விடியாத ஆட்சியில் அனைத்திற்கும் மக்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம்தான் நடக்கிறது. பொதுமக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை ஒவ்வொரு தேவைகளுக்காகவும் இந்த ஆட்சியில் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

நேற்று (அக்டோபர் 17) மாலை என் மண் என் மக்கள் பயணம், ஆற்காடு நவாபின் கொடுமைகளில் ஆட்படாமல் வெளியேறிய குட்டியாண்டவர் கோவில் பூஜாரி புதியதாக உருவாக்கிய குருநாதசுவாமி கோவில் அமைந்திருக்கும் அந்தியூரில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்களால் சிறப்புற நடந்தேறியது.

இன்றும் குருநாதசுவாமி கோவிலில் ஆடி மாதத்தில் குலுக்கைப் பெட்டகத்தை திறக்கும் விழா தெய்வீகத் தன்மை நிறைந்ததாக உள்ளது. உலகப் புகழ்பெற்ற குதிரை சந்தை மற்றும் கால்நடைச் சந்தை, கோவில் திருவிழாவைத் தொடர்ந்துதான் அந்தியூரில் நடைபெறுகிறது. வெற்றிலை என்பது பாரத மரபில் மங்கலத்தின் அறிகுறி. வளம், செல்வத்தை குறிக்கும் அடையாளம். நன்மங்கலத்தை மட்டுமே பிறருக்கு தரும் ஊராக விளங்குவதால் அந்தியூர் ‘வெற்றிலை நகரம்’ என்றழைப்படுகிறது. அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வேண்டும் என்பது இந்த பகுதியின் வெற்றிலை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை, இது நிறைவேற பாஜக துணை நிற்கும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையிலான மத்திய அரசு, நமது ஈரோடு மஞ்சளுக்கு, புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தியது. மேலும் மத்திய அரசு புதியதாக அமைத்த ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தேசிய மஞ்சள் வாரியம், மஞ்சள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதியை முறைப்படுத்தி, மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி.

ஈரோடு மாவட்டத்துக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களால் லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். ஆனால் திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான அந்தியூரில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், மணியாச்சி, வரட்டுப்பள்ளம். வழுக்குப்பாறை ஆறுகளை இணைத்து அந்தியூர். அம்மாபேட்டை ஒன்றியங்களில் நீர்ப்பாசனம், வேதப்பாறை நீர்த்தேக்க திட்டம், அந்தியூர் அருகே பட்லூரி அணை, அந்தியூரில் தொழிற் பயிற்சி நிலையம், அந்தியூர் பவானி பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகள் பெருக்குவதற்காக தோணிமடுவு பாசனத் திட்டம் என ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. அந்தியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம். இவரால் இந்த மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம், வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை, ஈரோடு வர்த்தக மையம், தீரன் சின்னமலையின் தளபதியான பொல்லானுக்கு ஈரோட்டில் சிலை, நெசவாளருக்கென்று தனி கூட்டுறவு வங்கி என ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

மாறாக, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம்தான் நடக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம், சம சம்பளம் கேட்டு ஆசிரியர்கள் போராட்டம், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக்கோரி சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், லாரி உரிமையாளர்கள் போராட்டம் என திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதற்கு மாறாக அனைத்துத் துறையிலும் விலையேற்றம் காரணமாக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பால் விலை 25 சதவீதம் உயர்வு, பால் பொருள்கள் விலை வரலாறு காணாத உயர்வு, ஆவின் நெய் விலை உயர்வு, மின்சார கட்டணம் 15 முதல் 50 சதவீதம் வரை உயர்வு, சொத்துவரி 50 சதவீத உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் 60 முதல் 500 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு. வாக்களித்த மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு, அனைத்திலும் விலை உயர்வு மட்டுமே.

இந்த மக்கள் விரோத திமுக கூட்டணிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்க, தமிழகத்திலிருந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக 39 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top