தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் வசமாக சிக்கினார்: ரெய்டில் கட்டுக் கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கின!

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 5 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாண பணம், ஆவணங்கள் சிக்கியிருப்பதாகத்  தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் மீதான சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு புகாரில் அவரது ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக அவர் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள்,  வீடுகளில் வருமான வரித்துறை மீண்டும் சோதனையை ஆரம்பித்தது.

ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவக் கல்லூரிகள், நட்சத்திர ஓட்டல், பினாமி வீடுகள், உறவினர்கள் வீடு, அலுவலகம் என அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறை அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஐந்தாவது நாளாக இன்றும்  அவர் தொடர்புடைய இடங்களில்  (அக்டோபர் 9) சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. பல இடங்களில் சோதனை ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாற்றில் உள்ள அவரது வீடு, தி. நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், பாரத் பல்கலைக்கழகம், பாலாஜி மருத்துவக் கல்லூரி, சவீதா கல்வி குழுமம் ஆகியவற்றிலும் சோதனை தொடர்ந்து நடக்கிறது.

இந்த சோதனையில் என்னவெல்லாம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த வருமானவரித்துறை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து 2 பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த கருப்பு நிற பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல்கள்  வெளியாகி உள்ளன.

5-வது நாளாக தேடியும் எதுவும்  கிடைக்கவில்லை என திமுகவினர் வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் சொல்லிக் கொண்டாலும், தோண்டத் தோண்ட புதையல் வந்து கொண்டிருப்பது போல் பரிவர்த்தனை ஆவணங்களும், சொத்துப் பத்திரங்களும், ரூபாய் நோட்டுகளும் வந்து கொண்டிருப்பதாக மற்றொரு தரப்பு தெரிவிக்கிறது.  ஜெகத்ரட்சகன் அண்ணன் வசமாக மாட்டிக்கொண்டார் என அண்ணனின் தம்பிகள் வருத்தத்தில் உள்ளனர்.  வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்த பின்னர் என்னென்ன பூதங்கள் கிளம்ப போகின்றனவோ, பிரச்சனைகள் வெடிக்க போகின்றனவோ என்று திமுக தரப்பு அச்சத்தில் உள்ளது. இது எங்கு போய் நிற்கும் என்பது இப்போது அவர்களது அச்சம்! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top