‘ககன்யான்’ சோதனை திட்டம் வெற்றி.. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியிருந்த நிலையில், இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு நமது பாரதம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டது.

இந்த திட்டத்துக்கான முதல் கட்ட சோதனை இன்று (அக்டோபர் 21) காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு 17 கி.மீ உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். அதை பாராசூட்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளது.

திட்டமிட்டப்படி வங்கக்கடலில் விழுந்த உடன் விண்கலத்தை கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் சோதனை முயற்சிக்கு பின் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 21) காலை 8 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராக இருந்த நிலையில், விண்கலம் செல்வதில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது சில சிக்கல் இருந்ததால் நேரத்தை 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும் 5 நிமிடங்களுக்கு முன்பாக இந்த சோதனை ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என இஸ்ரோ முடிவெடுத்து அதனை அறிவித்தது.

‘‘விண்கலம் மேலே செல்வது இயல்பாக நடக்க வேண்டும். இரண்டு முறை அதற்காக முயற்சித்தும் அது மேலே செல்லாததால், அதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முழுமையாக ஆய்வு செய்து அதன் பிறகு விரைவில் சோதனையை நாங்கள் துவங்குவோம். தற்போதைய நிலையில், ககண்யான் விண்கலம் பாதுகாப்பாக இருக்கிறது’’ என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விண்கலம் பகுதிக்குச் சென்று விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தினர். தொழில்நுட்ப சரிபார்த்தலுக்குப் பிறகு மீண்டும் சோதனை வாகனத்தை விண்ணில் ஏவும் பணி அடுத்த சில மணி நேரங்களில் நடைபெற்றது. அப்போது சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த தகவலை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்;

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானை நனவாக்குவதற்கு இந்த வெற்றி நம்மை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது. நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:

ககன்யான் TV-D1 விண்கலத்தின் சோதனை வெற்றியடைந்ததற்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். நமது முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு பாரதம் ஒரு படி நெருக்கமாக உள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக தீவிர முயற்சி செய்த அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் குழுவினருக்கும் பாராட்டுக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top