ஆளுநரை அவதூறாக சித்தரித்து திமுக போஸ்டர்: போலீசிடம் பா.ஜ., புகார்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அவதூறாக சித்தரித்து திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றிருந்தார். கோவை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஆளுநர் பழனி சென்றார். 

கோவையில் இருந்து ஆளுநர் பழனி செல்வதை அறிந்த பொள்ளாச்சி நகர்  திமுகவினர் ஆளுநரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டினர். ‘போஸ்ட்மேன்’ உடையில் ஆளுநரை சித்தரித்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அந்த போஸ்டர்கள் மறைக்கப்பட்டன.

திமுகவினரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் கூடுதல் எஸ்.பி., பிருந்தாவிடம் புகார் அளித்தனர்.

இது பற்றி பா.ஜ., மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறியதாவது: பொள்ளாச்சியில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டப்பட்டது. பிரதமரை இழிவுபடுத்தியும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் போஸ்டர் ஒட்டிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. எனவே இது சம்மந்தமாக ஆளுநரை சந்தித்து முறையிட இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top