு மக்களாதரவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்பது தான். இன்று, சென்னையிலே, மிகத் தெளிவாக இதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே, மோதி, வளர்ச்சியடைந்த பாரதத்தோடு கூடவே, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்கான உறுதிப்பாட்டையும் மேற்கொண்டிருக்கிறேன். நாம் மிக விரைவாக பாரதத்தை உலகின் மூன்று தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக ஆக்க வேண்டும்.   இதிலே தமிழ்நாட்டின், சென்னையின் பங்களிப்பு மிகப் பெரியது. பாரத அரசு, சென்னை போன்ற நகரங்களின் வளர்ச்சிக்காக, தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நமது அரசாங்கம் வாயிலாக, சென்னையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பான பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அது ஸ்மார்ட் நகரங்கள் திட்டமாகட்டும், குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கான அம்ருத் திட்டமாகட்டும், சென்னை மெட்ரோ மற்றும் சென்னை விமானநிலையத் திட்டங்களாகட்டும், சென்னைவாசிகளின் வாழ்க்கை மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக, நாம் வாழ்க்கை வாழ்வதில் சுலபத்தன்மை வேண்டும் என்பதன் பொருட்டு, பல திட்டங்களை முன்னெடுத்துச் சென்றிருக்கிறோம். சென்னை துறைமுகத்திற்கும் மதுரவாயிலுக்கும் இடையேயான இடைவழியை ஏற்படுத்தவும் கூட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.  

நண்பர்களே, ஒருபுறம் மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்திற்காக பணியாற்றி வருகிறது. ஆனால் மறுபுறத்திலோ, மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு, சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களின் கனவுகளை கண்டு கொள்ளவேயில்லை, அதைப் பற்றிய கவலையேதும் அவர்களுக்கு இல்லை. சில காலம் முன்பு தான் மிகப்பெரிய புயல் வந்தது.  சென்னைவாழ் மக்களுக்கு ஏகப்பட்ட துயரம் ஏற்பட்டது. ஏற்பட்டதா? சரிதானே?

ஆனால், திமுக அரசாங்கம், அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, அவர்களுடைய துயரத்தை மேலும்மேலும் அதிகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறது.   திமுகவைச் சேர்ந்தவர்கள் பெருவெள்ளப் பெருந்துயர்க்காலத்தில் வெள்ள மேலாண்மையைச் செய்வதில்லை,  மாறாக என்ன செய்கிறார்கள்? ஊடக மேலாண்மையைச் செய்கிறார்கள். ஊடகங்களை சரிகட்டுகிறார்கள். மக்களின் வீடுகளுக்குள்ளே வெள்ள நீர் நிரம்பியிருக்கிறது, ஆனால் இவர்கள் ஊடகங்களிலே என்ன சொல்லுகிறார்கள்? பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடுது, வெள்ளநீர் இல்லை, என்கிறார்கள். திமுக அரசாங்கத்திற்கு.. மக்களின் துக்கங்கள்-துயரங்கள் பற்றி எல்லாம் சுத்தமாக அக்கறை இல்லை. தமிழ்மக்களே, உங்களைப் பற்றியும் கவலையில்லை, தமிழ்நாட்டைப் பற்றியும் அக்கறையில்லை என்பது இதிலிருந்து நன்கு தெரிகிறது.

நண்பர்களே, பாஜகவின் மத்திய அரசு, புரிந்துணர்வு உடைய அரசாங்கம், ஏழைகளின் நலனையே கருத்தில் கொண்டு செயல்படும் மக்கள் அரசாங்கம். கொரோனா பெருந்தொற்றின் போது நாம் முதன்மையாக, ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்க, ஏழைகள் நலனில் அக்கறை கொண்ட நமது அரசு ஏற்பாடு செய்தது. தேசம் தனக்கென சொந்தமாக ஒரு தடுப்பூசியை உருவாக்கிய போது, அனைவருக்கும் இந்த தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று, ஏழைகள் நலனில் அக்கறை கொண்ட நமது அரசு தீர்மானம் செய்தது. தமிழ்நாடு சிறுகுறுநடுத்தரத் தொழில்கள் துறையில் முன்னணி மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். நமது சிறுகுறு நடுத்தரத் தொழில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, நமது அரசாங்கம், தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான சிறுகுறுநடுத்தரத் தொழில்களுக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன்வசதி அளித்தது.  

நண்பர்களே, பாஜகவின் மத்திய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், கச்சை கட்டிக் கொண்டு பணியாற்றி வருகிறது. இதன் பொருட்டு, பாரத அரசு, பல திட்டங்களின் தொகையை, நேரடியாக இங்கே பயனாளிகளுக்கு அனுப்பி வருகிறது.  இலட்சக்கணக்கான கோடி ரூபாய் ஆதாயங்கள், இப்போது நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைகின்றன என்பது தான், திமுகவிற்கு மிகப்பெரிய வருத்தம்.  என்ன சரியா? இன்று கழிப்பறைகளாகட்டும், எரிவாயு இணைப்பாகட்டும், குழாய்வழி குடிநீர் இணைப்பாகட்டும், இலவச ஆயுள்காப்பீடாகட்டும், சாலைகள், ரயில்வழிகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் என அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடந்தேறி வருகின்றன. இந்த வளர்ச்சித் திட்டங்களின் இலட்சக்கணக்கான கோடி ரூபாயைக் கொள்ளையடிக்க முடியாமல் இருக்கிறதே என்பது தான், திமுகவினருக்கு இருக்கும் பெரும் சிக்கல். இந்த விஷயத்தில். ஒரு குடும்பம் மொத்தமுமே, பயங்கர எரிச்சலில் இருக்கிறது. இந்த திமுக காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், பணம் தான் கிடைக்கவில்லை என்பதால், குறைந்தபட்சம் அதை நாங்கள் தான் செய்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்புகிறார்கள். என்னமோ ஒட்டறாங்கன்னு சொல்லுவாங்களே, என்ன ஒட்டிக்கறாங்க? ஆனால் ஐயோ பாவம்! இதிலும் கூட, அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நான் திமுக காரர்களுக்கு ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். மோதி. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக அளிக்கப்படும் பணத்தை. கொள்ளையடிக்க விட மாட்டான். எந்தப் பணத்தை நீங்கள் கொள்ளையடித்திருக்கிறீர்களோ, அந்தப் பணம். திரும்ப வசூலிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் மக்களுக்காகவே செலவு செய்யப்படும். இது மோதியளிக்கும் கேரண்டி -இது மோதியின் உத்திரவாதம்.

குடும்ப அரசியல் பேசும் கட்சிகள், தங்கள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றன.  நான் தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுகிறேன்.  குடும்ப அரசியல் கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில், 18000 கிராமங்களில், மின்சாரமே இருக்கவில்லை, தேசத்தின் இரண்டரை கோடிக்கும் அதிகமான வீடுகளில் இருள் சூழ்ந்திருந்தது. 21ஆம் நூற்றாண்டின் பெரிய சவால் என்று சொன்னால் எரிசக்தி பாதுகாப்பு, எனர்ஜி செக்யூரிட்டி என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று நமது அரசு, இந்தத் திசையில், மிக விரைவாகப் பணியாற்றி வருகிறது.  நான் இப்போது தான் கல்பாக்கத்திலிருந்து வருகிறேன், இங்கே எரிசக்தித் துறையில் தற்சார்பு நிலையை அடையும் திசையில் பாரதம் பெரிய அடியை முன்வைத்திருக்கிறது. இன்று கல்பாக்கத்திலே, தேசத்தின் முதல் மற்றும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஃபாஸ்ட் ப்ரீடர் அணு ஆலையானது, மின்சார உற்பத்திக்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையைக் கடந்திருக்கிறது. தொழில்நுட்ப மொழியிலே கூறினால், இன்று இந்த அணுசக்தி மையத்தில் கோர் லோடிங் தொடங்கி விட்டது. சில காலத்திலேயே, இதன் மூலம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு விடும். இந்த அணு உலை தொடங்கப்பட்டிருப்பதற்குப் பிறகு, பாரதம், இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கும் நாடுகளில் இரண்டாவது நாடாக ஆகி விடும்.  இந்தச் சாதனைக்காக, நான் பாரத நாட்டவர்கள் அனைவருக்கும், என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

நண்பர்களே, மனவுறுதிப்பாடு பெரிதாக இருக்குமானால், அதற்கேற்ப, நமது உழைப்பும் பெரிய அளவுடையதாக இருக்க வேண்டும்.  2024ஆம் ஆண்டின் தொடங்கி, சில வாரங்களே ஆகியிருக்கின்றன. ஆனால் இந்தக் காலகட்டத்தில், பாரதம் தனது எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்து கொள்வதில், பெரிய வீச்சில் செயல்பட்டு வருகிறது. சில நாட்கள் முன்பாகத் தான், நான் காக்ராபார் அணுசக்தி மையத்தில் நிறுவப்பட்டிருக்கும் 1400 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய ஆலைகளை தேசத்திற்கு அர்ப்பணித்து வந்திருக்கிறேன்.

இன்று தான் தெலங்கானாவின் பல ஆற்றல் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டன, திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன.  தெலங்காணாவில் 1600 மெகாவாட் அனல்மின் நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

ஜார்க்கண்டில் 1300 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதே உபியில், 300 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி ஆலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.  ராஜஸ்தானத்திலும் கூட பெரிய சூரியசக்தி ஆலைகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.  யுபியில், மிகப்பெரிய புதுப்பிக்கவல்ல எரிசக்திப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.  ஹிமாச்சலப் பிரதேசத்தில் புனல் மின் நிலையத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தேறியிருக்கிறது. சத்திஸ்கட்டிலே, ராய்பூரிலே, 4ஜி எத்தனால் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. யுபியிலே, நொய்டாவிலே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் நீர் மூலம், பசுமை ஹைட்ரொஜன் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் தமிழ்நாட்டிலே, பசுமை ஹைட்ரொஜன் எரிபொருள் வாயிலாக இயங்கும் கலம் தொடங்கப்பட்டது. யுபியிலே, மேரட்-சிம்பாவலி ட்ரான்ஸ்மிஷன் லைன்கள் கூட இந்த வேளையிலே தொடங்கப்பட்டிருக்கிறது.  கர்நாடகத்தின் கொப்பலில், காற்றாலை பகுதி தொடங்கப்பட்டிருக்கிறது.  

நண்பர்களே, பாரத அரசு வாயிலாக, ஒரு கோடிக் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கும், பிஎம். சூரியகர், சூரிய வீடுகள், இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு 75000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட இருக்கிறது. மின்சாரத்தோடு இணைந்த இத்தகைய பல திட்டங்கள், பாரதத்தை மின்சக்தித் துறையில் தன்னிறைவு உடையனவாக ஆக்கும். இவற்றிலே எல்லாம், தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கும்.

நண்பர்களே, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்ன சொல்கின்றன -குடும்பத்துக்கே முதல் உரிமை. என்ன, சரியா நான் சொல்றது? ஆனால் மோதி சொல்வது என்ன? தேசத்துக்கே முதன்மை நீங்கள் கூறுங்கள் சகோதர சகோதரிகளே, மோதி சொல்வது என்ன? தேசத்துக்கே முதன்மை. ஆகையினாலே தான் இண்டி கூட்டணியைச் சேர்ந்தவர்கள், என்னை வைய்ய, என்னை வசைபாட, ஒரு புதிய ஃபார்முலாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அடப் போய்யா, மோதிக்கு குடும்பம்லாம் கிடையாது, அதனால தான் இப்படியெல்லாம் பேசுறாரு என்று அவர்கள் கூறிவருகிறார்கள். என் உயிரினும் மேலான உறவுகளே, எனக்கு 16 வயதான போது, நான் வீட்டைத் துறந்தேன். நீங்கள் தான் என் குடும்பம், பாரதநாட்டின் மக்கள் தான் என்னுடைய குடும்பத்தார்.  

தேசத்தின் இளைஞர்கள் என் குடும்ப மக்கள், ஆகையால் தான், அவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமானதாக ஆக்க, நான் இரவுபகலாக, கடுமையாக உழைத்து வருகிறேன், என் சொந்தங்களே!!!  
இந்த தேசத்தின் சகோதரிகள், -தாய்மார்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான், மேலும் மேலும் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டி நான் பணியாற்றி வருகிறேன்.  
தேசத்தின் விவசாயிகள், தேசத்தின் ஏழை-பாழைகள் தாம் என் குடும்பச் சொந்தங்கள், ஆகையால் தான் அவர்களுக்கு அதிகாரப் பங்களிப்பு ஏற்படுத்தப்பட, அவர்களின் உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்க, நான் என்னை முழுமையாக அர்ப்பணித்து வருகிறேன்.  

யார், யாருமே இல்லாதவர்களோ, யார் நிராதரவாக இருக்கிறார்களோ, யார் அநாதைகளோ, அவர்களும் இந்த மோதியைச் சேர்ந்தவர்கள் தாம், மோதி அவர்களுக்குச் சொந்தமானவன்.  
என்னுடைய பாரதம் -என்னுடைய குடும்பம்.
ஆகையினால் தான், இன்று தேசம் முழுவதும், ஒரே குரலெடுத்துக் கூறுகிறது – நான், மோதியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்ன கூறுகிறது?
நான் தான் மோதியின் குடும்பம்,  
நான் தான் மோதியின் குடும்பம்.

காங்கிரஸ், திமுக மற்றும் இண்டிக்கூட்டணியோடு இணைந்திருக்கும் கட்சிகள், ஊழலில் ஊறிப்போயிருக்கும் குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகள். இவர்களுக்கு எல்லாம், இவர்களுடைய குடும்பம் தான் எல்லாம், ஊழல் தான் அனைத்தும். இண்டி கூட்டணியைச் சேர்ந்த ஊழல் தலைவர்களைப் பொத்திப்பொத்திப் பாதுகாக்கக் கூடிய ஒரு தீர்மானத்தை, இன்று உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

நண்பர்களே, உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவிற்குப் பிறகு, இண்டிக் கூட்டணிக்காரர்கள், கப்பல் கவிழ்ந்து விட்டதோ என்றவகையில் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.    ஏனென்றால், இண்டிக் கூட்டணிக்காரர்களுக்கு, லஞ்சம் வாங்குவதைத் தவிர, ஊழல் செய்வதைத் தவிர, தேசத்தின் அமைப்புக்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதைத் தவிர, வேறு ஒன்றுமே தெரியாது. பல தசாப்தங்களாக இந்த இண்டிக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எல்லாம், இப்படிப்பட்ட அரசியலை மட்டுமே செய்து பழகிப் போனவர்கள். இன்று, இதே நபர்கள் காரணமாகத் தான், தேசத்தின் இளைஞர்கள், அரசியல் பற்றியும், அமைப்புகள் மீதும் வெறுப்படைந்து இருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தூய்மையான அரசியலுக்கு, பெரும் உந்துசக்தியாக விளங்கும். என் நெஞ்சம் நிறை தமிழ்மக்களே, தூய்மை இயக்கம் என்பது, அது எப்படி இருந்தாலும் சரி, அது என் நெஞ்சுக்கு மிக நெருக்கமான ஒன்று என்பதை, நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள்.  

நண்பர்களே, குடும்ப அரசியலுக்கும், உழைப்பிற்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான தூரம். ஆகையினாலே தான், குடும்ப அரசியல் என்பது, தன்னுடன் கூடவே அகங்காரம், மமதை, திமிர்த்தனத்தை வெளிப்படுத்துகிறது. குடும்ப அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஒருவர், அதிகாரத்தின் முக்கியப் பதவியைப் பெறும் போது, தேசத்தையும், தேசத்தின் மக்களையும் அடிமைகளாக அவர் கருதுகிறார். தனது பதவிக்கென இருக்கும் மாட்சிமை, கண்ணியத்தையும் கூட அவர் மறந்து போகிறார், விளையாட்டாகக் கடந்து போகிறார். தேசத்தின் மிகப் பெரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றம், திமுக குடும்பத்தின் ஒரு அமைச்சரிடத்திலே, கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது என்பதையும் நாம் இன்று பார்த்தோம்.   கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்திக் காலில் போட்டு மிதித்து அவமானம் செய்வதும் கூட, குடும்ப அரசியல் நடத்துபவர்களின் இலட்சியம், அடையாளம்\ சகோதர சகோதரிகளே. தங்களுடைய அகங்காரம், மமதை காரணமாக, மக்களின் உணர்வுகளைக் கொஞ்சம் கூட மதிக்காத ஒருவர், இன்னும் கூட தமிழ்நாடு அரசின் முக்கியமான பதவியில் இடம் பெற்றிருக்கிறார், இது வருத்தமளிக்கும் விஷயம்.  

நண்பர்களே, நான் என்னுடைய உரையை நிறைவு செய்யும் முன்பாக என் மனதை அரிக்கும் ஒரு கவலையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழ்நாட்டிலே போதைப் பொருட்கள் தங்கு தடையில்லாமல் அங்கிங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கட்சி குறித்து, நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமானது.  நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால், தமிழ்நாட்டின் எதிரிகளின் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது, மோதி அளிக்கும் கேரண்டி -இது மோதியின் கேரண்டி.

நண்பர்களே, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பொருட்டு, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.  
வளர்ச்சியடைந்த தமிழ்நாடு ஏற்படும் போது தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் பாதை வலுப்படும். நாம் வளர்ச்சியடைந்த பாரதத்தை உண்டாக்கியே தீருவோம்.  

இத்தனை பெரிய எண்ணிக்கையில் நீங்கள் உங்கள் ஆசிகளை அளிக்க வந்திருக்கிறீர்கள்.  உங்களுக்கு பலப்பல நன்றிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top